Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வரலாறு எல்லோரையும் விடுதலை செய்து விடுவதில்லை – பிரேம்

SRI LANKA VIOLENCE

 

 

 

 

 

ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இழப்புகளைச் சந்தித்திருப்போம். பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், தெரிந்தோர், அக்கம்பக்கத்து உள்ளோர், ஊரார் என பலவகையில் நம்முடன் தொடர்புடையோரை ஒவ்வொரு கட்டத் திலும் இழந்துகொண்டே இருப்போம். இந்த இழப்புகள் அனைத்தும் ஒரே போன்ற அதிர்ச்சியை, துயரத்தை, வலியை, திகைப்பை, ஆதரவற்ற நிலையை நமக்கு வழங்கி விடுவதில்லை. தன் வாழ்வின் முழு ஆதாரமுமாக கொள்ளப்பட்ட ஒருவரை இழந்து நிற்கும் தனிமனிதர் ஒருவருடைய ஈடுசெய்ய முடியாத இழப்பை அவரைத் தவிர சமூகத்தில் யாரும் அதே வகையில் உணர்ந்துவிட முடியாது. எந்த ஒருவடைய இழப்பையும், மறைவையும் வேறு ஒருவரால் பதிலீடு செய்து விடவோ பகுதியாக நிறைத்துவிடவோ முடியாது. சமூகத்தைப் பொருத்தவரை யாருடைய மறைவும் ஒரு உறுப்பினருடைய மறைவே. அவர் வகித்த பங்கு, சமூக இடம், அவருக்கு வழங்கப்பட்டிருந்த சமூக, அரசியல் அடையாளம், அவர் தனது வாழ்வின்போது செய்த செயல்கள் என்பவற்றைப் பொறுத்து அவரது மறைவு வரலாற்றிலும் சமூக கூட்டு மனநிலையிலும் ஒரு குறியீட்டு இடத்தைப் பெற முடியும். கருத்துருவ, குறியீட்டு இருப்பாக ஒருவரை மாற்றுதல் என்பது சமூகவயமாக்கம் மற்றும் சடங்காக்க நிகழ்வின் ஒரு பகுதியே. தனிமனிதர்களுக்கு மொழி முடிந்த இடத்தில் ஒருவருடைய இருப்பும் முடிந்து விடுகிறது, கடந்த காலம் என்பது வெறுமை. அப்போது உலகில் எல்லாமாக நமக்கு இருந்த ஒருவடைய இருப்பே நமக்கு எதிராக, மொழி முடிந்த இடத்தில் நம்மை நிறுத்தி விடுகிறது. மிகமிக நேசித்த ஒருவருடைய மறைவு மிகமிக வெறுக்கத்தக்கதாகும் பொழுது மறைந்தவர் அவரை நேசித்தவருக்கு இயலா வெறுப்பு, மறதியற்றமறதி, நினைவுகூறத்தகாத காலம் என்பவற்றின் குறியீடாக மீந்து நிற்கிறார். இந்தக் கையறவுநிலை பித்தம் நிறைந்தது.

. இந்த நிலையை சடங்குகள், சமய நம்பிக்கைகள், மறுபிறப்பு, அரூபஉடல், எங்கும்நிறைந்த நிலை, பதிலீட்டு குறிப்பொருள்கள் என கற்பனைகள் மூலம் கையாள்வதைத்தவிர தனிமனிதர்களுக்கு வேறு வழியில்லை. எல்லா சமயங்களும் மரணம் பற்றிய மர்மத்தையே தமது அடிப்படை வலிமையாகக் கொண்டுள்ளன. பிறப்பை விட இறப்பைக் கையாள்வதன் உத்தி மதங்களை எப்போதும் செயல்ஆற்றல் உடையவை களாக வைத்திருக்கின்றன. மரணத்தை அரசியலும் வரலாறும் கையாளும் வழிமுறைகள் வேறுபட்டாலும் மனிதர்கள்மீது அவற்றிற்குள்ள முழு கட்டுப்பாடும் மரணத்தை முன் நிபந்தனையாகக் கொண்டே இயங்குகிறது. இதனை உடல் மீதான கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உடல்,உயிர் உறவைக் கையாளும் உத்தி மீதான கட்டுப்பாடு என்பது சரியாக இருக்கும். உயிர் நீக்கும் உரிமையைக் கையாளும் உத்திகளே அரசியலின் அடிப்படை என்பது நுண்மையான தளத்தில் நமக்குப் புரியவரும் . உடல்,உயிர்; உயிர்ச்செயல்,குறியீட்டுச் செயல் என்பவற்றைக் கட்டுப்படுத்தும், வடிவமைக்கும், தீர்மானிக்கும் செயல்இயந்திரமாக அரசியல், அரசு, அமைப்புகள், அறிவுக்கட்டுமானங்கள் என்பவை நம்முன் நிற்கின்றன. இங்கே தனிமனிதர்கள் என்பவர்கள் யாரும் இல்லை. இவற்றின் அளவீட்டுத் தரப்படுத்தல், வரிசைப்படுத்தல், வகைப்படுத்தல், பயன்மதிப்பு அடையாளம் என்பவற்றைக் கொண்டு தனிமனிதர்களான நமக்கு இருப்பும் அதன் அர்த்தமும் வழங்கப்படுகிறது. நமது இருப்பும் அதன் அர்த்தமும், உயிர்வாழ்வும், உயிர்நீப்பும் எதனால், எங்கு, எப்படி எவர்மூலம், எந்த எந்தக் காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றதோ அங்கே நமக்கான உரிமையை முன்வைக்கும் போது நாம் நமது அரசியலைத் தீர்மானிக்கிறோம், தேர்ந்தெடுக்கிறோம் திட்டமிடுகிறோம். இந்தத் திட்டமிடல்

, தேர்ந்தெடுப்பு நமது அரசியல் செயல்பாடு. நமது இருப்பு பற்றியும் பிறரின் இருப்பு பற்றியுமான எல்லா சிக்கல்களும் இங்குதான் குவிந்து கிடக்கிறது. இந்த சிக்கல்களைக் கையாளும் பொழுது நாம் தவிர்க்க முடியாமல் உயிர்நீக்கம், உடல்அழிப்பு என்ற மையவிசைகளைக் கையாள்பவர்களாக மாறிவிடுகின்றோம். அந்த உத்திமுறையை நாம் இன்னும் கடந்துவிடவில்லை. அந்த உத்திமுறையை மிகப்பல வடிவங்களில் பெருக்கி, விரித்து, வலிமையாக்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘போர்என்ற அந்த புராதன உத்திமுறை மிகஆற்றல் வாய்ந்த அழகியல் உருவகங்களால் பெருக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த அழகியல்தனிமனித இழப்பைப் பொருளற்றதாக்கி விடுகிறது. அதே சமயம் இன்று அரசுகளின் முதல் கடமை பயங்கரவாதத்திலிருந்து மக்களைக் காப்பது என்ற தளத்தில் உலக அரசியல்நகர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பயங்கரவாதம்என்ற உருவமற்ற தாக்குதலின் தொடக்கம், அடிப்படை இன்றைய நவீனஅரசுகள் மற்றும் போர் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதோ நவீனஅறிவியல் என்ற அறிவுக்கட்டுமானத்தின் விளைபொருள் என்பதோ, உலக மேலாதிக்க ஒருமைப்படுத்தலின் பின்விளைவு என்பதோ விளிம்பு நிலை அரசியல் சொல்லாடலாக மிஞ்சி நிற்கிறது.இன்று எல்லாவித மறுப்பு

