Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விமல் வீரவன்சவின் பெருந்தேசிய வாதமும் சீமானின் தமிழ்த் தேசியமும்

தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்படுவது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பது அரசாங்கத்திற்கு புரியவில்லையா? அல்லது நீங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் அல்லவென தமிழ் மக்களுக்கு அரசாங்கம் செய்தி விடுக்கின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது தடைசெய்யப்படுவது தொடர்பில் எழுந்துள்ள தேவையற்ற சர்ச்சைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதற்கு எதிராக அமைச்சரவையில் நடைபெற்ற கருத்து பரிமாற்றம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதை தடைசெய்வது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து பரிமாறப்பட்டது உண்மையாகும்.

ஆனால் இது தொடர்பில் அரச நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் அனுப்பப்படுவதற்கு இறுதி முடிவெடுக்கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்கவேண்டும்.

இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும் கூட இத்தகைய முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதே தமிழ் பேசும் மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.

அமைச்சரவையில் இவ்விவகாரம் பேசப்பட்டப்பொழுது தமிழிலும், தேசிய கீதம் பாடப்படுவது தொடரவேண்டும் என்ற கருத்துகளை தெரிவித்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன ஆகியோரை நாம் பாராட்டுகின்றோம்.

அதேவேளையில் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ் பேசும் சமூகங்களைச் சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டார்களா என்பதையும், கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தார்களா என்பதையும் அறிந்துகொள்வதற்கு தமிழ் பேசும் மக்கள் ஆவலாக இருக்கின்றார்கள்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் இரண்டு மொழிகளிலும் பாடப்படுவதில்லை என்று கூறுவதே அடிப்படையில் ஒரு தவறான தகவலாகும்.

உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றான கனடாவில் தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் உத்தியோகப்பூர்வமாக பாடப்படுகின்றது.

ஆரம்பத்தில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கனடிய தேசிய கீதம் பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை தடுக்கும் முகமாக எமது அயல் நாடான இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் தேசிய கீதம் அந்நாட்டின் பெரும்பான்மையினர் பேசும் மொழியான ஹிந்தி மொழியில் பாடப்படுவதாக இவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

இது இவரது பெரும்பான்மை வாதத்தையும், அறியாமையையும் காட்டுகின்றது. உண்மையில் இந்தியாவின் தேசிய கீதம் வாங்களா மொழியில் பாடப்படுகின்றது. இந்தியாவின் சனத்தொகையை மொழி ரீதியாக வரிசைப்படுத்தினால், முதலில் இந்தியும், அடுத்து தெலுங்கும், மூன்றாவதாக தமிழும் இருக்கின்றன.

நான்காவதாக அதிகம் பேர் பேசும் வங்காள மொழியில் அமைந்துள்ள தேசிய கீதத்தை அனைத்து இந்தியர்களும் பாடுவது இந்தியாவின் பெருமையாகும்.

இந்தியாவில் 15 இற்கும் மேற்பட்ட தேசிய மொழிகள் இருக்கின்ற காரணத்தினால் அனைத்து மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படுவது சாத்தியம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் இரண்டே மொழிகளை கொண்டுள்ள இலங்கையில் இது நீண்டகாலமாகவே சாத்தியமாகியுள்ளது. இந்த பெருமைக்குரிய விடயத்தை தகர்த்து எறிந்து இந்த அரசாங்கம் எத்தகைய தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகின்றது என்பது கடளவுக்குத்தான் வெளிச்சம். இதை இந்நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
இதே வேளை தேசிய கீதம் குறித்து சீமானின் உணர்ச்சியூட்டும் அறிக்கைகள் உலாவருகின்றன. உணர்ச்சி அரசியல் பல ஆயிரம் மக்களைப் பலிகொண்டிருக்கிறது என்பதை சீமான் போன்ற தமிழ் இன வாதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்திய மக்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான அரசியல் வழிமுறையும் , ஈழ விடுதலை அதற்கு எவ்வாறு பயன்படும் என்பதையும் அதனைப் பலப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பேச வேண்டிய முக்கியமான காலப்பகுதியில் வாழ்கிறோம்

Exit mobile version