I
பன்னிரெண்டு வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரும் தர்ஷிகா எனும் 24 வயது இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது பீட்டி ஆம்ஸ்டட் இயக்கிய நார்வேஜிய விவரணப்படமான எனது மகள், பயங்கரவாதி (My Daughter,Terrorist-2007). தர்ஷிகா ஒரு கரும்புலியாக இருக்கிறவர். கரும்புலிகள் வாழ்வைப் பற்றிச் சொல்லும் முதல் விவரணப்படம் என இப்படத்தினைக் குறிப்பிடுகிறார் இயக்குனர். இந்த விவரணப் படத்தினை நோர்வே பிலிம் இன்ஸ்டிட்யூட் தயாரித்திருக்கிறது.
1983 ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமாகிறபோது தர்ஷிகாவிற்கு இரண்டு வயது. குண்டுவீச்சுக்கள், சாவுகள் பேரழிவுகளினிடையில் அவளால் பள்ளிக் கூடம் போக முடிவதில்லை. தர்ஷிகாவின் கண்முன்பாகவே அவளது குடும்பம் கலைந்து போகக் காண்கிறாள். அவளது பதினோறு வயதில் தபால் ஊழியரான தந்தை இலங்கைப் படையினரின் குண்டு வீச்சுக்கு ஆளாகி மரணமாகிறார். போரினிடையில் அகப்பட்ட அவளையும் அவளது சகோதரனையும் விடுதலைப் புலிப்போராளிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்கிறார்கள்.
II
விவரணப்படம் மூன்று பெண்களின் கதையாக வளர்கிறது. தர்ஷிகா சொல்லத் துவங்க, அவளது அன்னை வந்து இணைந்து கொள்கிறார். தர்ஷிகாவின் சக கரும்புலித் தோழியும் தனது கதையைச் சொல்கிறாள். கன்னியாஸ்திரியாகப் போய் இயேசுவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தர்ஷிகாவின் ஆசை. ஆவளது தாய் சொல்கிபடி அவர்களையும் போரையும் பிரித்துப் பார்க்க முடியாது. போரினுள்தான் அவர்கள் இருக்கிறார்கள். வறுமை, உயிராபத்து, பிரிவு, மரணம் போன்றவற்றின் இடையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். இயக்கத்தின் இலக்குகளாலும் கட்டுப்பாடுகளாலும் கடப்பாடுகளாலும்தான் தர்ஷிகா வழிநடத்தப்படுகிறாள்.
அவளுக்கு எதிரி யார் என்பது திட்டடவட்டமாகத் தெரிகிறது. எவர் துரோகி என்பது குறித்து இயக்கத் தலைமையால் அவள் கற்பிக்கப்படுகிறாள். ‘தான் எத்தனை பேரைக் கொன்றேன் என்கிற எண்ணிக்கை தெரியாவிட்டாலும், தான் நிறையப் பேரைக் கொன்றேன்’ என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். ‘ஒருவரால் பாரிய அளவில் மக்கள் மரணமுறுவார்கள் எனக் கண்டால், அந்த ஒருவர் துரோகி எனத் திட்டவட்டமாகத் தெரிந்தால், அந்தத் துரோகியை தாம் சுடுவோம்’ என்கிறார்கள் தர்ஷிகாவும் அவளது தோழியும். அவர்களுக்கு அதில் தயக்கமேதும் இல்லை. அவர்கள் ‘செய்கிற நல்லது கெட்டது என அனைத்தும் தலைமைக்குச் சென்றே மீளும்’ எனும் அவர்கள், ‘தமது தலைவர் தவறான வழிகாட்டுதல்களை ஒரு நாளும் செய்யமாட்டார்’ எனவும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.
‘தம்மைப் பற்றி வெளியுலகத்தவர்களுக்கு அதிகம் தெரியாததால் தம்மைப் பயங்கரவாதிகள் என்கிறார்கள்’ என்கிறாள் தர்ஷிகா. ‘வெகுமக்களையும் அப்பாவிகளையும் கொல்லும் இலக்குகளைத் தலைவர் தேர்வு செய்யமாட்டார்’ எனவும் அவள் தெரிவிக்கிறாள்.
