Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடலிகள் வானுயர வளரும் !

“ஏன் வானைப் பார்த்து மொட்டைப் பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள்.
கீழே நிலத்தைப் பாருங்கள்.
வடலிகள் வளர்ந்து வருகின்றன.
வடலிகள் வானுயர வளரும்”

என ஏழாம் வகுப்பில் கற்கும் மாணவன் எழுதிய கவிதைகள் நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது.
கவிதைகள் நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும் என “ஆறுதல்”  நிறுவனத்தின் பணிப்பாளரும் மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளருமான சுந்தரம் திவகலாலா தெரிவித்திருக்கிறார்.
திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றியத்தினால் திருகோணமலை நகரசபையின் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கிய வெளியிட்டு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே சுந்தரம் திவகலாலா இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இலக்கிய வெளியிட்டு விழாவில் தொடர்ந்து பேசிய சுந்தரம் திவகலாலா, அண்மையில் நான் வன்னிக்குச் சென்றிருந்தேன். கடும் மழை. சிறுவர்கள் ஆனந்தமாக துள்ளி விளையாடுகிறார்கள்.
ஆசிரியர்கள் உறைந்து, குறுகிப் போயிருக்கிறார்கள். இளைஞர், யுவதிகள் வெறுப்போடு இருக்கிறார்கள்.
சமூகத்தோடு அவர்களால் ஒட்டிவாழ முடியவில்லை. சமூகத்திலிருந்து இளைஞர், யுவதிகள் விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு விடிவில்லை என்று எண்ணி ஏங்குகிறார்கள். ஆயிரம் நூல்களை வெளியிட்டாலும் அவர்கள் சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்குத் தயாராக இல்லை. அவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
“முகாமலை ஊடாக பஸ் சென்று கொண்டிருக்கிறது.
ஆசனத்திலிருப்பவர்கள் வானைப் பார்க்கின்றனர்.
வட்டுக்கள் அழிந்த நிலையில் மொட்டையாக நிற்கும்
பனைமரங்கள் வானை நோக்கி உயர்ந்து நிற்பதைப் பார்த்து
பெருமூச்சு விடுகின்றனர்.
பஸ்சில் வரும் சாதாரண நபர்
ஏன் வானைப் பார்த்து மொட்டைப்
பனைமரங்களைப் பார்த்து ஏங்குகிறீர்கள்.
கீழே நிலத்தைப் பாருங்கள்.
வடலிகள் வளர்ந்து வருகின்றன.
வடலிகள் வானுயர வளரும் எனக்கூறுகின்றான.”
இது ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் எழுதிய கவிதை வரிகைள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இலக்கிய வெளியிட்டு விழாவில், கவிஞர் நிலா தமிழின் தாசனின் “நெருப்புக்களிடையே நீந்தும் நிலாக்கள்” (குறுங்காவியம்) “இளைஞர்கள் ஏற்கவேண்டிய சபதம்” (கவிதைத் தொகுதி) ஆகிய இலக்கியங்களின் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.

Exit mobile version