Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வவுனியா TNA நகர சபைத் தலைவரின் சாதித்திமிர் : பேசப்படாத அவலம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வவுனியா நகரசபை நிர்வாகச் சீர்கேடு ஊழல் மோசடி போன்ற விடயங்களினால் அவப்பெயரைச் சம்பாதித்து உள்ளது. இதன் காரணமாக இந்நகரசபையின் தலைமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் உட்பட 8 நகரசபை உறுப்பினர்கள் நகரசபைத் தலைமைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு முன்னதாக நகரசபையின் நகர சுத்தித் தொழிலாளர்கள்,

நகரசபைத் தலைவரும் (எஸ் என் ஜி நாதன்) நகரசபையின் சிற்றூழியரும் (ரி மரியதாஸ்) தங்களை சாதியின் அடிப்படையில் அவமானப்படுத்தி முறைகேடாக நடந்து கொண்டாதாக ஒரு கடிதத்தை தங்கள் கையொப்பங்களுடன் வவுனியா நகரின் உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் தங்களது கோரிக்கையை வைத்து வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டு இருந்தனர்.

கடந்த 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டம் இன விடுதலையை முதலில் வென்றெடுப்போம் சாதிய பிரதேச பெண் ஒடுக்குமுறையை அதன் பின்னர் பார்க்கலாம் என்ற மனப்பான்மையுடன் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு அதிகாரத்திற்கான போராட்டமாகி ஏனைய அனைத்து ஒடுக்குமுறைகளும் விடுதலையின் பெயரில் அமுக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு அமுக்கப்பட்டு இருந்த பிரதேச சாதிய பெண் ஒடுக்குமுறைகள் காலத்திற்குக் காலம் தலைகாட்டவே செய்கின்றன.

தமிழ் மக்களைப் பன்மைத்துவ சமூகமாக ஏற்றுக்கொள்ளாமல் அதனை ஒற்றைப்பரிமான சமூகமாகக் கொண்டு தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் தமிழ் தேசியம் அதன் மோசமான சாதியம் பிரதேசவாதம் பெண் ஒடுக்குமுறை என்பனவற்றை எப்போதும் தன்னுள்ளே அடைகாத்து வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைபின் தலைமைகள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையில் உள்ள நகரசுத்தித் தொழிலாளர்களை அன்றைய தமிழ் அரசர்கள் போல் இன்றும் அடிமைக் குடிகளாகவே நடாத்தும் மனப்பான்மையைக் கொண்டுள்ளனர். வரலாற்றை புரட்டி தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை பொற்காலமாகக் கற்பிக்க முற்படுகின்றனர் சிலர். அன்று இந்த நகர சுத்தி தொழிலாளர்கள் இரவிலேயே சுத்திகரிக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பகலில் நகரத்தில் நடமாடவே தடைவிதிக்கப்பட்டனர். அவர்கள் நகரின் ஒதுக்குப் புறத்திலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இன்று பல நூற்றாண்டுகள் உருண்டோடிய பின்னரும் நகரசபை ஊழியர்களை ”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” என்று பேசுகின்ற உரிமையை தமிழ் தேசியக் கூட்டமைபின் நகரசபைத் தலைவருக்கு யார் வழங்கியது. இதுவரை இத்தலைவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ன நடவடிக்கையை எடுத்தது?

நன்றி :  தேசம்னெட் (http://thesamnet.co.uk/?p=21565)

Exit mobile version