, எதிர்ப்பு, மாற்று அடையாள அரசியல் சொல்லாடல்களும் பயங்கரவாதம்என்ற முனைப்படுத்தப்பட்ட எதிர்ச் சொல்லாடலுடன் உறவு படுத்தப்பட்டு அழித்தொழிப்பிற்கு உரியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன. அப்படியெனில் இனியான மக்கள்சார் மாற்றுஅரசியல் சொல்லாடல் மற்றும் செயல்முறை எவ்வகையாக இந்தப் போர் அரசியலைக் கையாளப் போகிறது? வன்முறை, எதிர்ப்பு, தற்காப்பு, மக்கள் எழுச்சி, விடுதலைப்போராட்டம், மக்கள்போராட்டம், அடையாள அரசியல், வர்க்கப்போராட்டம், விடுதலை அரசியல் என்பவை இந்த அரசு ராணுவ பங்கரவாதச் சூழலில் எவ்வகையாக மாற்று வரையறை பெறப்போகின்றன? என்ற கேள்விகள் நம்மை தாக்கத் தொடங்கிவிட்ட சூழலில் தான் ஈழம்என்ற வரலாற்றுத் துயரமும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. இவை குறித்த கேள்விகள் மற்றும் மறுஆய்வுகளுக்கு எந்த அவகாசமும் இன்றி ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது

. இந்த இனப்படுகொலையின் தனிமனித இழப்புகள் குறித்த எந்தவித மொழிச்செயலும் மேலும் ஒரு வன்முறைத் தாக்குதலாகத்தான் இருக்கும். அதே வேளை ஒர் இனம் சார்ந்த, மொழி சார்ந்த அடையாள அரசியல் மற்றும் தன்னாட்சி அரசியல் என்ற வகையில் தொடர்ந்தும் பேசப்படவேண்டியதாக, மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக, மறுவிளக்கத்திற்கு உள்ளாக வேண்டியதாகவும் உள்ளது.தமிழ்மொழி

, இனம், பண்பாடு என்பவற்றை அடிப்படையாக வைத்து கட்டப்பட்ட ஒர் அரசியலின் மூலம் வளர்ந்து, விரிவடைந்து துயரங்களை நிகழ்த்தி சிதைத்து போன ஒரு வரலாற்றுத்தளம் என்ற வகையில் உலக அரசியல் பின்புலத்தில் ஈழப்போர்என்பது அணுகப்படுவதற்கும் தமிழ் அரசியல் பின்புலத்தில் ஈழத்துயரம்அணுகப்படுவதற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. இது இழப்புகள் பற்றிய அரசியல். இனம்,மொழி என்ற கட்டமைப்பு மூலம் பிணைக்கப்பட்ட, இருப்பு மற்றும் அழிப்பு என்பதன் அரசியல். அதனால் உலக அரசியல் வல்லுனர்களும் போர்முகவர்களும் உளவுத்துறை அறிஞர்களும் ஊடகவியலாளர்களும் அமைச்சர்களும் இந்த அழிப்பை, துயரை அணுகுவது போல தமிழ்என்ற சொல்லாடல் களத்திற்குள்ளிருந்தும் அணுக முடியாது. ஏனெனில் தன்னிலைஉருவாக்கம் என்ற அரசியல் செயல்பாட்டுடன் உறவுடையது இது. தமிழ்த் தன்னிலை, தமிழ்த் தன்னடையாளம் என்பவை உருவாகும் களத்தில் அரசியலுக்கு என்ன இடம் உண்டோ அதே இடம் ஈழம்பற்றிய அறிதல்,அணுகுமுறைகளுக்கும் உண்டு.ஒவ்வொரு சமூகத்திற்கும் இரு முனைப்புள்ளிகள் தேவை

; ஒன்று அச்சமூகத்தின் பெருந்திளைப்பு மற்றது பெருந்துயரம். இவற்றின் கூறுகள் பண்பாடுகளின் ஒவ்வொரு இழையிலும் படிந்தே இருக்கும். இந்த உணர்வுப் புள்ளிகளுடன் தனிமனிதர்கள் பிணைந்தும் விலகியும் தமது உளவியல் அடையாத்தைக் கட்டிக்கொள்ள முடியும். இவை ஒவ்வேறு விகிதத்தில் கலந்தும் பிரிந்தும் சமூக உளவியலை உருவாக்கும் தன்மை உடையவை. அவ்வகையான ஒரு சமூக உளவியல் உருவாக்கத்துடன் இனி வரும் காலத்தில் இணைந்து இயங்கும் ஒரு நினைவு மற்றும் துயரத் தொகுதியாக வடிவம் கொண்டிருப்பதுதான் ஈழம்என்ற கனத்த உருவகம். இதனை மறதிக்குள் புதைக்கும் உருவழிப்புச் சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலில் பெருகும் என்பதும்

, கடந்த இருபது ஆண்டுகளாக உருவழிப்பு, நினைவு மறைப்பு சொல்லாடல்கள் அதிகம் பெருகியுள்ளன என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிவை என்றாலும் அரசியல் களத்தில், பண்பாட்டு அரசியல் உருவாக்கத்தில் இலக்கிய மாற்றுச் சொல்லாடல்களில் இந்தத் துயர்சார் அரசியல்(Politics of agony)இடம்பெறவில்லை என்றால் இனி தமிழ்மொழியில் அரசியல், அடையாள தன்னிலைக் கட்டுமானச் சொல்லாடல்கள் இல்லை என்றே பொருள்படும். இந்த மறதிக்கெதிரான அரசியலின் ஒரு பகுதியாக, ‘துயர்சார் அரசியல்குறித்த நினைவுக் குழப்பங்களின சில பகுதிகளாக இவற்றைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

மாறுதல் கால பயங்கரங்கள்

(Horror of Transition) உலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு

, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள் ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனியகால மாறுதல்கள் என்பவை உலகவரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல் சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமைநிலைக்குத் தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அந்நியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பலசமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன. இந்த காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின்மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின. நவீன மதிப்பீடுகளும்

, நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன. இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒருபுறமும், அந்த ஒடுக்கும் சமூகங்களின் அறிவும் அமைப்புகளும் தமக்குள் ஊடுருவி இயக்கிக்கொண்டிருப்பதன் முரண் மறுபுறமும் என ஒரு ஒவ்வாமை, பொருந்தாமை என்பது அடிமைப்பட்ட நிலங்களின் ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது. இந்த மாறுதல்கால பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர் கொண்டு தனதாக்கம் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டது. அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்கால பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது. ஒரு நவீனகால ஒருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பவற்றை வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக இது இருந்து வந்தது.தன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உத்திகளை வெவ்வேறு செயல்வடிவங்களை கைக்கொள்கின்றன

. போர் என்பதும் அதில் ஒன்று. புராதனமானதும் அதேசமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல் கால பயங்கரங்களில் பலமிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச்சமூகம் நேரடியாக ஒரு நவீனத்தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் கால பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாறிவிடுகிறது. இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது உருவாக்கிக்கொள்கிறது.இலங்கை அரசு சிங்கள மொழி

, இன அடையாளத்தை மையப்படுத்தி தன் நிலத்தை வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி, இன அடையாள அரசியலை மும்முரப்படுத்தி விடுகிறது. இந்த எதிர்மைகள் இலங்கை அரசியல், சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக இருந்து விட்டது. மதம், மொழி, இனம் என்ற வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே மாறுதல் கால பயங்கரத்தின்பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி விடுகிறது. சிங்கள இனம்

