Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன்

  அன்றைக்கு ஒரு காலைப் பொழுதில் நான் எமது காலையுணவைப் பூர்த்தி செய்யும் வகையில் பாண் வாங்குவதற்காக எனது தாயாரின் பணிப்பின் பேரில் கடையொன்றிற்குச் சென்று பாணை வாங்கியபின் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.வழியில் ராணியைக் கண்டேன். அவளும் பாண் வாங்கிக் கொண்டே சென்று கொண்டிருந்தாள். ஆனால் நான் ஒரு இறாத்தல் பாண் வாங்கியிருந்தேன் என்றால் அவள் ஐந்து இறாத்தல்களுக்கு மேல் வாங்கியிருந்தாள். எனக்குத் தெரிந்து அவள் வாங்கிப் போகும் பாண்களில் இருந்து ஒரு துண்டுக்கு மேல் அவளுக்கு சாப்பிடக் கிடைக்காது. பின்னர் பாடசாலைக்குப் போகும் போதும் இன்னொரு துண்டை மதிய உணவாக எடுத்துச் செல்வாள். அந்த அளவுக்கு அவளது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் . அவளது தாயை எப்போதாவது நான் காண நேரிற்ற போதுகளிலும் அவள் மேடான வயிற்றுடனேயே காணப்படுவாள்.அதன் மூலம் அவளது குடும்பப் பின்னணியை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இது பற்றி எனது தாயார் ராணியுடன் பல தடவைகள் குசுகுசுத்துக் கொண்டிருக்கும் போதும் நான் ஒட்டுக் கேட்டதுண்டு. “”என்னடி இடுப்பிலை பிள்ளையளைச் சுமக்கிறதுதான் உன்ரை வேலையாய் போச்சுதோ……?”” “என்ன அன்ரி செய்யிறது அவை புருசன் பெண்டாட்டிக்கு இது பற்றிக் கொஞ்சம் கூட  அக்கறையில்லை.”  இதுவே அவளின் தினசரியான பதிலாயிருக்கும். அவள் புருசன் பெண்டாட்டி என்று குறிப்பிட்து தனது தாயையும் தகப்பனையும் பற்றித்தான் என்பது குறித்து நான் மேலதிக விளக்கங்கள் தரத் தேவையில்லை.
 
ஆனால் அவளது குரலும் தனது கருத்துக்களை தெளிவுபடுத்துகின்ற தொனியும் அதி அற்புதமாகவேயிருக்கும். அழகாகப் பாடுவாள். அவள் என் தாயார் முன் அதிகமாகத் தாலாட்டுப் பாடல்களையே பாடி நான் கேட்டதுண்டு. அவள் தன் இடுப்பில் தொங்கிக் கொண்டு அரைத் தூக்கத்திலும் அரைப் பட்டினியிலும் முழித்துக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவோ அல்லது சகோதரிக்காகவோ பாடுவதாகவே கேட்பவர்களுக்குத் தோன்றும். ஆனாhல் அவள் தனது வயதுக்கேயுரிய இயல்பான ஆசைகள் குறித்தும்தான் பாடினாள் என்பது எனது அந்த வயதுக்குரிய சூழ்நிலையில் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
 
ராணியும் நானும் ஒரே பாடசாலையில்தான் கல்வி கற்றோம். என்னை விட ராணிக்கு ஐந்து அல்லது ஆறு வயதுகள் அதிகம் என நினைக்கின்றேன்.ஆனாலும் அவள் எங்கள் பாடசாலையில் ஒரு கதாநாயகிதான். அழகு பற்றிச் சொல்லவில்லை. அந்தக் கால கட்டத்தில் அவள் அழகியாக இருந்தாளா என்பது பற்றி ஆராயும் மூளையும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அவள் என்னை ஈர்த்திருந்தாள். என்னைக் கண்டதும் முமுப் பற்களும் தெரியுமாறு சிரிப்பாள். சில வேளைகளில் அந்தச் சிரிப்பில் நான் மயங்கிப் போவதுமுண்டு.
 
ராணியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நான் என்னையே மறந்து விடுவதுமுண்டு. எனக்கு மனைவி என ஒருத்தி  வர வேண்டுமாயின் அவள் ராணிதான் என நான் அப்போது நினைத்ததுமுண்டு. இது எந்த வகைக் காதல் எனக்கு இன்றுவரை புரியவேயில்லை.
 
இப்பொழுது நான் பாண் வாங்கிய கதைக்கே திரும்பவும் வந்து விடுகின்றேன். 
 
