ஓர் ஊழின் உக்கிரத்தில்…
நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து
அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும்
செங்கங்குகளில்…
சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம்
எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்…
ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை;
எடுத்தொரு நிழலில் கிடத்திட….
யாருமில்லை…!
*****
சுற்றி நின்று பேய்கள் அலறும் கர்ண கடூரத்தில்
எதிரொலிக்கும் பட்ட மரங்களின் உக்கிப் போன ஆணி வேர்கள்;
இருளில் இருள் கரைந்த இரவாய்….கருப்பில் கருமை கரைத்த
கருப்பாய்…
விழி சிவந்த ஆந்தைகள் வழிதவறிப் பதைக்குமொரு நிசியில்
பசித்துத் தவிக்கும் கிளிக் குஞ்சுக்கொரு
பருக்கைப் பழம் தர….
யாருமில்லை…!
*****
சிங்கங்களும் சிறுத்தைகளும் இளைப்பாறும் கரையில்…
யானை இரத்தம் குடித்து இறுமாந்த முதலைகளைச்
சர்ப்பங்கள் சப்பித் தின்னும் பாழ் குளத்து மேலே
இரும்புச் சிறகடித்து இரையும் வல்லூறுகளின் வட்டமிடலில்…
தாவித் தண்ணீரில் வீழ்ந்த குட்டி முயலின்
செவி பிடித்துத் தூக்கியதன் உயிர் காக்க…
யாருமில்லை…!
*****
ஒடுங்கிய கூட்டுக்குள் தேள் கொட்டக் கொட்ட
வெளியேற வழியற்றுத் துடிதுடிக்க அலையும்
சிட்டுக் குருவியின் உயிர் வலி போக்க…
யாருமில்லை…!
*****
பிரபஞ்சப் பெரு வெளியில்
இலையுமற்று கிளையுமற்ற மொட்டை மரமாய்
தன்னந் தனியேயொரு ஒற்றை மரமாய்
புழுத்துப் போனதான பக்க வேர்களின் தாங்கலில்…
ஓயாமல் உள்ளிருந்தரித்துக் குடையும்
வேதனைப் பூச்சிகளின் விளையாட்டில் நொந்தும் நொய்ந்தும்..
பிணமாகி ரணம் தீர்க்கும் பேராவற் பொழுதுகள்
மரணத்தை யாசிக்கும் ரண மனதின் விம்மல்கள்…!
*****
சம்மட்டியால் அடிக்கப்படும்
ஆண் விதையாய் இதயம்…
சவரக் கத்தியால் அறுக்கப்படும்
பெண் முலையாய் சிரசம்…
வாய் திறந்தரற்ற முடியா வதைகளில்
மௌனக் கதறல்…! ஊமை ஒப்பாரி…!!
*****
சற்றேனும் அடங்காமல் கணந்தோறும் வியாபிக்கும்
விகார வேதனைகளின் மூர்க்கத் தழுவல்களில்
முதுகு வளைத்து மெதுவாய் நகரும் வயோதிப நாழிகைகள்…
முகம் கூனி மனம் குறுகப் புரண்டெழும் இயலாமைப் பேரலைகள்…!
*****
பிரார்த்தனைகளும் களைத்து, விட்டு விடெனப்
பிரார்த்தித்துத் தப்பித்த வேகத்தில் தறிகெட்டோடிட…
இருண்ட சூன்யத்துள் மருண்டு மிரண்டோர்
ஒற்றை ஒளிக் கீற்றுக்காய் உருண்டு புரண்டு…அட-
கடவுளின் கணணியிலும் வைரஸ் தாக்கமோ…?
*****
கோரத் தீ கொடிது…கொட்டும் தேள் கொடிது…
கொள்ளை நோய் கொடிது…பிள்ளை சா கொடிது…
போர்கால வெடி கொடிது…போகாத மிடி கொடிது…
கார்கால இடி கொடிது…கண்பறிக்கும் மின் கொடிது…
*****
பாரவண்டி தலையேறிப் பலிகொள்தல் கொடிது கொடிது….
பாரழிக்கப் பொங்கிவரும் பேரலையும் கொடிது கொடிது…
ஆரமுதில் விஷம் கலந்து அருந்துதலும் கொடிது கொடும்
அரக்கர்களின் ஆட்சியிலே அவதியுறல் மிகக் கொடிது…
*****
இத்தனை கொடிதுகளும் இன்னும்பல கொடுமைகளும்
இணைந்தொரு கடன் பாம்பாயாகி-
உச்சி முதல் பாதம்வரை பிணைத்து
ஓயாது கொத்துகின்ற வலி அறிவர் யாரோ…?
*****
எதற்கிந்த மூச்சு…? எதற்கிந்த வாழ்வு..?
இல்லாளும் வேண்டாத – ஈன்றவளும் விரும்பாத
இல்லானுக் கேனிந்த உலகு…??
*****
இக்கணமே சா வந்து
எனையழைத்துச் செல்வதற்கு-
இதயமுள்ள சான்றோரே..
இருகரங்கள் ஏந்திடுங்கள்…
இறைவனிடம் வேண்டிடுங்கள்…!!
hameeths16@gmail.com