இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு ஆக்டோபர் மாதம் பதினொன்றாம் திகதி புற்றுநோய் முற்றியதையடுத்து, பாரிஸ் மருத்துவமனையயொன்றில் தெரிதா மரணடைந்திருக்கிறார் என
<பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் ஸிராக்கின் வார்த்தைகளில் தெரிதா பிரெஞ்சுக் குடிமகன் எனும் பெருமிதம் இருந்தது. குறிப்பிட்ட தேசத்தின் குடீயுரிமை குறித்தும், குடிமகனாக இருத்தல் குறித்தும் நிறைய சந்தேகங்களை வெளியிட்ட தெரிதாவின் மரணத்தின் பின்பு, அவரது மரணத்தை அரசு அறிவித்தது ஒரு வரலாற்று முரண்.
பிரதியிலிருந்து தப்புதல் இயலாது என அறிவித்த தெரிதா, அவரது மரணத்தின் பின்பு தேசியப் பெருமித்திலிருந்தும், அதனது அதிகாரம் எழுப்ப விரும்பிய எல்லைக்குட்பட்ட திட்டவட்டமான அரத்தங்களிலிருந்தும் தப்ப முடியவில்லை. தனது எழுத்துக்கள் அனைத்தும் மரணம் குறித்தவைதான் என்றார் தெரிதா. அவரது சிந்தனைகளை அமெரிக்காவில் பிரபலமாக்கிய தீ மானையும் தெரிதாவையும் குறித்த வண்ண ஓவியமொன்றில், பிரம்மாண்டான மஞ்சுமூடிய மலைத் தொடர்ப் பிளவொன்றின் திரும்பிவரவியலாத மரணமுனையில் நின்றபடி, சரிந்தநிலையில் தமை மறந்து இரு மனிதர்கள் விவாதிக்கும் காட்சி தீட்டப்பட்டிருக்கிறது.
பிரதிக்கு அறுதி அர்த்தம் இல்லையென்று சொன்ன தெரிதா மேற்கொண்ட தேடுதலின் பாதை, மலைமுகட்டின் தற்கொலை முனைபோல் அறுதியற்றது. திரும்பவியலாதது. இவ்வகையில் மொழியின் இறுதி அர்த்தம் அல்லது அதனது தொடக்கம் அல்லது மரணப் புள்ளி நோக்கிய இடையறாத பயணம் எனும் அர்த்தத்தில் கட்டுடைப்பைப் பேசிய தெரிதாவின் அனைத்து நடவடிக்கைளுமே மரணம் குறித்தவைதான் என்பதில் சந்தேகமில்லை.
மார்க்சியத்தினால் உந்துதல் பெற்றதாகவே தன்னுடைய தத்துவார்த்த முயற்சிகள் இருந்ததாக, இருபதாம் றாற்றாண்டின் இறுதியில் மார்கசினது ஆவிகள் ( தி ஸ்பெக்டர்ஸ் ஆப் மார்க்ஸ் :
அப்போது சோவியித்யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளது சோசலிசமும் வீழ்ச்சி பெற்றிருந்த வேளை. தெரிதாவின் கோட்பாட்டுச் செய்ல்பாடுகள் உச்சத்திலிருந்த 25 ஆண்டுகளில் மாரக்சியம் பற்றி தெரிதா குறிப்பாகப் பேசியதில்லை. ஸ்டாலின் எதிரப்பு உச்சத்திலிருந்த காலத்தில், 1956 ஆம் ஆண்டு குருஸ்சேவின் உரையையொட்டி உலகெங்கும் கம்யூனிஸ எதிரப்பு உச்சத்திலிருந்த வேளையில் தன்னுடைய விமர்சனங்கள் மார்க்சிய எதிரிகளுக்கு உவப்பாக ஆகிவடலாம் எனும் அச்சம் காரணாகவே, அவர் சோசசலிச நாடுகள் விழுந்ததின் பின், 1885 ஆம் ஆண்டு மார்க்சினது ஆவிகள் தரும் உத்வேகம் குறித்துப் பேசினார் எனும் விமர்சகர்களும் உண்டு.
1968 பாரிஸ் மாணவர்-தொழிலாளர் எழுச்சிக்கு முன்னதாக 1967 ஆம் ஆண்டு பேச்சும்; நிகழ்வும் (ஸ்பீச் அன்ட் பினமினா), இலக்கணவியல் (கிரேமடாலஜி), எழுதுதலும் வித்தியாசமும் (ரைட்டிங் அன்ட் டிபரன்ஸ்) போன்ற நூல்களை எழுதியதின் வழி கட்டுடப்பை ஒரு விமர்சன நுட்பமாக ழாக் தெரிதா முன்வைத்தார். ஸ்டாலினியமாகச் சீரழிந்த நிலவிய சோசலிசம், அழுகிய முதலாளித்துவம் போன்றவற்றினால் அதிருப்தியுற்ற மாபெரும் மக்கள் எழுச்சி; பிரான்சில் எழுந்த தருணத்தில்தான்; தெரிதா திவிரமாகக் கோட்பாட்டுத் தளத்தினுள் பிரவேசித்தார்.