தர்ஷிகா பயங்கரவாதம் குறித்தும், வெகுமக்கள் சாவு குறித்தும் சொல்லிக் கொண்டிருக்கும் போது மூன்று தற்கொலைத் தாக்குதல் நிகழ்வுகள் இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. சந்திரிகா குமாரணதுங்காவின் மீதான தாக்குதலில் அவர் உயிர் தப்பிப் பிழைக்கிறார். இலங்கை விமானநிலையத் தாக்குதலில் 16 விமானங்கள் அழிந்து போகின்றன. இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் பாரிய அளவிலான தற்கொலைத் தாக்குதல் கொழும்பு தேசிய வங்கி மீதான தாக்குதல் என்கிறது விவரணப்படம். 90 வெகுமக்கள் அந்தச் சம்பவத்தில் மரணமுறுகிறார்கள்.
எந்தவிதமான சந்தேகமும் அற்று அது வெகுமக்கள் மேல் இலக்கு வைத்துச் செய்யப்பட்ட, வெகுமக்களைப் பீதியூட்டும் தாக்குதல் எனத் தெரிகிறது. காயம்பட்டவர்கள் இரத்தக் காயத்துடன், அழுகுரலுடன் நகரந்து கொண்டிருக்கும் காட்சியின் ஊடே, ‘தலைவர் வெகுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதலை ஒரு நாளும் செய்யமாட்டார்’ எனத் தர்ஷிகா சொல்வது காட்சியாகிறது.
III
விவரணப்படத்தின் சொல்நெறி இரண்டு விதங்களில் செயல்படுகிறது. போராளித் தோழிகளுக்கு இடையிலான பிணைப்பையும், அன்பையும் பாசத்தையும் ஒரு மட்டத்தில் வெளியிடும் படம், பிறிதொரு மட்டத்தில் தாய்க்கும் மகளுக்குமான ஜீவாதாரமான உறவையும் பிரிவையும் கண்ணீரின் இடையில் சொல்லிச் செல்கிறது. ஈழமக்கள் தம்மீது இலங்கை அரசினாலும், இலங்கைப் படையினராலும் சுமத்தப்பட்ட அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் பேரழிவுக்கும் எதிராகவே போராடப் புறப்பட்டார்கள் என்கிற செய்தியையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்தின் பின்னணியான சமூக வேர்களையும் துயர்களையும் அலசும் திரைப்படம், பயங்கரவாதம் ஏற்படுத்தும் மானுடத்தின் துயரவிளைவுகளையும் ஆவணப்படுத்தவே செய்கிறது. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் போராளிகளுக்கும் தலைமைக்குமான உறவும், தலைமையையும் தலைவரையும் வழிபாட்டு நோக்குடன் அவர்கள் ஏற்கும் மனஅமைவையும் விவரணப்படம் சுட்டிக்காட்டவே செய்கிறது. எதிரிகள், துரோகிகள், தாக்குதல்கள் என அனைத்தும் தொடர்பான அவர்களது செயல்பாடுகள் தலைவர் எனும் திருவுருவின் மீதான பக்திச் செயல்பாடாகவே விவரணப்படத்தில் விளக்கப்படுகிறது.
IV
இரண்டு வயதிலிருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் தர்ஷிகா, பதினோரு வயதில் நேரடியாகத் தனது குடும்பத்தில் மரணத்தை எதிர்கொள்கிறாள். இலங்கைப் படையினர்தான் தனக்கும் தன்னைச் சுற்றிலுமுள்ள மனிதர்க்கும் பேரழிவை விளைவிக்கிறார்கள் எனும் நிஜம் அவளை அதற்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது. போராளிகள் வெகுமக்களைப் பாதுகாப்பதை அவள் அனுபவம் கொள்கிறாள். பன்னிரண்டு வயதில் இயக்கத்தில் சேர்கிறாள். பிற்பாடாக இரு பத்தாண்டுகள் அவளது கருத்துலகத்தையும் அவளது நம்பிக்கைகளையும் உருவாக்குபவர்களாக விடுதலைப் புலிகளின் தலைமையும் தலைவருமே இருக்கிறார்கள்.