, பௌத்த மதம் என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் தமிழ்என்பது அரசுஅற்ற போர்க்குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு அரசு, இராணுவம் என்பது தமிழ் மக்களை உள்ளடக்காது அடிமை நிலையில் வைத்து, பணிந்துபோகும் மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறையைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தன்னை நிறுத்திக் கொண்டது. மாறுதல் கால பயங்கரத்தின் மிக அவலமான பகுதி இது. இந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957இன் பண்டாரநாயகாசெல்வநாயகம் ஒப்பந்தம், 1965இன் டட்லிசெல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை மதிக்கப்படவில்லை.)1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது.அரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது.இந்தப் போர்ச்சூழல்

இடைநிலை அரசியல் சொல்லாடல்எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, எளிய, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போராளியாக இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாகத் தோற்றம் பெறுகிறது. அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபத்தி, தியாகம், புனித கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொள்வோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர். இது தாமே உருவாக்கிக்கொண்ட உயர்வாக்கம் என்பதை விட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச்சூழல் அவர்களுக்கு இடம் தருகிறது. இந்த அடையாளம் ஒருவகையில் மீறப்படவோ, மீள இடம் அளிக்கவோ முடியாத நிலையை அடையக்கூடும். இந்த சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது.மாறுதல் கால பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம்,நீதித்துறை, பொருளாதார கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறுவகை சமய நம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளை கொண்டவர்களாக இருந்தால் இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும். ஈழப்போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக்குலைவு. இலங்கை அரசு கையாண்ட வன்முறை அதனை மாறுதல்கால பயங்கரத்தை நோக்கித் தள்ளியது. பின் அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது. தற்போது மீண்டும் தேச அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுபட்ட நாடு என்பவை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள் தற்போது உயிர்வாழ்வுஎன்பதை மட்டும் பெற்றவர்களாக அரசின் கருணையின் கீழ் வாழவேண்டியவர்களாகி உள்ளனர்.இதுவரை கொல்லப்பட்ட தமிழர்கள்

, போராளிகள், அரசு படையினர் எல்லோரும் இந்த மாறுதல்கால பயங்கரத்திற்கு பலியானவர்களாகின்றனர். கொல்லப்பட்ட தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப்போன நிலையை, பேதலித்த கூட்டுமனநிலையை உருவாக்கக்கூடியது. இந்த மனநிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்தகால போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக வெவ்வேறு வகைகளில் வெளிப்படும். எல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும் எளிய மனித உணர்வுகளே உள்ளன

. இந்த எளிய அடிப்படை உணர்வுகளே எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது மீந்து நிற்கும் இலங்கைத் தமிழர்களிடம் இருப்பது இந்த அடிப்படை உணர்வுகள், அச்சங்கள், எதிர்பார்ப்புகள் சார்ந்த வெற்று மனிதநிலை, இந்த வெற்று மனிதநிலையைக் கூட ஒரு அரசு அடையாளப்படுத்தியே அணுகும் என்பதுதான் இதில் உள்ள அவலம். அவர்கள் வெற்றுநிலை அடைந்த தமிழர்கள்’, வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கென தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசு மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். இது இன்னும் ஒருவகையான மாறுதல்கால பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும். அதற்கு தமிழ்ச்சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்.

 

 

துயர் சார் அரசியல்

(Politics of agony) எல்லா போராளிக் குழுக்களையும் ஈழப்பின்னணியில் நாம் ஒன்றாகப் பார்க்க வேண்டிய நிலையை அடைந்திருக்கிறோம்

. பல்வேறு இயக்கத்தினரும் இதனை ஏற்க மறுக்கலாம். ஆனால் ஒன்றை ஒன்று அழித்து பிறகு மீந்துநின்ற ஒன்றைப் போராளி அமைப்பும் அழிக்கப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியவர்களாகின்றனர். தமிழ்இன விடுதலை, தமிழர்த் தாயகம் என்ற வகையில் எல்லா இயக்கத்தினரும் ஒற்றை இலட்சியத்திற்காகவே போராடினர். அணுகுமுறைகள் வேறுபட்டாலும் எல்லாரும் ஒரே கனவுநோக்கியே தம்மை பலியாக்கினர். குழுக்கள்

, படைகள், முகாம்கள் என்பவை வேறுபட்டாலும் இயக்கும் கருத்தியல்ஒன்றாகவே இருந்தது. தற்போது யாரும் இல்லை. தனிமனிதர்களைத் தவிர. இந்த நிலையில் போராளிகள்என்ற வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தவர்கள் எல்லோரும் ஒரு துயர்சார் அரசியலின் குறியீடுகள் ஆகின்றனர். இந்த போராளிப் பாத்திரத்தை அவர்கள் வகித்தபோது கூட துயர்சார் அரசியலின் பகுதியாகவே இருந்தனர். ஆயுதங்களால் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். இந்த விளிம்பு மனநிலைஅல்லது இறுதிகட்ட நிலைப்பாடுஎன்பதை இவர்கள் எடுப்பதற்குப் பின்னுள்ள அந்த வரலாற்றுக் களம்தான் துயர்சார் அரசியலால்நிரம்பிக் கிடக்கிறது.அறுபதுகளின் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஈழப்போராட்டத்தின் முன்னோடிகள்

. அறுபது, எழுபதுகளில் மாணவர்களாக இருந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு அப்போது தாம் கூடிப்பேசுவதும், குழுவாக இணைவதும், விவாதிப்பதும், அமைப்பு கட்டுவதும் எல்லாம் மிகநீண்ட அவலம் நிறைந்த ஒரு காலகட்டத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது என்றோ, சில இலட்சம் மக்களைக் கொன்று பல இலட்சம் மக்களை நிலம் பெயர்ந்து ஓடச்செய்ய இருக்கிறது என்றோ தெரிய வாய்ப்பு இல்லை. ரஷ்ய

, சீன, கியூப, வியட்நாமிய முன் மாதிரிகளும் சிங்கள இளைஞர்களின் மக்கள் விடுதலைப் படையின் எதிர்ப்புச் செயல்களும் அவர்களுக்கு முன்னே நின்றன. மாபெரும் விடுதலைப்போர் ஒன்றைத் தொடங்குவதன் மூலம் மக்களுக்காக தியாகம் செய்தவர்களாக வேண்டும் என்பது ஒரு உந்து சக்தியாக இருந்தபோதும், வெற்றியடைவோம் என்ற ஒரு கனவு அவர்களை செயல்படவைத்தது. சிறுசிறு வன்முறைகள் மூலம் அரசை அச்சுறுத்தவும், தம் எதிர்ப்பை தெரிவிக்கவும் தொடங்கிய அவர்களுக்கு அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்பது கூட தெரியாமலேயே இருந்தது. இந்திய நிறுவனங்களின் நேரடி திட்டமிடலும் உதவியும் களப்பொருள்களும் முகாம்களும் கிடைக்கும் வரை எல்லா போராளிக் குழுக்களும் ஆதரவற்ற தனியர்களாகவே தவித்தும் பதுங்கியும் தப்பியும் காலம் கடத்தவேண்டிய நிலையில் இருந்தனர். இவர்களிடம் ஒன்றும் இரண்டுமாக இருந்த கைத்துப்பாக்கிகள் இவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பையோ பலத்தையோ வழங்கிவிடக் கூடியதல்ல. இந்தச் சூழலிலும் கூட அந்தத் தலைமுறையினர் ஏன் போரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களை இயக்கிய கூட்டுமனநிலை, தனிமனித உளவியல் என்ன என்பதை வெளியிலிருந்து புரிந்து கொள்வது கடினமானது. ஏதோ ஒரு வித பாதுகாப்பின்மை, பொதுக்களத்தின்மீது நம்பிக்கை இன்மை, தடுமாற்றத்துடன் கூடிய அச்சம் என அவர்களை அலைக்கழித்திருக்கிறது. தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் கோபத்தை,

