Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி

மனித குலத்தின் வரலாறென்பது வர்கங்களிடையே மோதலின் வரலாறு. அந்த மோதலிலிருந்து அதிகாரவர்க்கம் தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மனித குல வரலாற்றையே மாற்றியமைக்க முற்படுகின்றது. போர்களையும் அழிவுகளையும் தோற்றுவித்து அதன் எச்சங்களில் வசதிபடைத்த வாழ்க்கை வாழ்கின்றனர். ஆதிமனிதர்களின் எவ்வாறு வாழ்ந்தார்கள். அவர்களிடையே நிலவிய சமத்துவம், உழைப்பின் சமூகப் பங்கு போன்ற அடிப்படையான விடையங்களை அழகிய நாவல் போன்று ராகுல் ஜீ படைத்துள்ளார்.

மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்து சொத்துச் சேர்த்துக்கொண்ட பின்னர் அதனைக் கையகப்படுத்துவதற்கான மோதல்கள் எவ்வாறு தோன்றியது என்பதன் ஊடாக எமது சமகால சமூகம் வரைக்கும் வால்காவிலிருந்து கங்கைவரை விரிந்தோடுகிறது.

 உலகின் மிகப்பெரும் அறிஞரான ராகுல்ஜீ, 36 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அறிவுத் தேடலில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்தவர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர். தனது உழைப்பால் சேகரித்துக்கொண்டவற்றை 150 நூல்களாக மக்களுக்கு வழங்கியவர். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இணைய வாசகர்களுக்காக தொடர் பதிவுகளாகத் தருவதில் மகிழ்ச்சிய்டைகிறோம்.

 

இப்போது திவா, நான்கு புத்திரர்களுக்கும் ஐந்து புத்திரிகளுக்கும் தாயாகிவிட்டாள். நாற்பத்தைந்து வயதுப் பிராயத்தில் அவள் நிஷா பரிவாரத்தின் தலைவியாக்கப்பட்டாள். கடந்த இருபத்தைந்து வருஷங்களில் நிஷா சமூகத்தின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகிவிட்டது. அதற்காக இவள் அடிக்கடி பகவானுக்கு நன்றி செலுத்துவது வழக்கம். சூரன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவிப்பதற்கு அறிகுறியாய், இவளுடைய கன்னங்களில் முத்தமிடும் போது, இது அக்னி தேவனின் அன்பு, பகவானின் கருணை என்று இவள் கூறுவாள். அக்னி பகவானின் பக்தர்களுக்கு யாதொரு குறைவுமில்லை. அவர்கள் வாசஸ்தலத்தின் அருகே வால்கா நதி பெருக்கெடுத்தோடுவதைப் போல், தேனும் மதுவும் பெருக்கெடுத்தோடும். அவர்கள் வாழும் வனத்தே நானாவித மிருகங்கள் தானாகவே வந்து மேயும் என்பது இவர்களின் நம்;பிக்கை.

நிஷா சமூகத்துக்கு இப்போது ரொம்பக் கஷ்டம், பருவ காலத்திற்கு தக்கபடி இவர்கள் பிரதேச் விட்டுப் பிரதேசம் செல்லும் போது அந்தக் காடுகள் இவர்கள் வேட்டையாடுவதற்குப் போதவில்லை. அதுமட்டுமல்ல இப்போது இவர்கள் குடிசைகள் கூட அதிக எண்ணிக்கையில் கட்ட வேண்டியதிருக்கிறது.

