‘ஹை புரபைல்’ கனவான் தான் வேட்பாளர் என்று சாணக்ஸ் சம்பந்தன் முன்னமே முன்மொழிந்த போதே விக்னேஸ்வரனே ‘விடுதலைப் போராளி’ யாவார் என்று பலரும் நம்பியிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியப்படி வழக்குப் பேசுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாகலாம். அது இன்னொரு படி மேலே போய் தீர்ப்புச் சொல்லும் ‘ஹை புரபைல்’ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தெரிவாகியுள்ளது.
இதெல்லாம் தேசிய தலைவரின் தீர்க்கதரிசனம் என்று செந்தமிழன் சீமான் நரம்பு வெடிக்க எங்கேயாவது மேடையில் சொல்ல தமிழீழ தேசிய சவுண்டான விசிலடித்து புலம் பெயர் நாடுகளில் ஆரவாரம் செய்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.
இலங்கை அரச மந்திரியும், புகழ்பூத்து புலம் பெயர் தேசமெல்லாம் சென்று திரும்பிய வாசுதேவ நாணயக்கார என்ற இடது நாமம் போட்ட ‘ஹை புரபைலின்’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இன ஐக்கியத்துக்கு குறியீடு போட்டவர் என்ற பெயர் வேறு நமது ஹை புரபைல் முதல்வருக்கு உண்டு. மகிந்த ராஜபக்சவோடு ஸ்கொடிஸ் கள்ளு வாங்கிக் குடிக்கும் அளவிற்கு நட்பு வேறு உண்டு.
இதெல்லாம் அமரிக்காவின் கருணையாலும் இந்தியாவின் இதய சுத்தியாலுமே நடந்தது என்று ஈபிள் ரவர் உச்சியிலிருந்து யோசித்து புல்லரித்துப் போய் பாராட்டுகிறார்கள் புலம் பெயர்ந்த பெரியோர்.
இதையெல்லாம் தெரிந்துகொள்ள விரும்பாத நமது ஈபிள் ரவர் சிந்தனைச் சிகரங்களோ அமரிக்க அழுத்தியதில் மகிந்த மெலிந்து போய் இதையெல்லாம் செய்து விட்டதாக கனவால் எழும்பிய பின்னரும் பீற்றுகிறார்கள். பீரிசை குறுக்கால புகுந்து காதோட காதுவச்ச மாதிரி ஹை புரபைல் அமரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் மிரட்டி வேறு வைத்திருப்பதாக பின்னால காச்சட்டை கிழியும் அளவிற்கு புலம் பெயர் கோமாளிகள் வெடி வெடிக்கினம்.
வடக்கில் நடப்பது இராணுவ ஆட்சி என்பதை விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்புக் காரர்சொல்லியிருப்பார்கள் என்பது சந்தேகமில்லை. சரேசு குடும்பம் முன்பொரு காலத்திலே ஆயுதம் தாங்கி ஈழம் வேண்டும் என்று தயா மாஸ்டர் போல், டக்ளசு போல், கருணா போல் களங்கள் கண்டவர்கள்.அவர்கள் வடக்கில் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச் சுத்திகரிப்பு நடக்கிறது என்றும் சொல்லியிருப்பார்கள்.
மகிந்த ராஜபக்சவின் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவிருந்த சுரேசுவிற்கு இதெல்லம் எப்படியாவது தெரிந்திருக்கும்.
ஆனால் என்ன விக்கி ஹை புரபைல் என்பதால் இப்போதே அமரிக்காவுக்கும் இந்தியாவுகும் கொடுப்பதற்கு சாய் பாபா லட்டு எடுத்த மாதிரி அறிக்கை தயாரித்திருப்பார்.
‘அமரிக்காவே, ஆப்பானிலும் உலகம் முழுவதும் இரத்தம் குடிப்பதற்கு ஒரு நிமிட ஓய்வு கொடுத்துவிட்டு எம்மைக் காப்பாற்று’ என்று அறிக்கை ஆரம்பித்திருக்கும். ‘இந்தியாவே இனப்படுகொலை நடத்தியதில் உனது இரத்தவெறி ஆடங்கிருக்கும் அதனால் மனிதாபிமானியாகிதால் தமிழர்களைக் காப்பாற்று’ என்று முடித்திருப்பார்.
விக்கியை குத்தகைக்கு எடுத்து அரசியல் செய்வதை நிறுத்தி உங்கள் உங்கள் கட்சிகளைக் கலைத்துவிட்டு புதிய மக்கள் தலைமைக்கு வழிவிட்டுப் பாருங்கள். விக்கியின் முன்னைநாள் போஸ்டை மக்கள் கையிலெடுத்து பாசிஸ்ட் ராஜபக்சவை மக்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கும் அளவிற்குப் பலம் பெறுவார்கள்.