வஞ்சத்தை ஏற்படுத்த மாணவர்கள் என்ற அவர்களுடைய அடையாளமும் பின்னமுற்றதாக அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இந்த அந்நியநிலை கடினமான பாத்திரத்தை ஏற்கும் நிலைக்கு அவர்களைக் கொண்டுசென்றது. இலங்கை தேசிய அமைப்புக்குள் அவர்கள் விளிம்பில் வைக்கப்பட்டிருப்பதான ஒரு பொதுஉளவியல் உருவானது. உலக அளவிலான அரசியல் அழுத்தங்கள் பல்வேறு சமூகங்களில் உள்உடைவுகளை ஏற்படுத்தியிருந்தன. ஏகாதிபத்தியங்களின் போருக்குப் பின்னான அரசியல்,பொருளாதார சதித்திட்டங்கள் மூன்றாம் உலக நாடுகளை மூச்சுத்திணற வைத்திருந்தன. தேசிய அரசுகளோ மக்கள் என்பவர்களைப் பற்றிய அக்கறையற்று நிலையான ஆட்சி, இறையாண்மை என்பவற்றை மையப்படுத்தியே தமது திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தன. நவீன அறிவியலின் கருவிகளும் கட்டுமானங்களும் எல்லா சமூகங்களின் உள் கட்டமைப்பிலும் ஊடுறுவி புரிந்து கொள்ள முடியாத பக்கவிளைவுகளை

, நசிவுகளை உருவாக்கிக்கொண்டிருந்தன. இந்தச்சூழலில் மேற்கின் புதியதலைமுறையினர் கருத்துச் சுதந்திரம், பாலியல் சுதந்திரம், மாற்று வாழ்க்கைமுறை என்பன பற்றிய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆசிய நாடுகளின் இளைஞர்கள் அரசியல்வயப்பட்ட மாற்றுகளைத் தேடிக்கொண்டிருந்தனர். சோஷலிசம், முதலாளித்துவம் என்ற எதிர்வுகளுக்கிடையே உலக அரசியல் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. உலகமயமான பதட்டமும், நிலம் சார்ந்த பாதுகாப்பினையும் இணைந்த துயர்சார் அரசியலின் உளவியல் சிக்கலை நாம் இந்தக் காலகட்டத்தில் காணமுடிகிறது. அதே சமயம் இலட்சியவாத, முழுவிடுதலைச் சொல்லாடல்களும் புழக்கத்தில் இருக்கின்றன. போராளிகளாக மாறிய தலைமுறையினரின் பின்புலம் இந்தச் சிக்கல்கள் ஊடாக உருவாகியது என்பதுடன், அவர்களை சிறைப்படுத்தியும், சித்திரவதை செய்தும் கடினப்படுத்திய அரசுகளின், நிறுவனங்களின் பின்புலமும் இதே சிக்கல்களையே எதிர்கொண்டிருந்தன. ஆனால் அரசுகள், அமைப்புகள் என்பவற்றை மறுசீரமைப்பு செய்யவும் பலப்படுத்தவும் பன்னாட்டு வலைப்பின்னல் அறிவுத்துறை, ஆய்வுத்துறைகள் செயல்பட்டது போல பாதிக்கப்பட்ட தலைமுறையினரை, துயர்சார் அரசியலில் சிக்கிய மக்களைக் காக்க உலகஅளவிலான எந்த வலைப்பின்னலும் உருவாக்கப்படவில்லை. ஒரு வகையில் ஆயுத உற்பத்தியாளர்களே மக்கள் அரசியலில் விரக்தியடைந்த பிரிவினரையும் துயர்சார் அரசியலில் நசுங்கிய பிரிவினரையும் இயக்கக்கூடியவர்களாக மாறினர்

. இந்த முடிவற்ற உள்முரண் பின்னாளில் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச குற்ற வலைப்பின்னல்கள், ஆயுதக் கடத்தல்கள், போதைப் பொருள் சந்தை என்பவை விடுதலைப்படைகளை, மக்கள் போராளிகளை மறைமுகமாக இயக்கும் நிலைக்கு கொண்டுசென்றது. இந்த குற்ற வலைப்பின்னல்கள் எல்லாமும் ஏதோ சில அரசுகளின் பின்புலம் இன்றி நிகழவில்லை என்பது தற்போது வெளிப்பட்டிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துருவ அணிச்சேர்க்கைகளே இவற்றை இயக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. ஈழப்போராட்டக்களத்தில் இந்தியத் தலையீடும் மிகத்தவறான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.இயக்கங்கள் ஒன்றை ஒன்று தாக்கி அழித்துக் கொள்வது, இயக்கங்களுக்குள்ளே ஒரு தலைமை இன்னொன்றை அழிப்பது என்பது தொடங்கி அரசியல் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் முழு ராணுவக் கட்டுமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது வரை திசைக்குழப்பங்கள் இந்த உளவு அமைப்புகளின் திட்டமிட்ட செயலால் நிகழ்ந்தவை. இந்தத் திரிபுகள் மக்கள்சார் சமூகத்தை மிகக்கடுமையான பாதிப்புக்கு உட்படுத்திய போதும் மறுபரிசீலனை

, கட்டுமானமாற்றம் என்பதற்கு இடமளிக்காத ஒரு அழிவு நோக்கிய நகர்வை போராட்ட அரசியல் நிகழ்த்திக்கொண்டிருந்தது. இன்னும் கணக்கிடப்படாத மக்களைப் பறிகொடுத்து தானும் அழிந்து வரலாற்றுத் துயரமாக மீந்து நிற்பதன் பின்னணியில் ஈழப்போராட்டம் பல்வேறு துயர்சார் அரசியல் சொல்லாடல்களை உருவாக்கி விட்டது.இறுதிவரை பேச்சுவார்த்தை, சமாதானம், இடைக்கால ஒப்பந்தம் என்பதன் சாத்தியப்பாடுகளை சிந்திக்காமலேயே தற்கொலை முடிவை எடுக்க அந்த அமைப்பை உந்திய சக்தி, குழு உளவியல் எது என்பது சிக்கலான பல கேள்விகளை எழுப்பக்கூடிய நிலையிலும் நமக்குக் காட்சியாக நிற்பவை அந்த இறுதி நாட்கள். மக்கள் மிகக்குறுகிய அந்த நிலப்பகுதிக்குள் சிக்கி பட்ட வாதைகள், வலிகள், இழப்புகள். இழப்பு என்பது மொழியை அழித்து பேதலிக்கச் செய்யும் நிலையை அடைந்தபின்; அச்சம், அதிர்ச்சி என்பவை நரம்பு மண்டலத்தின் பாதைகளைத் தாண்டியபின் மீந்துநின்ற வெற்று உடல்நிலை. இந்த வெற்று நிலைக்குச் சென்று திரும்பிய பின்னான சிதைவு நிலை. ஆழிப்பேரலைக்குப் பின் நேர்ந்த ஒரு உயிர்மிச்சம். இவற்றை இனி ஈழத்தமிழ்ச் சமூகம் எப்படி அரசியல் சொல்லாடலில், அடையாளச் சொல்லாடலில் கொண்டுவரப்போகிறது. இந்த நினைவும் மறதியும் தமிழ் அரசியல் சொல்லாடலில் எவ்வடிவங்களில் ஊடுருவப்போகிறது என்பவை வெறும் தகவல் மற்றும் அறிவுத்துறைசார் கேள்விகளாக இருக்க முடியாது. ‘துயர்சார் அரசியலைகையாளவும், மாற்றவும் எதிர்கொள்ளவும் மாற்றுவழிகளை பன்மையான பார்வைகளுடன் கண்டறியவுமான அழுத்தத்தையும் நிர்பந்தத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

