Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ்

இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப சர்வாதிகார அரசிற்கு மனித முகத்தை வழங்க முற்படும் இலங்கை அரச துணைக் குழுக்கள், இலங்கையில் எதிர்ப்பியக்கங்கள் தோன்றுவதற்கான மிகப்பெரும் தடையக அமைந்துள்ளன.

வடக்கில் சிங்கள மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.கையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.

மீள் குடியேற விரும்பும் சிங்கள குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குமாறு அமைச்சர் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் அரசியல்மயப் படுத்தப்படக் கூடாதென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது அரச விசுவாசத்தை தெரிவிப்பதற்காக சிங்களக் குடியேற்றவாசிகளின் மீது மனிதாபிமானம் காட்டும் அரச துணைப்படைகளும் அவர்களின் நாடுகடந்த அடிவருடிகளும் அரசிற்கு அழுத்தம் வழங்க முனையும் ஏனையோரை அழிப்பதில் அனைத்து வழிகளிலும் முனைப்புக்காட்டுகின்றனர்.

தமிழர்கள் பிணங்கள் நடுத்தெருவில் நாய்கள் புசிக்க வீசியெறியப்ப்பட்ட வேளைகளில் அவர்களுக்கு அரசியல் இருந்தது. அழித்தொழிக்கப்பட்ட தமிழர்களில் எஞ்சியவர்கள் தெருக்களில் அனாதைகளாக, உண்பதற்கு உணவின்றி, உடுப்பதற்கு உடையின்றி, மனிதகுலம் வெட்கித் தலைகுனிய இனச்சுத்திகரிப்பை ராஜபக்ச குடும்பம் மேற்கொள்கின்ற போது இவர்களுக்கு அரசியல் இருந்தது. அது ராஜபக்சவின் அரசியல். மக்கள் விரோத அரசியல்.

சமூகப்பற்றுள்ள மனிதர்களின் மீதான அவதூறு அரசியல். தமது சொந்த நோக்கங்களுக்கான வியாபார அரசியல். சிங்கள் மக்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படும் போது மட்டும் அரசியல் வேண்டாம் என்கின்றனர். அது அவர்களுக்கு வெறும் செய்தி மட்டும்தான்.

வன்னியில் மக்கள் தெருவோரங்களின் வாழ்க்கை நடத்தும் நிலையை அரசு உருவாக்கியிருக்கும் வேளையில், பெண்களைப் பாலியல் வதைக்கு உட்படுத்தும் நிலையில், அவசர அவ்சரமான சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசியல் பின்ன்ணி இல்லை என்று இவர்கள் கூறிவதன் பின்னால் சமூகவிரோத அரசியல் உள்ளது.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

தெற்கில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த சிங்களக் குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு பணிப்புரை வழங்கும் டக்ளஸ் தேவானந்தாவாவும், ஆனந்த சங்கரியும், புலம்பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் நீட்சிகளும், இவர்களின் எஜமானார்களான மகிந்த ராஜபக்ச குடும்ப சர்வாதிகார அரசும் வினாவெழுப்பபபட வேண்டும்.

வன்னியில் விலங்குகள் போல வாடும் மக்களுக்கும், கிழக்கில் அனாதரவாக விடப்பட்ட குடும்பங்களுக்கும் ஏன் இதே கவனிப்பும் உதவிகளும் வழங்கப்படக் கூடாது எனக் கோரவேண்டும். அதற்கான அழுத்தங்கள் இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். அழுத்தங்கள் பிரயோகிக்க முனையும் புலம் பெயர் தமிழர்களை ‘அரசியல் வேண்டாம் உதவி தேவை என்று’ குற்ற உணர்வுக்கு உள்ளாக்குபவர்கள் அரச அடிவருடிகள் என அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
-விஜிதா

Exit mobile version