என்னைக் கண்டதும் “” என்ன ரமேஸ் பேச்சுப் போட்டிக்கு தயாரோ’ என்று
கேட்டாள். அவளது வாய் புளியம் பூக்களை மென்று கொண்டிருந்தது. எங்கேயோ களவாகப் புளியமரப் பூக்களைப் பறித்துத் தின்றிருக்கிறாள் என்பது புரிந்தது. அப்பூக்களின் வாசனை என்னை வாயூறச் செய்தாலும்
அதையும் தாண்டி அவள் அணிந்திருந்த சட்டைக்கு மேலாகப் பூரித்து நின்ற தென்னங்குரும்பைகளைப் போன்ற அவளது மார்புகளே எனது கண்களை உறுத்தியது. எனது கண்களின் மிதவைகளைப் புரிந்து கொண்டாளோ அல்லது இயல்பாகவோ தனது மேற்சட்டையை சரி செய்து கொண்டவள் மீண்டும் அதே கேள்வியையே என்னிடம் திரும்பவும்  கேட்டாள்.
 
“எங்கை பேச்சுப் போட்டி எனக்குத் தெரியாது” என்றேன். 
 
“ஏன்ரா றெஜி உனக்குச் சொல்லயில்லையோ….. வாற கிழமை பிள்ளையார்
கோயிலிலை நாயன்மார்களைப் பற்றின பேச்சுப் போட்டி…. அவளிட்டைச் சொல்லியெல்லே விட்டனான்.” என்றாள் ராணி.
 
ரெஜியும் எங்கள் ஊரவள்தான். இருவருக்கும் ஒரே வயசு. ரெஜியும் நானும் ஒரே பாடசாலையல்ல. ஆனாலும் ஒரே ஊர் என்பதால் பேச்சுப் போட்டிகள் நாடகங்கள் என்றால் சேர்ந்து பங்குபற்றுவோம். எப்படியும் அவளை நான் வென்று விடுவேன். இதனால் ரெஜிக்கு என்மீது கோபம் வராது. என்னைப் பார்த்து இளித்துக் கொண்டேயிருப்பாள்.
 
அவளது இளிப்பு எனக்குப் பிடிப்பதில்லை.ராணியின் இரண்டாவது சகோதரியும் றெஜியும் நல்ல தோழிகள். ஒரு தடவை ராணியின் இளைய சகோதரி என்னிடம் வந்து ரெஜி என்னைக் காதலிப்பதாகச் சொன்னதாக  சொல்லியிருந்தாள். நான் அவளிடம் “நாய்க்கு நல்ல பூசை விழும்”; எனப் பதில் சொல்லி அனுப்பியிருந்தேன். அந்த ஆத்திரம் காரணமாகத்தான் றெஜி பேச்சுப் போட்டி விடயத்தை என்னிடம் சொல்லாமல் விட்டிருக்கக் கூடும்.
 
போட்டிக்குக் குறைந்த நாட்களே இருந்தாலும் ராணியின் முயற்சியால் பேச வேண்டிய விடயத்தை நான் கஸ்டப்பட்டுப் பாடமாக்கி அந்தப் போட்டியில் ஆக்ரோசமாகப் பேசி முதலாம் பரிசு வாங்கினேன்.
 
இப்பிடியாக எங்களது வாழ்க்கைக் கனவுகள் நகர்ந்து கொண்டிருந்தது. எங்கள் கிராமத்தில் உயர்தரக் கல்விக்கான பாடசாலைகள் இருந்தாலும் நகரப்பாடசாலைகளுக்கு இடம்பெயர்ந்து படிப்பது என்பது கௌரவத்துக்குரியதாக இருந்ததனால் எனது குடும்ப வருவாயைத் தாண்டி நானும் நகரப் பாடசாலையொன்றில் சேர்க்கப்பட்டேன். ஆனாலும் கலைத்தாகம் என்பது என்னுள் மிகுதியாகவேயிருந்தது.ராணியிடமும் இது அதிகரித்துக் காணப்பட்டது. நாங்கள்  பாடசாலை முடிந்த மாலை நேரங்களில் காணும் போதெல்லாம் எங்களுக்குத் தெரிந்தவரை நாடகங்களைப் பற்றியே பேசினோம். பேச்சுப் போட்டி மேடைகளிலிருந்து நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேடை நாடகங்களுக்குள் தாவிக் கொண்டிருந்தோம்.
 
