வலிகாமம் வடக்கில் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிரான சர்வதேச அழு த்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றைக் குறைத்துக் கொள்வதற்காகவும், மக்கள் போராட்டங்களை மலினப்படுத்துவதற்காகவும் மட்டுமே உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு சில பகுதிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்த மக்கள் போராட்டங்கள் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இத்தகைய நடவடிக்கைகள் மக்களை பிரித்தாளும் தந்திரம் எனவும் கூறியுள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் தொடர் சாத்வீகப் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.
இந்நிலையில் 3கிராம சேவகர் பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்றவுள்ளதாக நேற்று திடீர் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியுள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வலிகாமம் வடக்கில் கடந்த 23வருடங்களுக் கும் மேலாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினைகள் சமகாலத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக வருகை தரவுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் சர்வதே நாடுகளின் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை, நேரடியாக பார்வையிட்டு மக்களுடைய பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக் கள் பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றது.
இந்நிலையில் ஜனநாயக வழியில் மக்கள் போராட்டங்கள் நடத்தவிருப்பது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை அதிகரிக்கும்.
எனவே பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்களுடைய நிலங்களை மீள வழங்கி மக்களை பிரித்தாளுவதன் மூலம் மக்கள் போராட்டங்களை மலினப்படுத்தவும், சர்வதேச அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கும் சிறீலங்கா அரசும் படையினரும் முயற்சிக்கின்றனர்.
இவற்றினால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது. உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்ட 30ஆயிரத்திற்கும் அதிகமானளவு மக்களிற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.
நாம் சமகாலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி அனைத்துலக தமிழர் பேரவை நடத்திவரும் மாநாட்டில் கலந்துகொண்டு அனைத்து விடயங்களையும் தெளிவு படுத்தியிருக்கின்றோம்.
அந்தவகையில் 12ம் திகதி நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் நாம் கலந்துகொள்வோம்.
மக்கள் எத்தகைய சூழ்நிலையிலும் மக்கள் போராட்டங்களை கைவிடவேண்டாம். முயற்சிகளில் பின்வாங்கவேண்டாம்.
நியாயமான உரிமைகளை அடைவதற்கு சாத்வீக வழியிலான போராட்டங்கள் மூலம் தமிழர் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.