தாள முடியாத நிகழ்வியல்

(Unbearable reality)தனித்தமிழ் ஈழம்

, தமிழீழத் தாயகம் என்ற இலக்கை மட்டுமே வைத்து ஒரு போர் அரசியல், அரசுநீக்க இயக்கம் தொடங்குதல் என்பதே இலங்கை தேசப்பின்னணியில் மிகவும் சிக்கலானது. அது ஒரு தீவுக்குள் நிரந்தரப்பகை கொண்ட இரண்டு நாடுகளை அடைத்து விடும் ஏற்பாடாகவே இருக்கும் என்றாலும் தன்னாட்சி முறை நோக்கிய ஏற்பாட்டினை முன்வைத்து அரசியல் தீர்வுகள் பேசப்பட்டிருக்க வேண்டும். இதனை இலங்கை அரசு தொடக்கத்திலிருந்து செய்யத் தவறியதுடன் பழிவாங்கும் நடவடிக்கையிலும், பலியெடுக்கும் நடவடிக்கையிலும் இறங்கியது. இலங்கை சிங்கள மக்களுக்கே, தமிழர்கள் அதன் இரண்டாம்நிலை குடிமக்களே என்றதும் தமிழரின் நிலம்சார் உரிமைகளைப் பறித்ததும் சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ்ச்சமூகத்தை பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியது. திட்டமிட்ட குடியேற்றங்கள், வெளியேற்றங்களின் மூலம் தமிழர் பகுதிகளை இனநீக்கம் செய்யும் முயற்சியும் தேசியத்தன்மை கொண்ட நவீனஅரசு செய்யக்கூடாத ஒன்று. இத்துடன் வெகுமக்கள் வெறி உணர்வுகளை சிங்கள மேலாண்மைச் சொல்லாடல்களாலும், திட்டமிட்ட வஞ்சம் தீர்ப்பு நடவடிக்கைகளாலும் தூண்டி இனப் படுகொலைகளை நிகழ்த்திய அரசியல் தலைவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி எதிர்வஞ்சத் தீர்ப்பு மற்றும் தற்பாதுகாப்பு என்ற நிலைக்குத் தள்ளினர். இந்தப் பின்னணியில் போராளிகளுக்கான வரலாற்று, சமூகவியல் நியாகங்கள் ஏற்பட்டு விடுகின்றன.பின்னாட்களில் முழுமையான போர்ச்சூழலில் போராளிகள் குறித்து மக்கள் பல கசப்புணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் தமது இளைஞர்கள் தமிழரின் வாழ்வுரிமையை, விடுதலையை, புதிய நாட்டினைப் பெற்றுத்தருவார்கள் என்றே முதல் கட்டத்தில் நம்பியிருந்தனர். முழுமையான அளவில் படைகளைக் கொண்டிருந்த நான்கு போராளிக் குழுக்களில் ஏதோ ஒன்றின் மீதோ அல்லது மொத்தமாக எல்லா போராளிக் குழுக்களின் மீதோ நம்பிக்கை வைத்தனர். எல்லா போராளிக் குழுக்களையும் விடுதலைப்புலிகள் அழித்தும் கலைத்தும் இல்லாமலாக்கும் வரை மக்களுக்கு இந்த உள்முரண்பாடு முழுமையாக புரியாமலேயே இருந்தது. ஆனால் மக்கள் மற்றும் விடுதலைப்படையினர் என்ற இரு தனித்தனி பகுதிகள் உருவானதும், போர்ச்சூழல் மக்களின் புரிதல் எல்லையைத் தாண்டிச் சென்றதும் மக்கள் நிலையில் மட்டுமின்றி புறத்தே உள்ள அரசியல் அக்கறை கொண்டோருக்கும் தாள முடியாத நிகழ்வியலாக, அச்சுறுத்தும் நடப்பியலாக மாறியது.இரண்டு படைகளுக்கு நடுவே சிக்கிய அச்ச நிலையை மக்கள் அடைந்தபோது போர் முடிவுக்கு வந்தால் போதும் என்ற உணர்வே பொதுஉளவியலாக வெளிப்பட்டது

. இயல்புவாழ்க்கை என்பது இல்லாத ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகள், நிரந்தர தாக்குதலின் கீழ் வாழநேர்ந்து விட்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பது எண்ணிப்பார்க்கவே நடுக்கத்தை எற்படுத்தக்கூடிய நிகழ்வியல். இந்த தாளமுடியாத நிகழ்வியலின் கீழ்தான் ஏற்கப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் ஈழத்தமிழ்ச்சமூகம் வாழநேர்ந்தது. முடிவு என்பது தெளிவற்றது. வழிமுறைகள் மிகவும் பூடகமானது. அரசு பொய்களை பரப்பி, சதிகளைத் திட்டமிட்டு தனது வெற்றிக்கு முனைந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் படையினருக்கோ போராடுதல் என்பதைத்தவிர வேறு திட்டங்களும் இல்லாமல் போய்விட்ட நிலை. தற்கொலைப்படை, இளையோர்படை, பதுங்குகுழி வாழ்க்கை என்பவை வாழ்வியல் பொருண்மைகளை குலைத்து உயிர்வாழ்தல் என்பதை ஓயாத ஒரு விபத்து நிலையில் வைத்திருக்கக் கூடியது. போராளிகளும் சரி

, அரசு ராணுவமும் சரி உண்மை நிலைகளை சொல்லவோ வெளிப்படையாகவோ இருக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களில் விடுதலைப்புலிகள் இயக்கச் சார்பு கொண்டவர்கள் தினம் நிகழும் மோதல், விடுதலைப் போராளிகள் வெற்றி, ராணுவத்தினரின் இழப்பு என்பவற்றைக் கணக்கிட்டு நாட்களைக் கடத்தும் நோய்நிலைக்கு செல்கின்றனர். எல்லாம் ஒரு கட்டத்தில் அமைதிப்பேச்சு வார்த்தை, போர்நிறுத்த ஒப்பந்தம், தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வுகள் என்ற நிலையை அடைந்தபோது அரசின் திட்டம் தெளிவாக இருந்தது. 2002 க்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கி நான்காம் ஈழப்போரின் முடிவுவரை இலங்கை அரசு இறுதி இலக்கைத் தீர்மானித்து விட்டதுடன் அதன் வெற்றியும் பன்னாட்டு ஒத்துழைப்புடன் உறுதி செய்யப்பட்டு விடுகிறது.இந்திய அரசு என்பதைவிட ஜனநாயக அமைப்புகள் என்பதைக் கடந்த போர் நிறுவனத்தின் பகுதியான இந்திய வல்லுனர்கள் குழு என்பது உலக அரசமைப்புகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையுடன் இலங்கையில் ஈழப்போராட்டத்தை முழுமையாக இல்லாமலாக்கிவிடும் முடிவினை எடுத்துவிட்டது. சீன, பாகிஸ்தானிய ஆலோசனைகளும் ஒத்துழைப்புகளும் இலங்கைத்தீவை பன்னாட்டு முதலீடு மற்றும் சந்தைக்கு ஏற்ற ஒரு நாடாக மாற்றுவதை விரைவு படுத்துகின்றன. இலங்கை ராணுவத்தின் பதுங்குமுறை உத்தி புதிய வகை தாக்குதலை முன்னெடுக்கிறது. ராணுவத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்றாக மாறுகிறது.இந்நிலையில் ஒரு அரசு தன் மக்கள் மீது செல்லுத்தக்கூடாத தாக்குதலைச் செய்ததன் மூலம் இலங்கை அரசு பயங்கரவாதத்தன்மை அடைகிறது