நானும் ராணியும் இப்போது காணும் போதெல்லாம் நாடகங்களைப் பற்றியே பேசிக்கொள்வதுண்டு.ராணி பல வகை நாடக உத்திகள் குறித்தெல்லாம் எனக்கு விளக்கமளித்தாள். நாட்டிய நாடகங்கள் என்பது அவளுக்கு கை வந்த கலையாக இருந்தது. இப்போது எனக்கு   ராணியின் மீது பாலியல் கவர்ச்சிகள் இல்லை.
 
தமிழர்களின் விடுதலைப் போராட்டங்கள் குறித்த பேச்சுக்கள் எங்கும் பரவியிருந்த காலம் அது. நான் சார்ந்திருந்த அமைப்புத் தொடர்பான பிரச்சார நாடகங்களில் அதிகமாகப் பெண் வேடங்கள் புனைந்து கொண்டிருந்தேன். ராணிக்கு விடுதலைக் குழுக்களின் அரசியல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.உண்மையில் அன்றைய காலகட்டங்களில் எனக்கும்தான் புரியவில்லை. ஆனாலும் நான் ஆண் என்கின்ற மேதாவித்தனத்தினுர்டாக அனைத்தையும் புரிந்து கொண்டவனாகவும் நான் சார்ந்த அமைப்பே சரியான குறிக்கோளை நோக்கி நகர்கின்றது என்கின்ற கோளாறான பார்வையையும் கொண்டிருந்தேன். என்னைக் காணும் போதெல்லாம் ஏதாவதொரு சினிமாப் பாட்டு மெட்டில் சிங்கள அரசின் இனப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் பாடல்களைப் புனைந்து பாடிக் காட்டுவாள்.

இப்படியான கால நகர்வில் தனது குடும்ப வறுமையையும் கடந்து அந்தக் கடின மதில்களையும் உடைத்துக் கொண்டு கல்வியில் அவள் முன்னேறினாள்.அவளது கல்வியின் வளர்ச்சியை ஊரே அதி சயமாகப் பார்த்தது. பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உதாரணமாகக் காட்டுமளவுக்கு அவள் பிரகாசித்தாள். ஆனால் அவளது
அந்த வெள்ளந்தியான சிரிப்பும் யாரையும் தோழமை கொள்ளும் எளிமையும் அவளை விட்டு அப்போதும் போகவில்லை. இடையில் சில பட்டிமன்ற நிகழ்வுகளிலும் எதிரும் புதிருமாகக் கலந்து  கொண்டும் இருக்கிறோம்.
 
எண்பத்தேழில் அமைதி காக்க வந்தவர்களின் உண்மை முகங்கள் வெளிப்பட்ட காலங்களில் நான் சார்ந்திருந்த அமைப்பின் இரட்டை வேட நடிப்புகளானது சிவாஜி கணேசனையும் தாண்டியிருந்தது. மனதளவில் நானும் உடைந்து போயிருந்தேன். இச் சூழ்நிலையிலும் ராணி எந்த அரசியல் குழுவினது மேடை எனப் பார்க்காது இனவெறியின் அதியுச்சங்கள் குறித்தும் விடுதலை என்பதே நோக்காக கொண்ட தியாக சீலர்கள் குறித்தும் பேசிக்  கொண்டேயிருந்தாள். அவளுக்கு அவர்களிடையே பேதம் காணத் தெரியவில்லை. ஆனால் நானோ இடம்பெயர்ந்து தப்பியோடிவிட்டேன். இடம் பெயர்ந்த 16 வருட இடைவெளிகளிகளுக்கு முன் ராணியைப் பற்றி நான் எதையும் அறிந்து கொள்ளவில்லை. முயற்சிக்கவுமில்லை.
 
புலிகளும் ரணில் விக்கிரமசிங்கவும் மட்டும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவு நானும் மீண்டும் அந்த மண்ணை மிதிக்கும் சூழல் ஏற்பட்டபோது