யூத இனவெறுப்பு நிலவிய சூழலில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட யூதனாக, பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தின் கீழ் வாழ நேர்ந்த, கால்நடை மேய்க்;கும் கீழ் மத்தியதரவர்க்கத்தில் அல்ஜீரியனாகப் பிறந்த அவர், அல்ஜீரியனாகவும் அமைப்பியல் மார்க்சியனாகவும் இருந்த,அதே வேளை, ஸ்டாலினியத்திற்கும் மனித முகத்துடனான சோசலிசத்திற்கும் இடையில் ஒரு விஞ்ஞான முறையியலைக் கண்டுபிடிக்க முனைந்திருந்த அல்தூசரின் மனிதமைய எதிர்ப்புப் (ஆன்ட்டி ஹியூமனிசம்) பார்வையினால் அதிகமும் பாதிப்புற்றிருந்தார். நீக்கமறவும் எல்லையற்றும் எங்கெங்கும் நிறைந்திருக்கும்; அதிகாரம் குறித்த பூக்கோவினது கருத்துக்களும்; தெரிதாவின் சிந்தனையமைப்பில் பாதிப்புச் செலுத்தியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பிரெஞ்சு அரசியல்-கலாச்சார-தத்துவ தளத்தில் நடந்த விவாதங்களைப் புரிந்து கொள்ளாமல் தெரிதாவைப் புரந்து கொள்வது சாத்தியமில்லை. பாசிசம் ஸ்டாலினியம் போன்றவற்றின் பின்னான அரசியல் காலம் தெரிதா பிரவேசித்த காலம். மனித மையத்தையும் அனுபவத்தின் பின்னமைந்த உள்ளுணர்வின் வழியமைந்த நடவடிக்கையும் வலியுறுத்திய ஸார்த்தரின் இருத்தலியல், மனிதன் பிரபஞ்ச மயமானவன் அல்ல, அவன் குறிப்பிட்ட கலாச்சாரத்தினாலும் புவியியலினாலும் வித்தியாசப்பட்டவன்;, அவனவனது கலாச்சாரப் பிரபஞ்சமே அவனைத் திர்மானிக்கிறது எனப் பேசிய மானுடவியல் அமைப்பியலாளரான லெவி ஸ்ட்ராஸ்;, மனிதன் எனும் கருத்தாக்கம் சமீபத்திய கண்டுபிடிப்புத்தான் எனக் கோரியபடி, மனிதனை உருவாக்கிய மேற்கத்திய அப்பாலைத் தத்துவத்தின் ஒழுக்கம், பாலியல்பு, சிறையமைப்பு போன்றவற்றைக் கேள்விக்குட்படுத்திய பூக்கோ, சொல்லிற்கு ஒரே அர்த்தம் என்பது இல்லை எனக் கோரியபடி, மாமனிதனை உருவாக்கப் புறப்பட்ட ஹைடேக்கர் போன்றவர்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில்தான் தெரிதா தத்துவதளத்தில் பிரவேசிக்கிறார்.
ஹைடேக்கர்,ஸ்hர்த்தர் இடையிலான விவாதங்களும் அவர் முன் இருந்தன. ஸ்டாலினியம் பாசிசம் மார்கசியம் முதலாளித்துவம் தாராளவாதம் என அனைத்துக் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணம் மேற்கத்தியத் தத்துவத்தின் வேராக இருந்த அர்த்தமையவாதமே (லோகோ சென்டிரிசம்;) என்றார் தெரிதா. மேற்க்த்திய தத்துவத்தில் எழுத்திற்கும் மேலாக எப்போதுமே பேச்சுகுக்கு வழங்கப்பட்டுவந்த ஆதாரத் தன்மையை அவர் கேள்விக்கு உட்படுத்தினார்.
சிந்தனை -பேச்சு- சொல் போன்றவற்றின் தொடர்ச்சியில் உண்மைக்கு அருகில் பேச்சே இருக்கிறது எனும் மேற்கத்திய தத்துவ அடிப்படையை அவர் விசாரணைக்குள்ளாக்கினார். பேச்சு சிந்தனைக்கு மிக அருகில் காலத்திலும் இடத்திலும் இருத்தலைக் கொண்டிருக்கிறது என்பதனை அவர் குலைத்தார். பேச்சுக்கு மாற்றாக எழுத்தைப் பிரதானப்படுத்துவதன் மூலம். மேலுக்கு மாற்றாக கீழையும், பிரதானமானதற்கு மாற்றாக பிரதானமல்லாததையும் வைப்பதன் மூலம் இந்தக் குலைப்பு நடவடிக்கையை (டிஸ்டரக்ட்) அவர் மேற்கொண்டார்.