. விடுதலைப் படையினரோ மக்களைக் காக்க இயலாத தமது போர் எல்லைகள் தெரியாத உறைநிலையை அடைகின்றனர். இதற்குமேல் உலக உளவு மற்றும் போர் உத்திப் பின்னணியில் விடுதலைப் படையினர் செய்வதற்கு ஏதும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. ‘மக்கள்இப்போது உயிர் பிழைப்பது தவிர வேறு தேவை எதுவும் இல்லாத நிலையில் நிறுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு தொழில்நுட்ப முறையில் இனி சரணடைதலையோ, போர் நிறுத்த ஏற்பாட்டையோ ஏற்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்ட நிலையில் அதன் கொலைவெறி மட்டுமே முழு நியாயமாகிறது. அரசு முழுமையான அழித்தொழிப்பிற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டது. நவீன அரசு, மனித உரிமைகள், தேசியநியதிகள், மக்கள் சார்பு என்ற எந்த தர்க்கமும் அற்ற முழுமையான அழித்தொழிப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்ற நிலையை இலங்கை அரசு எடுத்து விடுகிறது. இந்த அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கொலைவெறிதான் இதுவரையிலான ஈழம்பற்றிய அடிப்படைகளை உறுதிசெய்து இது ஈழம், இது தமிழ் இனம், இவர் தமிழர் என்பதைக் காட்டித் தருகிறது. உலகின் அமைதி நேசர்களும்

, உலக வல்லாண்மை மேலாளர்களும் இது இயல்பான ஒரு அரசின் நடவடிக்கை என்பது போல முடிவை நோக்கிக் காத்திருந்தனர். இந்த கட்டதில் தமிழகத்தின் நிலைதான் அவ்வளவு எளிதாக விளக்க முடியாத அவலமான நிசப்தத்தில் மூழ்கி இருக்கிறது. இதனை சிறு கட்சிகளும், சிறு குழுக்களும் தவிர வேறு யாரும் துயரமாகவோ வலியாகவோ முன்வைக்கவில்லை.இந்த நிலைக்கு முதல் காரணம் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெகுசன உளவியல். இரண்டாவது உள்நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகளின் திட்டமிட்ட பொய்கள். ஈழப்போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய, கூறிவரும் எந்த கட்சிக்கும் அதன் அடிப்படைகளை கையாளுவதில் அக்கறை எதுவுமில்லை. விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் பொதுஉளவியல் ஒன்று 1991க்கு பிறகு உருவாகி விட்டது. அதனை தெரிந்திருந்தும் ஈழ ஆதரவு தலைவர்களும் கட்சிகளும் உணர்வு முழக்கங்களைநாடக நிகழ்வாக்கி உலக அரசியலில் இருந்து ஈழப்போராட்டம் என்பதையும் போராளிகளையும் அந்நியப்படுத்தி வைத்தனர். இவர்களுக்கும் இந்த முடிவு தெரிந்தே இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளின் உலக அரசியல், சமூக மாற்றங்களைக் கவனித்து வரும் யாரும் விடுதலைபுலியினரை போர் மற்றும் இறுதியுத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்கும்படி கூறமுடியாது. ஆனால் தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் அதனைக் கூறிவந்தனர். விடுதலைப்படையினருக்கு தவறான, பொய்யான உறுதி மொழிகளைத் தந்து அவர்களின் அழிவை நோக்கித் தள்ளினர்.இதற்குக் காரணம் தமிழக மக்களிடம்

, தமிழ்ச் சமூகத்திடம் அடையாள அரசியலோ, மொழி பண்பாட்டுத் தன்னிலையோ உருவாகாததுதான் என்பதை மேற்பரப்பில் கண்டு கொள்ளலாம். ஆனால் தன்னிலை, சமூக அடையாளக் கட்டுமானம் என்பதை பற்றிய குழப்பமான நிலையில் உள்ள தமிழரின் பொதுஉளவியல் எந்த அரசியல் நிலைப்பாட்டையோ, உணர்வு சார்ந்த இன அடையாளத்தையோ ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் இதன் உள்ளடங்கிய நிகழ்வு. துயரம் உணரா நிலையை எடுத்த தமிழகத்து வெகுமக்கள் அரசியல் தனது எதிர்காலம் குறித்தும் கூட இனி ஆக்கம் சார்ந்த எந்த முடிவையும், திட்டத்தையும் எடுத்துவிட முடியாது.அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலையில் தமிழக கூட்டு நினைவும்

, நினைவிலி நிலையும் உள்ளது. ஈழப்போரின் தாளமுடியா நிகழ்வியலில் சிக்கி குழப்பங்களை அடைவது ஒருதளம். அதை முழுமையான மறதிக்கு உள்ளாக்கியது என்பது தமிழக அரசியலைப்பற்றியும் பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் அறிவுருவாக்க முறைபற்றியும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.ஈழ விடுதலைப்போரில் மிகப்பெரும் குழப்பங்கள், பயங்கரங்கள், சதிகள் ஏற்பட்டு இருந்தாலும் அதனைத்தமிழக அரசியல் தொடர்ந்து பேசியும் கையாண்டும் வந்திருக்க வேண்டும். போர் நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசியல் நிலைக்கு விடுதலைப் படையினரை கொண்டுவர அழுத்தம் தந்திருக்க வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளின் உலகஅரசியல் மாற்றங்களை அவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. போர் என்பதை நியாயப்படுத்தி வரும் இந்திய அரசும், பிறஅரசுகளும் புனித உருவம்எடுத்து அமைதி, அன்பு, சமாதானம், மனிதநேயம் என்று மந்திர உச்சாடனம் செய்தவுடன் ஈழப்போராட்டம்அநியாயமானதாக, தேவையற்றதாக, வன்முறையானதாக எப்படி தீர்வுக்குட்பட முடியும். தமிழகத்தின் வெகுசன உளவியலில் இந்தப்பகுதி மர்மமாக இருக்கிறது. ஆனால் இதன் அடிப்படை அச்சம் என்பதும் புரிகிறது.தமிழகத்தின்

ஈழம்அரசியலைக் கையாளும் கட்சிகளும், இயக்கங்களும் ஈழத்தின் தமிழினப் படுகொலைக்கு ஒரு வகையில் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆட்சியில் பங்கு பெற்று, தேர்தல் கூட்டணிகள் வைத்து நிர்வாகத்தில் பங்காளிகளாகி இந்திய நடுவண் ஆட்சியாளர்களுடன் ஓயாத உறவு கொண்டாடி வரும் இவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரிந்ததும் ஈழஅரசியலைமீளா விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டனர். பண்பாட்டு அரசியலை வெறும் கும்பல் எழுச்சியாக மாற்றி செயலற்ற, உள்கட்டுமானம் அற்ற அரசியலை உருவாக்கி வருகின்றனர். இது தமிழகத்தின் எதிர்கால அரசியல் புரிதல்களில், செயல்பாடுகளில் கொடும் விளைவுகளையே உருவாக்கும்.அடையாள அரசியல் என்பது எதிர்நிலையை முன்வைத்தும் எதிரிகளை முன்வைத்துமே உருவாகும் ஒன்றல்ல