அனுபவத்தினால் விரிய வேண்டிய மனஅமைப்பு இங்கு விசுவாசத்தின் வழியிலும், பக்தியுணர்வின் அடிப்படையிலும் கட்டப்படுகிது. இந்தச் செய்தியை விவரணப்படம் திட்டவட்டமாகச் சொல்கிறது.
விவரணப்படம் முடிகிறபோது, தர்ஷிகாவும் அவளது தோழியும் தற்கொலைத் தாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அடையாளமற்ற இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். மாவீரர் துயலும் இல்லங்களில் தாய்மார்கள் கதறி அழுதபடி இருக்கிறார்கள். தர்ஷிகாவின் தாய் தனது கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். கதறியழும் ஆண்குரலின் ஓலமென, தகரத்தினால் அறுக்கப்படும் குரல்வளையிலிருந்து (நன்றி : சுகுமாரன்) பெருகும் இரத்தத்தின் வெம்மையுடன் அந்தச் சோகக் குரல் நம்மைத் தொடர்ந்து வருகிறது.
V
நேசனல் பிலிம்போர்ட் ஆப் கனடா தயாரித்திருக்கும் ஹெலன் கிளாடோவ்ஸ்க்கி இயக்கிய விவரணப்படம், சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி ( No Nore Tears Sister – 2006). ஒருபோது விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவிருந்து, விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்களின் பின்னும் அவர்களது சுத்த ராணுவப் போக்கினாலும் விரக்தியுற்று வெளியேறி மனித உரிமையாளராகத் திகழ்ந்த, பிற்பாடு விடுதலைப் புலிகளால் 1989 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ரஜனி திரணகமாவின் வாழ்வும் மரணமும் பற்றிய விவரணப் படம் இது.
ஒரு குடும்பத்தின் கதையாகத் துவங்குகிற இந்த விவரணப்படம், அதனது வளர்ச்சிப்போக்கில் தமிழர் சிங்களவர் என இரு சமூகங்களின் கதையாகவும், வேறுபட்ட அரசியல் பாதைகளின் விமர்சனக் களமாகவும் விரிகிறது. ரஜனியின் கணவரான தயபாலா, அவரது சகோதரிகளான நிர்மலா,வாசுகி,சுமதி மற்றும் அவரது பெற்றோர்களின் வழி ரஜனியின் வாழ்வும் மரணமும் விவரிக்கப்படுகிறது. ரஜனியின் புதல்வியரான சாரிகாவும் தாரிகாவும் தமது பெற்றோருடனான தமது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
VI
விவரணப்படத்தின் சமாந்திரமான தாரையாக ரஜனியின் கணவரான தயபாலாவினதும் ரஜனியினதும் காதல் வாழ்வு சொல்லப்படுகிறது. தயபாலா, சே குவேராவினால் உந்துதல் பெற்ற ஜே,வி,பி இயக்கத்தின் தலைமறைவுப் போராளி. ரஜனி தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். இவர்களது அரசியல் நம்பிக்கைகள், இவர்களது காதல் வாழ்வில் குறுக்கிடுகிறபோது, இவர்கள் பிரிந்து போகிறார்கள். எனினும், இவர்களது வாழ்நாள் முழுக்க இவர்களை இணைக்கும் கண்ணியாக இவர்களது இரு பெண் குழந்தைகள் மீதான இவர்களது அளவற்ற அன்பு இருக்கிறது.
ஊடற்கூற்று மருத்துவரான ரஜனியின் பயணம், விடுதலைப் போராட்ட பரப்புரையாளர், மனித உரிமையாளர் மற்றும் பெண்ணிலைவாதி என விரிகிறது. தனது அரசியல் நம்பிக்கையுடன் உடன்படாத பெண்ணின் உடம்பையும் தொடவிரும்பாத அரசியல் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் தயபாலா. இனத்தின் பெயரிலான, ரகசிய இயக்கமான விடுதலைப் புலிகளை ரஜனி ஆதரிப்பது தயபாலாவுக்கு உடன்பாடானது இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எவரும் வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறினார்கள் எனில் அவர்கள் கொல்லப்படுவது தவிர்க்கவியலாதது என்கிறார் தயபாலா.
