தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் சாதிகளில் ஒன்று வன்னியர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் வட மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களிலும் கொங்கு மண்டலங்களிலும் கணிசமாக வாழ்கிறார்கள்.இவர்களை மையமாக வைத்து பாட்டாளி மக்கள் கட்சி செயல்படுகிறது. ஆனால் வன்னியர்களில் ஒட்டு மொத்த வாக்குகளும் இவர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது பாமகவோடு கூட்டணி வைக்க முயற்சி செய்தது. அப்போது பாட்டாளி மக்கள் தலைவர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் அதிமுகவோடு கூட்டணி என்றார். எடப்பாடி பழனிசாமியோ 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றினார்.அதன் பின்னர் ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி வைத்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக-பாமக இடையிலான கூட்டணி பேரத்தின் ஒன்றாக வன்னியர் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதில் பல நூற்றுக்கணக்கான சாதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிருப்தி அடைந்தனர். தங்கள் இடஒதுக்கீட்டை எடுத்து வன்னியர்களுக்குக் கொடுத்து விட்டதாக விமர்சனம் வைக்க நடந்து முடிந்த தேர்தலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்ட வன்னியர்களும் வாக்களிக்கவில்லை. அதிமுக கூட்டணி படு தோல்வியடைந்தது.
அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த ஒட ஒதுக்கீட்டிற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கிடையில் வன்னியர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். எம்பிசி பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25 மனுக்குள் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.