ஜன வளர்ச்சிக்குத் தக்கபடி விசாலமான காடுகளும் வேண்டுமல்லவா? இப்பொழுது அவர்கள் புதிதாகக் குடிசை போட்டுள்ள காட்டிற்கு வடக்குப் பக்கத்தில் உஷா ஜனங்களின் காடு இருக்கிறது. இந்த இரண்டு வனங்களிற்குமிடையில் யாருக்கும் சொந்தமில்லாத பொது இடமிருக்கிறது. நிஷா சமூகத்தார் இந்தப் பொதுக்காட்டையும் கடந்து உஷா சமூகத்தாருடைய வனத்திலும் வேட்டையாடுவதற்குப் பலமுறை சென்றிருக்கிறார்கள். இவ்விதம் அத்துமீறிப் போவது நல்லதன்று, சண்டைக்கு அடிகோலுவதாகும் என்பதும் நிஷா சமூகத்தாருக்குத் தெரியாமலில்லை. ஆயினும் இவர்களுக்கு வேறுவழியில்லை. ஒருநாள் திவா, சமூகக் குழுவில் ‘பகவானுடைய கிருபையால் நம்முடைய சமூகம் ஜன எண்ணிக்கையில் பெருகிவிட்டது. இவர்களுடைய போஷிப்பிற்கு இந்த வனாந்தரங்களைத் தவிர்த்து வேறு மார்க்கமில்லை. நிஷா சமூகத்தாராகிய நமக்கு வால்கா நதியிலுள்ள மீன்கள் எப்படியோ அப்படியே தான், அந்த வனங்களிலுள்ள விலங்குகளும். ஆகையால், நாம் இந்த வனங்களிலுள்ள கரடிகள், மான்கள், பசுக்கள், குதிரைகள் முதலிய விலங்குகளை வேட்டையாடாமல் முடியாது’ என்று எடுத்துச் சொன்னாள்.

நிஷா சமூகத்தார் செய்யும் இந்தக் காரியம் அநியாயம் என்று உஷா சமூகத்தாருக்குப்பட்டது. இவர்கள் குழு நிஷா சமூகக் குழுவிடம் பலமுறை இது விஷயமாகப் பேசியது. ‘நாம் எத்தனையோ மழைக் காலத்தை இந்தக் காடுகளில் கழித்திருக்கிறோம். எந்தக் காலத்திலும் நம் இரு சமூகங்களிற்கிடையிலும் யுத்தம் நடந்ததே கிடையாது’ என்று விபரமாக உஷா சமூகக் குழு நிஷா சமூகக்குழுவிடம் எடுத்துச் சொல்லியது. இது நியாயமான விஷயம் தான், ஆனால் பட்டினியால் சாகும் போது நிஷா சமூகக்குழு நியாயத்தை கடைப்பிடிக்க முடியுமா? நியாயமும் சட்டமும் பலனற்றுப் போகும் போது, காட்டுமிராண்டிச் சட்டத்தை (மிருகத்தனத்தை) கடைப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரு சமூகமும் உள்ளுக்குள் இதற்குத் தயார் செய்ய ஆரம்பித்தன. இந்தச் சமூகத்தின் ரகசியம் அந்தச் சமூகத்திற்கோ, அந்தச் சமூகத்தின் ரகசியம் இந்தச் சமூகத்திற்கோ தெரிய வசதியில்லை. ஏனெனில் கொள்ளல்-கொடுத்தல், சாவு, வாழ்வு யாவும் ஒரு பரிவாரத்திற்கு வெளியே நடப்பதில்லை.

ஒரு நாள் நிஷா சமூகத்தின் ஆட்கள் சிலர், உஷா சமூகத்தின் வனத்திற்கு வேட்டையாடச் சென்றனர். மறைந்திருந்த உஷா சமூகத்தினர் உடனே தாக்க ஆரம்பித்தார்கள். இவர்களும் எதிர்த்தனர். ஆயினும் எண்ணிக்கையில் இவர்கள் குறைவு. எதிர்பார்க்கவும் இல்லை. ஆகையால் நிஷா சமூக ஆட்கள் இறந்தவர்களை அங்கேயே போட்டுவிட்டு காயம் பட்டவர்களை மட்டும் தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இது நிஷா சமூகத்தின் தலைவிக்கு எட்டியது. குழு கூடியது. சர்ச்சை நடந்தது. அப்பால் சமூகம் பூராவும் ஆண் பெண் அடங்கலும் சேர்ந்த சபை கூடியது. அதற்கு முன் எல்லா விஷயங்களும் தெரிவிக்கப்பட்டன. இறந்தவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. காயம்பட்டவர்களைத் தூக்கிக் கொண்டுவந்த காண்பித்தார்கள். விருத்தர் முதல் யுவ-யுவதியர்கள் வரை, ‘கொலைக்குக் கொலை: பழிக்குப் பழி’ என்று சமூகத்தை தூண்ட ஆரம்பித்தனர். மகாசபையும் கொலைக்குப் பதில் கொலை செய்வதற்கு, பழிக்குப் பழி வாங்குவதற்கு அனுமதி கொடுத்துவிட்டது.