தனது மக்களுக்குப் பணியாற்றவதற்காக இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரும் ரஜனி, இரண்டு விதமான எதிரிகளை எதிர்கொள்கிறார். இந்திய அமைதிப்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் அவர்களது பாரிய பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராகவும் அவர் பேசுகிறார். சமவேளையில் விடுதலைப் புலிகளினது மனித உரிமை மீறல்களை மட்டுமல்ல, சகல போராளி இயக்கங்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் அவர் பேசுகிறார். விளைவாக 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் அவர் படுகொலை செய்யப்படுகிறார்.
இலங்கை அரசாங்கத்தினால் வேட்டையாடப்படும் தயபாலாவின் வாழ்வு ரஜனியின் மரணத்துடன் முடிவுக்கு வருகிறது. தமது பெண் குழந்தைகள் இருவரின் மீதும் அவர் கொண்ட பேரன்பின் பொருட்டு, அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் இலங்கையிலிருந்து லண்டனுக்குக் குடியேறுகிறார்.
பெண்ணிலைவாதியான ரஜனியின் பல நம்பிக்கைகளோடு அவரால் உடன்பட முடியவில்லை என்கிறார் தயபாலா. தயபாலாவைப் பிரிந்து வாழ்ந்த ரஜனி பிறிதொரு ஆண் மீதான தனது காதலின் பின்னும் தயபாலாவையும் தன்னால் காதலிக்க முடியும் என்கிறார். தயபாலா அதற்கு உடன்பாடு காட்டுவதில்லை. ரஜனிக்குத் தான் கடன்பட்டிருக்கிறேன் எனத் தெரிவிக்கும் தயபாலா, ரஜனிதான் தமக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்ததாகவும், சகமனிதனை எவ்வாறு நேசிக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார்.
VII
ரஜனியின் கதையாகத் தொடங்கும் இந்த விவரணப்படம் ஒரு தலைமுறையின் நம்பிக்கையின் வீழுச்சியையும் கண்ணீரையும் சொல்வதாக முடிகிறது. அறுபதுகளின் தலைமுறையில் தோன்றிய புரட்சியாளர்கள் மாபெரும் கனவுகளை உலகெங்கிலுமுள்ள புதிய தலைமுறையினரிடம் விதைத்தார்கள். மாவோ, குவேரா, பிடல், கோசிமின் என கனவுமயமான காலங்கள் அவை. ஜே.வி.பியிலும் ஈழப் போராட்ட அமைப்புக்களிலும் இணைந்து கொண்ட பலர் இத்தகைய கனவுகளேடுதான் இணைந்து கொண்டார்கள். அவர்களது அரசியல் ஆயுதப் போராட்டம். புரட்சி செய்வது. மனித உரிமை என்பதை ஒரு அரசியல் செயல்பாடாக அவர்கள் கருதவில்லை. அந்த அக்கறைகளும் அவர்களுக்கு இல்லை.
ஜே.வி. பியின் கிளர்ச்சியும் சரி, விடுதலைப் புலிகளின் போராட்டமும் சரி இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. வெகுமக்களின் கனவுகளை மட்டுமல்ல ஒரு தலைமுறையினரின் நம்பிக்கைகளையும் இது அழித்தது. நம்பிக்கைகளுக்கு இந்த இயக்கங்கள் துரோகமும் இழைத்தது. ரஜனி திரணகமா பற்றிய விவரணப்படம் அந்தத் தலைமுறையின் கதையை விரிவாகச் சொல்கிறது
VIII
விவரணப்படமும் கதைப்படமும் முயங்குகிற அல்லது அறிவுசார்ந்த அரசியல் யதார்த்தமும் மனிதாய உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் கலந்த ஒரு திரைப்பட வகையினம் சர்வதேசிய வெளியில் உருவாகி வருகிறது. ழுமுநீளக் கதைப்படத்திற்கான புனைவுத் தன்மையும், சமவேளையில் அப்பட்டமான அரசியல் தீர்ப்புக்களும் கொண்டதாக இத்தகைய திரைப்பட வடிவம் இருக்கும். ரஜனி திரணகாமா குறித்து எடுக்கப்பட்ட படம் ஒரு குடும்பத்தின் கதை, அதனோடு ஒரு சமூகத்தின் அரசியலின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்கிற கலவையாக உருவாகி இருக்கிறது.
