காலங்களை தன்குறிப்புக்களால்
தோண்டித் தோண்டி விரிகிறது விக்கிலீக்ஸ்
ஆனாலும்
நாம் கடந்த காலத்தின்
இன்னொரு முகம் தொடுவதில்லை விக்கிலீக்ஸ்!
துரத்தி துரத்தி வேட்டையாடப்பட்ட
உன்னதர்களில்
செல்வியென்று ஒருத்தி
அவள் மிச்சமீதி எலும்புகள் தன்னும்
எங்குளவோ என
நீ அறியாயோ விக்கிலீக்ஸ்?
எங்கள் விசுவானந்த தேவன் – அன்று
மாட்டிக் கொண்ட தருணங்கள் பற்றி
எந்தத் தூதுவரும்
குறிப்புக்கள் அனுப்பாது இருந்தனரோ?
தின்பண்டங்களுடன் போய் காத்திருந்து
சுபத்திரனை கொன்று போடச் சொன்னவரும்
கேதீஸ்வரன் வீட்டு வாசலுக்கு
காலனை அனுப்பி வைத்தவரும்
எவரென்ற தகவல் அற்றனையோ நீ?
வன்னிப் பெருநிலத்தில்
மகிந்தப்படை கொன்று வீசியது போக
அதற்கு முன்னமே
நாய்களின் கூண்டுகளில் அடைபட்ட
சாமான்யர்கள் எல்லாம்
என்னவாகினர் எனும் தகவல்
அந்தக் கேபிள்களில்
இல்லாது போகுமோ?
ஒருவர் முகத்தில் மற்றையவர்
காறித் துப்பினாலும்
மக்களின் விரோதிகள்
கைலாகு கொடுத்தபடி
சிரிப்பதன் மர்மம் என்ன என
அடியாட்கள்
எஜமானர்களுக்கு அறிவித்த
ரகசியங்கள் நிச்சயமாய் உன்னிடம் உண்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
எந்த தருணங்களில்
எப்படி தோற்கடிக்கப்பட்டோம் என-
யாரோடு யார் சேர்ந்திருந்தார்
எவருக்கு எவர் நண்பர் என
மக்கள் அறியட்டும்.
புத்;தெழுச்சி கொள்ளட்டும்.
-விஜி.