நடனத்துக்கு உபயோகமாகும் வாத்தியங்கள் யுத்த வாத்தியங்களாயின, குழந்தைகளையும் விருத்தர்களையும் பாதுகாப்பதற்காகச் சில நபர்களை மட்டும் வைத்துவிட்டு, மற்ற யாவரும் களத்திற்கு கிளம்பி விட்டனர். அவர்களுடைய மார்புகளிலே கனத்த தோலால் செய்யப்பட்ட கவசங்கள், கைகளில் கல், மரம், தோல் இவைகளால் செய்யப்பட்ட வில், அம்பு, ஈட்டி முதலிய ஆயுதங்கள், முன்னே வாத்தியம் முழங்க பின்னே இந்தப் படை செல்கிறது. சமூகத்தாய் திவா தலைமை தாங்கி முன்னே நடக்கிறாள். இவர்களுடைய வாத்தியங்களின் ஓசையும், இவர்கள் போடும் கோலாகல இரைச்சலும், அந்த வானத்தையே அதிரும்படி செய்கின்றன. அவ்வனத்தில் வாழும் பட்சிகளும் மிருகங்களும் பயத்தால் இங்குமங்கும் ஓட்டமெடுத்தன.

இப்போது இவர்கள் தங்கள் வனத்தை கடந்து பொது இடத்திற்குப் போய்விட்டார்கள். இவர்களுடைய வனம், அவர்களுடைய வனம், பொது இடம் இவைகளின் எல்லையை வரையறுக்கும் எந்த அடையாளமும் இல்லையானாலும் கூட வேட்டையாடித்திரியும் இந்த இரு சமூகத்தையும் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்களின் எல்லை நன்றாகத் தெரியும். பொய் சொல்லவும் மாட்டார்கள். ஏனெனில் அந்தக் காலமனித சமுதாயத்திற்குப் பொய்யென்பது தெரியாத பொருள். அதைக் கற்றுக் கொள்ளும் திறமையையும் அந்தச் சமுதாயம் பெற்றிருக்கவில்லை. வேட்டையாடிக்கொண்டிருந்த உஷா சமூக ஆட்கள் தகவலைச் சமூகத்திற்கு தெரிவித்தனர். உடனே எல்லோரும் ஆயுதம் ஏந்தி யுத்த களத்திற்கு வந்துவிட்டனர். உண்மையில் உஷா சமூகத்தினர் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்பினர். ஆனால் அவர்களின் எதிரிகள் இந்நியாயத்திற்கு தயாராயில்லை. உஷா சமூகத்தாருடைய வனத்தில் இரு சமூகத்தாருக்கும் யுத்தம் மூண்டது. கல்லால் செய்யப்பட்ட கூர்மையான அம்புகளை மழைபோன்று வருஷிக்கிறார்கள். கல்லாலும், மரத்தாலும், எலும்பாலும், கொம்புகளாலும் செய்யப்பட்ட விதவிதமான ஆயுதங்களை உபயோகித்துப் பயங்கரமாகச் சண்டை போடுகிறார்கள். ஆயுதங்களை இழந்து விட்டவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் பற்களையும் உபயோகித்துச் சண்டை செய்கிறார்கள்.

நிஷா சமூகத்தாரின் எண்ணிக்கை உஷா சமூகத்தாரின் எண்;ணிக்கையைப் போல் இரண்டு மடங்கு இருந்தது. ஆகையால் அவர்களை உஷா சமூகத்தார் வெற்றி காண்பதென்பது முடியாத காரியம். ஆயினும் யுத்தம் செய்து தானேயாக வேண்டும். ஒரு சிறு குழந்தையாவது உயிரோடிருக்கும் வரை யுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. உஷா சமூகத்தினர் மூன்றில் இரண்டு பகுதியினர் யுத்த காலத்திலேயே மடிந்து விட்டனர். பாக்கி ஒரு பகுதியினரும் வால்கா நதிக்கரையில் சண்டை செய்து கொண்டே உயிர் விட்டனர். குடிசையில் கிழவர்களையும் குழந்தைகளையும் காத்து நின்றவர்கள், அவர்களையும் கூட்டிக்கொண்டு குடிசையைவிட்டு ஓட நினைத்தனர். ஆனால் காலம் கடந்து விட்டது. யுத்தவெறி பிடித்த நிஷா சமூகத்தினர் அவர்களை விரட்டிப்பிடித்துக் கொன்று குவித்தனர். பால்மணம் மாறாப் பாலகர்களைக் கல்லில் மோதிக் கொண்றார்கள். விருத்தர்களின் கழுத்தில் கல்லைக் கட்டி வால்கா நதிப் பிரவாகத்தில் அமிழ்த்திக் கொன்றார்கள்.

