Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பெரும் இழப்புகளைச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் தொழில் மூலமே தமது வாழ்வைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களுக்கு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி கொடுத்திருந்தது.

ஆனால், 2017ஆம் ஆண்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 305 மீனவ படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நீரியல்வளத் திணைக்களத்திடம் மக்கள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது தவிர, கிழக்கே அமைந்துள்ள கொக்குத்தொடுவாய் கடல்நீரேரியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த மீனவர்களை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதுடன், மீனவர்களின் படகுகளை தீவைப்பது, அடித்து நொருக்குவது போன்ற நாசகார செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாசகாரச் செயல்கள் அனைத்தும் இராணுவத்தின் பாதுகாப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு ஆதாரமாக அண்மையில் மாத்தளன் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை கடற்படையினரின் படகு மோதியதில் படகு முழுமையாகச் சேதமடைந்ததுடன் மீனவர்கள் இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களின் அத்துமீறல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

இப்பிரச்சனை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்கள் நீரியல்வளத் திணைக்களம், வடமாகாண முதலமைச்சர் உட்பட கடற்றொழில் அமைச்சர் போன்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இருப்பினும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பதுடன், ஆக்கிரமிப்பு அதிகரித்தவண்ணமே உள்ளது.

 

Exit mobile version