Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விமான விபத்தில் தலைமை தளபதி பலியாகியிருக்கலாம்- விரிவான தகவல்கள்!

தமிழ்நாட்டின் குன்னூர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்த ராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் அவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவுக்கு என்று ஒருங்கிணைத்த தலைமைத் தளபதி பதவி கிடையாது. கடற்படை, தரைப்படை, விமானப்படை என முப்படைகளுக்கும் தனித் தனி தலைமைத் தளபதிகளே இருந்து வந்தனர். இதை மாற்றிய மோடி அரசு 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை நியமித்தார். இவர்தான் சுதந்திர இந்தியாவின் முதல் முப்படைகளுக்குமான தலைமைத் தளபதியாக இருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ராணுவ தலைமை தளபதியும் அவரது மனைவியும் கோவை வந்து அங்கிருந்து சூலூர் வழியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் செல்ல திட்டமிட்டிருந்தாகவும் அப்போது ராணுவ அதிகாரிகளும்  உடன் சென்றதாக கூறப்படுகிறது.பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் எல்.எஸ்.லிட்டர் ஹர்ஜிந்தர் சிங், பாதுகாவலர்கள் குர்சேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, சத்பால் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பயணித்த விமானம் எம்.ஐ. 17 வி 5 வகை விமானம் ஆகும் இது ரஷ்ய தயாரிப்பு விமானம் சுமார் 3 டன் எடை கொண்ட அதி நவீன விமானத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த நிலையில்  

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி என்ற இடத்தில் விமானம் விழுந்து  நொறுங்கியது.

கடும் மேகமூட்டம், பனி மூட்டம் காரணமான மலை மீது மோதி இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை. காரணம் அந்த அளவுக்கு உடல்கள் கருகி சிதைந்துள்ளது. பிபின் ராவத் அவரது மனைவி இருவரும் இந்த விமான விபத்தில் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால் இது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மாலை குன்னூர் வருகிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குன்னூர் விரைவிகிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இந்த விபத்தில் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சம்வப இடத்திற்கு விரைந்திருக்கிறார்.

Exit mobile version