அவர்களின் குடிசைகளிலும் சாமான்களை அப்புறப்படுத்திவிட்டுப் பாக்கியுள்ள குழந்தைகள் பெண்கள் யாவரையும் குடிசைக்குள் அடைத்து நெருப்பை வைத்தார்கள். ஜோதிமயமாய் எரியும் நெருப்பின் நடுவே முனகும் அவர்களின் தீனக்குரலைக் கேட்டு இவர்கள் ஆர்ப்பரித்தார்கள். பிறகு அக்னி பகவானுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். எதிரிகள் சேகரித்து வைத்திருந்த காய்கனிகள், மாமிசம், மது இவற்றால் அக்னி தேவனையும் தங்களையும் திருப்தி செய்து கொண்டனர். தலைவி திவா ரொம்ப மகிழ்ச்சியோடிருக்கிறாள். இன்றைய யுத்தத்திலே அவள், தாய்மாரின் மார்போடு அணைக்கப்பட்டிருந்த மூன்று குழந்தைகளைப் பறித்துக் கல்லிலே மோதிக் கொண்றாள். அந்தக் குழந்தைகளின் தலைகள் கல்லிலே அடிபட்டு நொறுங்கும் சப்தத்தைக் கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தாள். யுத்தம் முடிந்து விட்டது. எதிரிகளின் சூறையாடிய பொருட்களை தின்று முடித்ததும் நாட்டியம் ஆரம்பமாயிற்று. அந்த நெருப்பின் ஒளியிலே நடனம் ஆடினர். திவா இன்று தனது இளைய புத்திரனோடு நடனமாடுகிறாள். நிர்வாணமாய் ஆடும் அந்த இரண்டு உருவங்களும் நடனமாடிக்கொண்டிருக்கும் போதே ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்கின்றனர். ஆலிங்கனம் செய்கின்றனர். இன்று திவாவின் காதலுக்கு அவள் மகன் வசு இலக்காகியிருக்கிறான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர். வெற்றி வெறியில் திளைத்திருக்கும் தாயின் காதலை மகனும் அலட்சியம் செய்ய விரும்பவில்லை.

நிஷா சமூகத்திற்கு இப்போது வேட்டையாடுவதற்குக் காடு நான்கு மடங்காகிவிட்டது. மழைக் காலத்தைப்பற்றி இனி அவர்களுக்கு கவலை கிடையாது. ஆனால் ஒரு கவலை மாத்திரம் அவர்களை இப்போது தொத்திக் கொண்டது. இறந்து போன உஷா ஜனங்களின் ஆவிகள் உயிரோடிருக்கும் போது செய்ய முடியாத காரியங்களையெல்லாம் இப்போது செய்ய முயலுகின்றன. எரிந்து போன அவர்களது குடிசைகள் இப்போது பேய் வாழும் இடமாக மாறிவிட்டன. அந்த வழியாகத் தனிமையில் நடப்பது நிஷா சமூகத்தாருக்கு முடியாத காரியம். வேட்டையாடும் போது எத்தனையோ முறை ஜோதிமயமாக எரியும் நெருப்பையும், அதன் முன்னே நிர்வாணமாக அநேகர் நடனமாடுவதையும் பார்த்ததாகப் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த வனத்தை விட்டு அடுத்த பிரதேசத்திற்குப் போகும் போது அந்த மயான பூமி வழியாகவே தான் செல்ல வேண்டும். அப்போது கூட்டமாகவும், பகலிலும் நடந்து கடக்கின்றனர். திவாவும்கூட பலமுறை, அநேக இரவுகளில் பால் மணம் மாறாத குழந்தைகள் பூமியிலிருந்து எழும்பித தன் கைகளைப் பின்னுவதாகக் கனவு கண்டு அலறி விழித்திருக்கிறாள்.