. உள்கட்டுமானம், தன்னாக்க செயல்திட்டம், தன்னிலை பொதுநிலை உருவாக்கம், ஆக்கபூர்வ அழகியல், நிலவியல் சூழலியல் நுண்ணர்வு, அறம்சார் வழிகாட்டு நெறிகள் என பலவும் சேர்ந்து அடையாள அரசியல் உருவாக வேண்டும். ஈழத்தில் நேரடித்தாக்குதல், எதிர்நிலை வரையறை, விளிம்பு நிலைப்படுத்தல் என்பதன் மூலம் தமிழ் அடையாளம் என்பது நசிவுற்ற, தாக்குதலுக்குட்பட்ட, புண்பட்ட, வீழ்ச்சியுற்ற, அச்சுறுத்தப்பட்ட, இனஅழிப்புக்குட்பட்ட அடையாளங்களை அடைந்தது. இது திணிக்கப்பட்டதும், நிர்ப்பந்தமானதுமாக அமைந்துவிட்டது. அதன் சிக்கல்களையும், அவலங்களையும் இங்கு தேர்தல்நேர தந்திரமாகவும் கும்பல் அரசியலுக்காவும் மட்டும் பயன்படுத்தும் கட்சிகள், இயக்கங்கள் மிக மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்த முடியும்.மாற்று அரசியலும், மக்கள்சார் இயக்கங்களும் இதனைக் கையாளுவதில் மிகுந்த அக்கறையும் பொறுப்பும் கரிசனமும் கொண்டு இயங்கவேண்டும். அல்லாமல் வீர முழக்கங்கள் மீந்திருக்கும் காயப்பட்ட தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் மொத்தத்தில் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைகளையும் மீண்டும் பின்னப்படுத்தி அவலங்களையே கொண்டுவரும்.அறம்சார் அரசியலும், மக்கள்சார் கோட்பாடுகளும், விடுதலைக் கருத்தியல்களும் வெற்றியடைவதற்கு வரலாறு முழுமையான உத்திரவாதத்தை வழங்கி விடுவதில்லை. அவை மிக நிதானமான செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளன.விடுதலை இயக்கங்கள்

, மக்கள் யுத்தம் என்பவை பற்றிய மறுஆய்வுகள் இப்போது தேவை. ஈழப்போர் தொடங்கியபோது இருந்த புரிதலும் நிலைமையும் இப்போது இல்லை. ஈழப்போராட்டத்தின் தொடக்கத்தில் ஆயுதம் ஏந்தியவர்களில் பலர் அது தீர்வல்ல என்பதை கண்டுகொண்டனர். விடுதலைப்புலிகளின் அமைப்பு, செயல் முறைகள், உத்திகள் என்பவற்றை இவர்கள் மறுத்தும் விமர்சித்தும் வந்ததற்கு மாறிவிட்ட உலக அரசியல் சூழல்களே பின்புலமாக அமைந்தன. வேறு அமைப்புகளின் நோக்கில் இருந்து ஈழப்போரை மறுத்தவர்கள் புலிகளின் தலைமையை பயங்கரவாதத் தன்மை கொண்டது என்றனர். ஆனால் இவர்கள் எல்லோருடைய தொடக்கமும் வழிமுறையும் இலக்கும் ஒரு கட்டம் வரை ஒன்றாகவே இருந்தன. இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்தபோது எல்லோரும் கனரக ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் அழித்து இந்திய திட்டவியலாளர்களின் கட்டளையை, சதிகளை நிறைவேற்ற முனைப்புடன் இருந்தனர். இதில் முந்திக் கொண்டவர்கள், முன்னே நின்றவர்கள், மீந்து வந்தவர்கள் தலைமையை, போரைத் தம்கையில் எடுத்துக்கொண்டனர். இப்போது திரும்பிப்பார்க்கும் போது இந்த பயங்கரங்கள் புரியவருவது போல் அப்போது யாருக்கும் புரியவரவில்லை. பின் திரும்ப முடியாத ஒரு துடைத்தழிப்பு அரசியலில் சிக்கிக் கொண்ட நிலை எல்லோருக்கும் இருந்தது. இந்த துடைத்தழிப்பு அரசியல் மக்கள் சார் சமூக மாற்றங்களுக்கோ, விடுதலைக்கோ வழியாக அமையாது என்பதை இந்த இருபத்தோராம் நூற்றாண்டு மிகக் கடுமையாக சொல்லிக் கொண்டிருக்கிறது.அப்படியெனில் அரசுகளின் கொடூரங்களும் வன்முறைகளும் நியாயப்படுத்தப்படக் கூடியவை ஆகிவிடுமா

. ஒடுக்குதலுக்கும், ஒதுக்குதலுக்கும் உள்ளாகும் மக்கள் போராடாமல் இருந்துவிட முடியுமா? அல்லது இருந்துவிட வேண்டுமா? என்பவை நம்முன் உள்ள அடிப்படைக் கேள்விகள். இலங்கை அல்லது அமெரிக்க ராணுவங்கள் பயங்கரவாதபடைகளாக மாறி மக்களை கொன்றொழிப்பதற்கு அவர்கள் முன் வைக்கும் நியாயங்கள் ஏற்கப்பட வேண்டியவையா. வன்முறை, போர் என்பவை பற்றி யார் யாருக்கு அறிவுரை வழங்கி வழிகாட்டுதலைத்தர தகுதியுடையவர்களாகிறார்கள். வன்முறையை மறுப்பவர்களாக நம்மை அடையாளப் படுத்திக்கொண்டால் நிகழ்வியல் உண்மையாக, தாளமுடியா நடப்பியலாக நிகழ்த்தப்படும் நுண் வன்முறைகள் தொடங்கி உலகமயமான வன்முறைகள் வரையிலான கொடுரங்களை அமைதியாக ஏற்பதன் மூலம் அதன் பங்காளர்களாக நாம் ஆகிவிடுகிறோம் இல்லையா. இவை பலவகையில் நம்மிக்கையிழப்பை ஏற்படுத்தும் கேள்விகள் என்றாலும் எப்போதும் அரசியல் செயல்பாடுகளுக்கான, விடுதலைக் கோட்பாடுகளுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது, களங்களும் விரிந்து கொண்டே இருக்கிறது.தற்போது விடுதலைப்புலிகள் அழிக்கப் பட்டது குறித்தும்

, கிழங்கிலங்கை 2004 லிருந்து நேரடி போர்ச் சூழலில் இருந்து வெளியேறியது குறித்தும் எதிர் எதிர் முனைகளில் இருந்து வைக்கப்படும் வாதங்கள் ஒரே வித பகைஉணர்வின் அடிப்படையில் அமைவது மீண்டும் ஒரு துயர நிகழ்வு. விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு, மக்களிடம் இருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும் என்பது மக்களைக் காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மிக அவசியமாகவே இருந்தது. அதேசமயம் விடுதலைப்படையினர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்பது படுகொலைத் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டது. மரண தண்டனை நீக்கம் என்பதை முன்வைக்கும் மனித உரிமை அரசியலை ஏற்பவர்கள் இதனை முன்வைக்க முடியாது. மக்களை ஒரு இம்மி கூட பொருட்படுத்தாத இலங்கை இராணுவத்தின் செயல்பாடு நவீன ஜனநாயக அரசியலுக்கு எதிரான படுபாதத்தன்மை கொண்டது.கிழக்கிலங்கை போரில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டது அம்மக்களுக்கு பாது காப்பினை அளிக்கிறதெனில் அவர்களின் தேர்வு சரியானதாக இருக்கலாம்