விவரணப்படம் தான் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையின் சகல பிரச்சினைகளையும் தழுவி, தனிமனிதர்களையும் தாண்டி, வரலாற்றுரீதியில் அந்தப் பிரச்சினையை அணுகுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தற்கொலை அரசியல் குறித்து எடுக்கப்பட்ட அமெரிக்க விவரணப்பட இயக்குனரான பாப் போரின் இரண்டு பாகங்களிலான விரணப்படம். வேறுவேறு நாடுகளில் வேறுவேறு இயக்கங்களில் குறிப்பிட்ட தற்கொலை அரசியல் பிரச்சினை எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதாக அந்த விவரணப்படத்தின் விளக்கம் விரிகிறது. மறுபடியும் நிகழ்த்திக் காட்டல் என்பதற்காக குறிப்பிட்ட நிகழ்வுகள் மீளக் கட்டமைக்கப்படுகிறதே அல்லாமல், மனிதாயப்படுத்தலோ உணர்ச்சிவசமான கதைசொல்லல் பண்போ இப்படத்தில் இடம்பெறுவதில்லை.
சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி படத்தின் சொல்நெறி பாப் போரின் தற்கொலை அரசியல் பற்றிய விவரணப்படம்போல இருக்க முடியாது. கொல்லப்பட்ட மனிதஉரிமையாளரான ரஜனி திரணகமா மரணமுறும் வேளையில் இரண்டு பெண் குழந்தைகளின் தாய். அவரும் தாம் கொண்ட அரசியல் நம்பிக்கைகளின் பொருட்டு அவரது கணவரும் வேறு வேறு திசைகளில் வாழ்கிறார்கள். தான் நம்பிய விடுதலையில் அவரது நம்பிக்கை இழப்பின் மத்தியில், தான் நம்பியவர்களின் துரோகச் செயலாக அவரது கொலை நடந்து முடிகிறது. நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வீழ்ச்சிக்கும், துரோகத்திற்கும் துயரத்திற்கும் இடையிலான உணர்ச்சிகரமான வாழ்வாக ரஜனி திரணகமாவின் வாழ்வு இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கை உள்ளிட்ட ஒரு காலகட்டத்தின் அரசியல் சித்திரம் என்பது அதிர்ச்சியும் உணர்ச்சியும் உள்ளிட்டதாகத்தான் இருக்கமுடியும்.
திரைப்படம் எடுத்துக் கொள்ளும் பிரச்சினை எனும் அளவில், இப்படம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்த தீரம்மிக்க பெண்களின் கடப்பாட்டுணர்வையும், அவர்களது நம்பிக்கைகளின் இழப்பையும், அவர்களது மரணத்தின் அதிர்ச்சி, அவர்களை நேசித்தவர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தினையும் பேசுகிறது.
ரஜனி திரணகாமா மரணத்தின் முன்பின்னாக இயக்கங்கள் அரசு போன்றவற்றின் மனித உரிமை மீறல்களால், அந்தச் சமூக அமைப்பின் சிதிலத்தினால், மரணமுற்ற பெண்கள் நிறையவே சர்வதேசப் புலத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறார்கள்.
கவிஞர்களான செல்வியும் சிவரமணியும் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பூரணி பெண்கள் அமைப்பில் செயல்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் இந்தப் பெண்களின் ஆளுமைகள் குறித்துப் பதியப்பட்ட தரவுகள். பெண்களின் பங்களிப்பும் அவர்களது நிர்க்கதியான மரணமும் குறித்துப் பேசுகிற இந்தப் படத்தில், பூரணி பெண்கள்
விடுதலையின்பாலான வேறுபட்ட பெண்களின் கடப்பாடு மற்றும் அவர்களது நம்பிக்கையிழப்பு, மரணத்தைப் பின்தொடரும் துயரம் எனும் முழுமையானதொரு பிரச்சினை சித்தரிப்பிலிருந்து இந்த விவரணப்படம் இங்கு தவறிவிடுகிறது.
IX
மரணமே வாழ்வின் இறுதி. சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி திரைப்படம் காட்சிரூபம் எனும் அளவில் ரஜனியின் மரணத்தில் துவங்கி மரணத்தில் முடிகிறது. ஒரு வகையிலான காவிய சோகம் இது.