4

திவா இப்பொழுது பெரிய கிழவியாகிவிட்டாள். வயதும் எழுபதுக்கு மேல்ஆகிவிட்டது. நிஷா சமூகத்திற்கு இப்போது அவள் தலைவி இல்லை. ஆயினும் எல்லாருடைய மதிப்பிற்கும் பாத்திரமான கிழவியாகியிருக்கிறாள். அவள் தலைமை வகித்திருந்த அந்த 20 வருஷங்களில் வளர்ந்து வரும் இந்தச் சமூகத்தின் ஷேமத்திற்காக வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாள். பல யுத்தங்களை நடத்தி இருக்கிறாள். இந்தச் சண்டைகளில் சிலரை இழந்தது வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொரு யுத்தத்தின் முடிவிலும் வெற்றியையே கண்டிருக்கிறாள். இப்போது இந்தச் சமூகத்திற்கு தேவைக்குப் போதுமான பெரிய வனமிருக்கிறது. இவைகள் யாவும் பகவானுடைய கிருபையால் கிடைத்ததாகவே நினைப்பாள். இருந்தாலும் கல்லிலே மோதிக் கொன்றாளே, அந்தக் குழந்தைகள் – பால் மணமே மாறாத பாலகர்கள் – அடிக்கடி அவளுடைய நித்திரையைப் பங்கப்படுத்தி விடுகின்றனர்.

பனிக்காலம், மாதக் கணக்காகத் தொடர்ந்து பெய்யும் பனியினால், வால்கா நதி உறைந்து ஒரே பனித் தகடாய்க் காட்சியளிக்கிறது. அந்த வனாந்தரத்திலுள்ள மரங்கள் இலைகளையும் கூட இழந்து நிற்கின்றன. புல் பூண்டுகள் புதர்கள் யாவும் பனி மயம். நிஷா சமூகத்திலே ஜனத்தொகை முன்னைவிடப் பெருகிவிட்டது. ஆகவே அவர்களுக்கு ஆகாரப் பொருள்களும் அதிக அளவில் தேவையல்லவா? ஆனால் ஜனங்களின் பெருக்கத்துக்குத் தக்கபடி உழைக்கும் கைகளும் அதிகரிக்கின்றன. கிடைக்கும் பொழுது உணவை நிறைய சேகரிப்பதில் சிரமம் எதுவுமில்லை. குளிர்காலத்தில் வேட்டை நாய்களின் உதவியினால் எப்படியாவது வேட்டை மிருகங்கள் கிடைத்து விடுகின்றன. பனி ஆரம்பித்தவுடனே இந்த வனத்திலுள்ள விலங்குகள் அடுத்த பிரதேசத்திற்கு- பனியில்லா பிரதேசத்திற்குப் போய்விடுவது வழக்கம். ஆனால் நிஷா- சமூகத்தாருக்கு இப்போது ஒரு புதுமுறை தென்பட்டது. இந்த வனத்திலுள்ள புல் பூண்டுகளின் விதைகள், பூமியில் உதிர்த்து மறுபடியும் முளைப்பதைப் பார்த்த இவர்கள், விதைகளைக் கூட்டிச் சேர்த்து அவற்றை ஈரமான நிலங்களிலே தூவி விட்டனர். அவை முளைத்துப் பசுமையாக வளர்ந்திருந்தன. பசுமையைக் கண்ட மிருகங்கள் இன்னும் கொஞ்ச நாள் அதிகமாக இந்த வனத்தில் தாமதித்தன.