. இன்று இலங்கை நடுவண் அமைச்சகத்தில் பொறுப்பு வகிக்கும் போராளித்தலைவர்கள் தம்மை விடுதலைப் போராளிகள் என்ற அடையாளத்துடன்தான் அந்த உரிமையைக் கோருகின்றனர். இவை சூழல் சார்ந்த நிலைமாற்றங்கள். இந்த நிலை மாற்றங்களுக்கான கால அவகாசம் வன்னிப் பகுதிக்கு வழங்கப்படவில்லை.முன்பு மாவீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இப்போது வெறும் பலியான மனிதர்களாகி விடுகின்றனர்

. மக்களை காக்க அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட போராளிப்படை மக்களைக் காக்கத் தவறியதுடன் மக்களை பலியிடவும் தாக்கவும் கூடியதாக மாறிவிட்டது. மக்கள் ஒரு கட்டத்தில் போராளிகளை மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக அரசியல் வேறுவிதமாக இருந்து போராளிகள் மீண்டும் ஒரு நிலப்பகுதியைக் கைப்பற்றி தன்னாட்சியுடைய ஒரு அமைப்பை ஏற்படுத்த முடிந்திருந்தால் மக்களின் மனநிலை, கூட்டுநினைவு வேறுவகையாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை தாங்கள் இழந்திருந்த வாழ்க்கையும், இறுதிப்போரின் போது இழந்த உயிர்களும் வீணில் முடிந்ததாக எஞ்சியுள்ள மக்கள் உணரும் நிலையில் இனிவரும் காலத்தின் இழப்புணர்வு மிகக் கடுமையானதாக, வெளியே இருந்து யாரும் உணரமுடியாததாக இருக்கும். இலங்கையின் தேசிய வரலாறு இந்த முப்பது ஆண்டுகளை உள்நாட்டுப் போர்க் காலமாகவும், பயங்கரவாதத்தால் பாதிப்புற்ற காலமாகவும் பதிவு செய்யும். அந்த வரலாற்றுக்குள் தமிழர்கள் அனைவரும் குற்றவாளிகளாகவே அடையாளம் பெற வேண்டியிருக்கும். இந்த அடையாளப்படுத்தல் துயர்சார் அரசியலுக்கே வழிவகுக்கும். இதனை இலங்கை தேசிய அரசும், பிற பண்பாட்டு நிறுவனங்களும் தமது பெரும்பான்மை மேலாதிக்கத்துக்கு நியாயமளிக்கும் உத்தியாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

 

 

எஞ்சியிருத்தலின் அவலம்

(Agony of Remaining)

தங்களின் நேரடித் தேர்வு அற்று நிகழ்த்து விட்ட ஒரு அரசியல்

, வரலாற்று அவலத்திற்குள் மிஞ்சியிருப்பவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் உணரும் ஒரு மக்கள் குழுவின் நிலை மிகத் துயரமானது. போருக்குப்பின் சிதைவுற்ற ஒரு நாட்டின் மக்களைப் போல மொழியற்று நிற்பது மிகக்கொடூரமானது. தனது மக்களைக் கொன்றொழித்த ஒரு அரசிடமே அடைக்கலமாகி தமது மறுவாழ்விற்கான ஆதாரங்களைப்பெற வேண்டியிருப்பதன் சமூக உளவியல் மிகத் துன்பகரமானது. கடந்த காலத்தைப் பற்றி எதுவும் பேசமுடியாத நிலையில், தமது எதிர்காலத்தையும் தாமே அமைத்துக்கொள்ள முடியாத செயலற்ற நிலையில் நிற்கும் மக்களின் சிந்தனைமுறை, உணர்வுக்குழப்பங்கள் தெளிவாக விளக்கி விடமுடியாத நோய்த்தன்மை கொண்டனவாக இருக்கும். நேரடியாக ஊனப்பட்ட மூன்று லட்சம் மக்களும், மறைமுகமாக உளவகையில் ஊனமும் காயமும் உற்ற மற்ற தமிழர்களும் இனி தமக்கான வாழ்முறையை, சமூகத்திட்டங்களை, ஒத்திசைவு உத்திகளை புதிதாகவே கட்டியெழுப்ப வேண்டியிருக்கும். இந்த தகர்வுகளின் பின் எஞ்சியிருக்கும் மனநிலையில் இருந்து அம்மக்கள் மீள்வதற்கான நடவடிக்கைகளே உடனடியான தமிழின அடையாள அரசியலை ஏற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் பிற தமிழர்களின் செயல்திட்டமாக இருக்க முடியும்.இன்றுள்ள ஈழ மக்கள் தமக்கென தனிநாடும்

, தன்னாட்சியும் விரும்பினார்கள் என்பது குற்றச்செயலோ கொடூரமான வன்முறையோ இல்லை. அவர்களுக்கு மட்டுமல்ல உலகின் எந்த இனத்திற்கும் அந்த உரிமை உண்டு. அவர்கள் குற்றத்தீர்ப்புக்கு உட்பட்டு, தண்டிக்கப்படவேண்டியவர்கள் என ஒரு தேசியஅரசு சொல்லுமானல் அது அடிப்படை உரிமைகளை மறுக்கும் வன்முறையே. என்றாலும் தற்போது உள்ள தமிழர்கள் இலங்கை என்ற தேசத்தின் பகுதியாகவே இனியும் வாழவேண்டும், வாழப்போகிறார்கள் என்னும் நிலையில் புதிய மாற்று புரிந்துணர்வுகள் உருவாக வேண்டும்.நாடு கடந்த தமிழ் ஈழம் அமைப்பதும் மீண்டும் ஈழப்போர் தொடரும் என்பதும் இலங்கை மண்ணில் வாழும் மக்களுக்கு மேலும் துயரங்களையே கொண்டு சேர்க்கும்.

. தமிழகத்தின் அரசியல் தலைவர்களும், தனி இயக்கங்களும் மீண்டும் நடைமுறை சாத்தியமற்ற உறுதிமொழிகளைப் பரப்பி தம் பேச்சுக் களத்தை வலிமைப்படுத்த நினைப்பது மக்கள் துயரம் பற்றிய அக்கரையற்ற போக்கு. அடையாள அரசியல், பண்பாட்டு அரசியல், மொழிசார் தன்னிலைகள் அர்த்தமற்றவை என்றோ தீமையானவை என்றோ இதற்குப் பொருளல்ல. அணுகுமுறைகள் செயல்திட்டங்கள் வேறுவகையில் அமையவேண்டிய தேவை உள்ளது. தொன்மங்கள் தற்கால சொல்லாடல்களின் பின்புலங்களாக முடியுமே தவிர வழிகாட்டு நெறிகளாக முடியாது. நவீன, பின்நவீன, பொதுக்கள, பன்மைஅரசியல் புரிதலுடனும் உலக அரசியல் பொருளாதார, இயற்கைசார் பண்பாட்டு புரிதல்களுடனும் தமிழர்களின் அரசியல் மாற்றுச் சொல்லாடல்களும் செயல் திட்டங்களும் அமைந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சமூக மாற்றத்தை நோக்கிச் செல்ல முடியும். இனி அமையப்போகும் ஆக்கப்பூர்வ பண்பாட்டு மாற்றங்களும் அரசியல் செயல்திட்டங்களுமே ஈழத்திற்காக நாம் இழந்த மக்களுக்கு செலுத்தும் துயர் நிறைந்த அஞ்சலியாக அமைய முடியும். ஈழ மக்கள் தமக்கென நாடும், தன்னாட்சியும் அமைத்துக்கொள்ள எதிர்காலம் வழிஅமைக்கும்: வேறுவகையில் வேறு செயல்திட்டங்கள் ஊடாக.

நன்றிஅணங்கு)

Exit mobile version