இனியும் நான் அங்கு போவேனா? அந்தக் காலம் வருமா என ஏங்கிக் கிடந்த, நான் ஆடியும் பாடியும் வளர்ந்த அந்த மண்ணை மிதித்துவிட்ட சந்தோசத்திலும், முன்பு அங்கு வாழ்ந்த காலங்களினான இளம்  பிராயத்தில் கண்களால் வெறுமனே பார்த்தும், கேள்வியும் பட்டேயிருந்த பனங்கள்ளு மற்றும் மதுவின் உற்சாகங்கள் தலைக்கேறிய நிலையிலும் எனது கிராமத்தை மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சிலருடன் வலம் வந்த போது ராணியை நான் திரும்பவும் கண்டேன். என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அதே சிரிப்புடன் ராணி. அப்போதும் அவள் என்னிடம் சுகம் விசாரிக்கவில்லை. துள்ளாட்ட நாடகப்பாடலொன்றை முணுமுணுத்தவாறு தனது பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தவள் என்னைக் கண்டதும் முதல் கேட்ட கேள்வி பாரிசிலும் நாடகம் போடுகிறாயா? எப்படியான நாடகங்கள்? இதைப் பார் புது மெட்டொன்றில் பாடல் பண்ணியிருக்கின்றேன் எனப் பாடத் தொடங்கினாள்.
 
மது தந்த உற்சாகங்கள் அனைத்தும் எனக்குள் இருந்து வடிந்து போயிருந்தது. இளமையில் நான் கண்ட அந்தத் தோழி அவள் இப்போதும் அதே உற்சாகத்துடன் அதே விடயங்களைப் பற்றியே பேசுகின்றாள். நான் வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்னிடம் ஏதாவது பண உதவி கேட்டுப் பெறலாம். அது பற்றிப் பேசலாம். அல்லது எனக்கு அறிமுகமில்லாத தன் கணவன் பிள்ளைகள் பற்றி எதுவும் பேசலாம். அவளுக்கு அவைகள் தெரியவில்லை.
 
அவளுடைய தாயார்தான் அவள் தற்போது பல்கலைக்கழகப் பட்டதாரியாகி வன்னியிலுள்ள பாடசாலையொன்றில் கற்பித்துக் கொண்டிருப்பதாகவும் தற்போது அமைதிப் பேச்சுவார்த்ததைக் காலமென்பதால் யாழ்ப்பாணத்துக்கு வந்திருப்பதாகவும் எனக்கு கூறினார். அவளிடம் எந்த இயக்கம் சார்ந்த அரசியலும் இருக்கவில்லை. தமிழர்களின் விடுதலை குறித்த அந்த ஒரே பார்வையே அவளுக்குத் தெரிந்திருந்தது.
 
“”என்ன நீ புலிகளுக்கு வால் பிடிக்கிறியா”” என நான் அவளை சீண்டும் நோக்கில் கேட்டபோதும் எனக்கு அதெல்லாம் தெரியாது எங்களுக்கு விடுதலை வேண்டும் என்றுமட்டும் அவள் கூறினாள். அந்த விடுதலைக்காக அவள் பாடவும் ஆடவும் தயாராகவிருந்தாள்.
 
நான் மீண்டும்  ஒருமுறை கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக சட்டரீதியாகப் புலம் பெயரந்து விட்டேன்.
 
மே 17 2009 ல் அந்தச் சேதி என்னை வந்தடைந்த போது பாரிசின் புகழ் பெற்ற சிறைச்சாலையொன்றில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு நான் உதவிதான் செய்ததாக இப்போதும் எண்ணுகிறேன் ஆனால் பிரெஞ்சு அரசாங்கத்தைப் பொறுத்தவரை நான் செய்தது கடுமையான குற்றம். நான் அந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். இப்போது அது விடயமல்ல.
 
ராணி வன்னியைக் கைப்பற்றிய இராணுவத்தினரிடம் சரணடைந்தபோது அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்ட இராணுவத்தினர் அiளை நெற்றியில் சுட்டுக் கொன்றனராம்.
 
நான் விடுதலையான பின்னர் பாரிசில் என்னைச் சந்தித்த அரசியல் ரீதியான  நண்பரொருவர் எனக்குச் சொன்னார். “” சரணடைய மறுத்த விடுதலைப் புலிகளை மட்டுமே இராணுவம் சுட்டுக் கொன்றது. இராணுவம் புலிகளுடன் மட்டுமே சண்டை செய்தது.
 
 
அந்த அப்பாவி ராணி எனக்குமுன் சிரித்துக் கொண்டே இப்போதும் தெரிகின்றாள். ஆனால் விடுதலை என்னும் பெயரில் ராணி போன்றவர்களைத் தூண்டி விட்ட அனைத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தாயை இழந்த  ராணியின் மூன்று குழந்தைகளினதும்  அழுகுரல்கள் கேட்கப் போவதில்லை. 
 

வசந்தராணியினதும் எனதும் சொந்த வதிவிடம் ஏழாலை.

Exit mobile version