ஒரு நாள் துருவனுடைய நாய் ஒரு முயலைப் பின் தொடர்ந்தது. துருவனும் தன்னுடைய நாய்க்குப் பின் வேகமாக ஓடினான். வியர்வை வடிய ஆரம்பித்தது. தன்னுடைய தோல் கவசத்தை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு ஓடினான். எவ்வளவுதான் வேகமாக ஓடியும் அவனால் அவனுடைய நாயைத் தொடர முடியவில்லை. பனி படர்ந்திருப்பதால் நாயினுடைய அடிச்சுவடு பூமியில் தெரிகிறது. ஆனால் நாயைக் காணவில்லை. வியர்த்து களைத்து விழுந்து கிடந்த ஒரு மரத்தின் மீது சிறிதே உட்கார்ந்தான். வியர்வை கூடப் பூரணமாக அடங்கவில்லை. அதற்குள் அவனுடைய நாய் குரைப்பது கேட்டது. வேகமாக அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். நாய் நின்ற இடத்தை அவன் நெருங்கியதும் ஒர் அழகிய யுவதி தேவதாரு மரத்தில் சாய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டாள். அவளுடைய மார்பகத்தை வெண்மையான தோல் கவசம் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவளுடைய வெள்ளைத் தோல் தொப்பிக்குள்ளிருந்து பொன்னிறமான கேசங்கள் வெளிவந்து பிடரியில் புரண்டன. அவளுடைய காலடியில் அந்த முயல் குட்டி இறந்து கிடந்தது. துருவனைப் பார்த்த அவனுடைய நாய் அவனுக்கு சமீபத்தில் வந்து உரக்க உரக்கக் குரைக்க ஆரம்பித்தது. ஆனால் துருவனுடைய கண்கள், அந்த அழகியின் முகத்தைவிட்டு அகலவில்லை. அவளும் புன்முறுவலோடு ‘நண்பா! இது உன்னுடைய நாயா?’

‘ஆம், இது என்னுடைய நாய் தான். ஆனால் உன்னைநான் இதுவரை பார்த்ததே இல்லைN?’

‘நான் குரு சமூகத்தைச் சேர்ந்தவள். இந்த வனமும் குரு சமூகத்தினுடையது தான்’

‘குரு சமூகத்தினரின் வனமா?’ அவனுடைய இதயத்தில் எண்ணங்கள் மோத ஆரம்பித்தன. குரு ஜனங்கள் நிஷா ஜனங்களுக்குப் பக்கத்து வனவாசிகள். பல

வருடங்களாக இந்த இரு சமூகத்திற்குமிடையில் சுமூகமான உறவு கிடையாது. பலமுறை இரு சமூகத்திற்கும் யுத்தம் கூட நடந்திருக்கிறது. ஆனால் குரு ஜனங்கள் நிஷா ஜனங்களைக் காட்டிலும் கொஞ்சம் புத்திசாலிகள். ஆகவே யுத்தத்தில் வெற்றியைக் காண முடியாதபோது, அவர்கள் அடிக்கடி தங்கள் பாதங்களைத் திறமையாக உபயோகித்திருக்கிறார்கள். கைகள் வெற்றியை அளிக்க முடியாதபோது கால்களின் உதவியினால் உயிர்களை காப்பாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம் தானே? நிஷா சமூகத்தார் குரு சமூகத்தை அழித்துவிட வேண்டும் என்று நிச்சயம் செய்து கொண்டிருந்தாலும் இதுவரை அவர்களுடைய எண்ணத்தைக் காரியத்தில் ஈடேற்ற முடியவில்லை. சிந்தனையில் மூழ்கி அவன் மென்மையாய் நிற்பதைப் பார்த்து யுவதி பேசத் தொடங்கினாள்.

‘இந்த முயலை உன்னுடைய நாய் தான் கொன்றது. ஆகையால் இதை நீ எடுத்துக் கொள்’

‘இருந்தாலும் இது குரு சமூகத்தாரின் வனத்திலல்லவா இறந்து கிடக்கிறது?’

‘ஆம். அதனாலென்ன? நாயின் எஜமானுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டே தான் நான் நின்றேன்.’

‘எதிர்பார்த்துக் கொண்டா?’

‘ஆம். வந்தவுடன் இந்த முயலைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காகவே’

குரு என்ற பெயரைக் காதில் கேட்டவுடனேயே துருவனுடைய மனத்தில் துவேஷ உணர்ச்சி தான் எழுந்தது. ஆனால் அழகியினுடைய அன்பு நிறைந்த பேச்சு துவேஷ உணர்ச்சியைத் துரத்திவிட்டது. அவன் நன்றியறிதலோடு,

‘இந்த முயல் என்ன, என்னுடைய நாயையுமல்லவா நீ எனக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறாய். இது எனக்கு ரொம்ப பிரியமுள்ள நாய்.’
‘ஆம். நல்ல அழகான நாய்.’

