Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப்பெருமாள்?

அடுத்த வடமாகாண முதலமைச்சராக இந்தியாவின் வளர்ப்புப் பிள்ளையென அழைக்கப்படுபவரும், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் வடக்குக் கிழக்கு முதலமைச்சராக நியமிக்கப்பட்டவருமான வரதராஜப்பெருமாளை நியமிக்க இந்தியாவினால் திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் வரதராஜப்பெருமாள் யாழ். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது, பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் இந்திய அரசின் றோ அமைப்பினால் மூளைச்சலவை செய்யப்பட்ட இவர், 1990 – 1998 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய அரசாங்கத்தினால் வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இப்பொம்மை அரசாங்கத்தின்மூலம் இந்தியா தனது நலன்களைச் சாதித்துக்கொண்டிருந்ததே தவிர தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்பின்னர், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற வரதராஜப்பெருமாள் இந்தியாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் இந்தியாவினால் மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 23 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த வரதராஜப்பெருமாள் மீண்டும் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் கட்சிக்குத் தலைமை தாங்கி வருவதுடன், தீவகப் பகுதிகளில் தன்னுடன் அணிதிரளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா வரதராஜப் பெருமாளைத் தன்னுடன் கூட்டுச் சேருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

இருப்பினும் 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய இராணுவத்தின் பாதுகாப்பில் மக்களின் வாக்களிப்பின்றி வரதராஜப் பெருமாளை முதலமைச்சராக நியமித்து எவ்வாறு இந்தியா தனது நலன்களைச் சாதித்ததோ அவ்வாறானதொரு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கே இந்தியா திரைமறைவில் காய்களை நகர்த்துகின்றது.

Exit mobile version