‘எத்தனை பேர் கூட்டத்திலிருந்தாலும் சரி, எனது குரலைக் கேட்டதும் எனக்குச் சமீபம் ஓடி வந்துவிடும்!’
‘இதனுடைய பெயர்?’

‘சாம்பு’

‘உன் பெயர் நண்ப?’

‘துருவராஸவ, ரோசனா … சூனு.’

‘ரோசனா-சூனு! என்னுடைய தாயின் பெயரும் ரோசனா தான். அவசரமில்லையானால், இங்கே கொஞ்சம் உட்காரேன்’

துருவன் உடனே தன்னுடைய கவசம், ஆயுதங்கள் இவைகளைப் பூமியில் வைத்துவிட்டு அவளுடைய பாதங்களின் அருகே உட்கார்ந்தான்.’உன்னுடைய தாய் இருக்கிறாளல்லவா?’

‘இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும்போதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக உகுக்க ஆரம்பித்தன. துருவனுடைய இதயமும் உருகிவிட்டது. அந்தக் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக் கொண்டே, ‘யுத்தம் ரொம்பக் கொடியது’ என்றான்.

‘ஆம், ஒரு விதத்திலா? நமது அன்புக்கு உரியவர்கள் எத்தனை பேரை இழக்க வேண்டியிருக்கிறது!’

‘இந்த யுத்தத்திற்கு முடிவே இல்லையா, இனிமேலும் தொடர்ந்து கொண்டேதானிருக்குமா?’

‘துருவ! அது எப்படி நிற்கும்? ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை வேரோடு அழிக்காதவரை யுத்தம் நிற்குமா?’

‘நிஷா சமூகத்தவர் திரும்பவும் எங்கள் மீது யுத்தம் ஆரம்பிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். துருவ! உன்னைப் போலொத்த வாலிபர்கள் தானே அங்குமிருப்பார்கள்?’

‘உன்னைப் போலொத்த யுவதிகள் தானே குரு சமூகத்திலுமிருக்கிறார்கள்?’

‘இப்படியிருந்தும் நாம் ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளத் துணிகிறோம். இந்த நினைவுதான் இவர்களுக்கு எப்படி உண்டாகிறது?’
இன்னும் மூன்று நாட்களில் குரு குலத்தின் மீது தனது நிஷா சமூகத்தார் யுத்தம் தொடுக்க நிச்சயித்திருப்பது துருவனுக்கு நினைவு வந்தது. இது ஞாபகத்திற்கு வந்தவுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் அந்த யுவதி கூறினாள்.

‘ஆனால் இப்போது நாங்கள் யுத்தம் செய்ய மாட்டோம்.’

‘யுத்தம் செய்ய மாட்டீர்களா? ஏன்? குரு சமூகத்தார் சண்டை செய்யமாட்டார்களா?’

‘எங்கள் சமூகத்தாரின் எண்ணிக்கை ரொம்பக் குறைந்து விட்டது. வெற்றியடைவோமென்றே நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது’

‘அப்படியானால் என்ன செய்வீர்கள்?’

‘இந்த வால்கா நதிப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போய்விடுவோம். துருவ! இந்த நதி நமக்கு எவ்வளவு பிரியமானது! நான் இனிமேல் இதைப் பார்க்க முடியாது. இதனாலே இன்று நான் ஆசைதீரப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.’

‘இனிமேல் இந்த நதியை நீ பார்க்கவே முடியாதா?’

‘முடியாது. எப்படி முடியும்? இதில் நீந்தவும் முடியாது. இதில் நீந்துவது ஆனந்தமாயிருக்கும்!’

ஒரு பெருமூச்சு விட்டாள். துக்கத்;தால் அவளுடைய தொண்டை தளுதளுத்தது. துருவனுடைய முகமும் துக்கத்தால் சுருங்கியது. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. ‘கொடுமை. பெரிய அநீதி இந்த யுத்தம்’ என்றது அவன் வாய்.

‘ஆனால் துருவ! இது சமூக தர்மம்.’

‘சமூக தர்மமா? இல்லை? இல்லை, இது மிருக தர்மம்.’

தொடரும்….

முன்னையவை:

வால்காவிலிருந்து கங்கை வரை(7) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(3) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(2) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(1) : ராகுல்ஜி

இன்னும்வரும்…

Exit mobile version