மேற்கத்தியத் தத்துவத்தின் குலைப்பு நடவடிக்கைக்கு வலுவான மொழியியல் அடிப்படையை தெரிதாவுக்கு சசுர் வழங்கினார். மொழி சப்தத்தினாலும் கருத்தாக்கத்தினாலும் குறித்தன்மைய அடைகிறது எனத் தெரிவித்த சசூர், வித்தியாசத்தினாலேயே அது அர்த்தம் பெறுகிறது எனவும் தெரிவித்தார். சப்தம் அல்லது பேச்சு இருத்;தலையும், கருத்தாக்கம் இன்மையையும் குறிப்பதனால், வித்தியாசத்தினாலேயே குறி அர்த்தம் பெறுவதனால், எப்போதுமே அர்த்தம் என்பது இன்மையும் இருப்பும் கொண்டதற்கு இடையில் தீர்மானிக்கவியலாதபடி அலைந்து கொண்டிருக்கிறது எனத் தெரிதா தெரிவித்தார்.
தெரிதாவின் கட்டுடைப்புக்கான இரண்டு ஆதாரங்களான வித்தியாசத்தை முன்னிலைப்படுத்தலும், தீர்மானிக்கவியலாததை முன்வைத்தலும்; என்பதன் வழி பல்வேறு அர்த்த சாத்தியங்களை முன்வைத்தல் என்பதாக அவரது அணுகுமுறை விரிந்தது.
திர்மானிக்கவியலாமை தெரிதாவின் கட்டுடைப்பில் பிரதான இடத்தைப்பெறுவதனால், திட்டவட்டமான கருத்தாக்கங்கள் இலக்குகளுடன் விமோசன அரசியலைப் பேசுபவர்களுக்கு தெரிதவைத் தொடர்ந்து செல்வது சாத்தியமில்லாமல் இருந்தது. பற்பலஅர்த்த சாத்தியங்கள் கொண்ட வித்தியாசம் பிரதானப்படுவதால் அவரது கட்டுடைப்பு பாசிஸ்ட்டுகளாலும் கொண்டாடப்படும் சூழ்நிலை உருவாகியது.
நடைமுறையில் தெரிதாவின் நிறுவன எதிர்ப்புக் கட்டுடைப்பில் ஆக்கப் பண்புகளைக் கொண்ட அவரது கிராமடாலஜி நூலை மொழிபெயர்த்த காயத்ரி ஸ்பீவக், தெரிதாவின் மீது தன் கோபத்தையும் (ரேடிகல் பிலாஸபி 54 : 1990) வெளியிட்டிருக்கிறார். கட்டுடைப்புவாதியான பெண்நிலைவாத மாரக்சியர் எனத் தன்னை வெளிப்படுத்திக்; கொண்ட காயத்ரி; ஸ்பீவக், தெரிதாவின் விமர்சன நுடபத்தின்படி பழமைவாதக் கட்டுடைப்பு இருக்க முடியும் எனவும், தெரிதா மார்க்சியத்தை நோக்கி நகராததால் அவர் மிது தனக்குக் கடுமையான கோபம் உண்டு எனவும் தெரிவித்தார்.
எழுபது எண்பதுகள் சோசலிசம் மீதான விமர்சனமும், அதனது விழுச்சியும் உச்சத்தில் இருந்த காலம். தெரிதாவின் மீதான இடதுசாரி விமர்சனங்கள் அப்போது கடுமையாக இருக்கவில்லை. ஆனால் எண்பதுகளில் இரண்டு மாற்றங்கள் நிகழந்தன. முதலாவதாக தெரிதாவின் மனிதமைய எதிரப்பு ஆதரத் தத்துவதியான ஹைடேக்கர் திட்டவட்டமான கொள்கைடன் பாசிசஸ்ட்டாகவும் இட்லர் ஆதரவாளராகவும் இருந்தார் எனும் உண்மை வெளியானது. இரண்டாவதாக தெரிதாவின் கட்டுடைப்பை அமெரிக்காவில்; பிரபலமாக்கிய பால் தி மான் பாசிச காலகட்டத்தில் பெல்ஜியத்தில் இருந்த வேளை பாசிசத்திற்கு ஆதரவாக யூத இனக்கொலை ஆதரவுக் கட்டுரைகளை இட்லர் ஆதரவுப் பத்திரிக்கையில் எழுதினார் எனும் தீமான் மறைத்த உண்மை வெளியானது.
தெரிதாவுக்கு மிகப் பெரிய நெருக்கடிகளை இவ்விரண்டு சம்பவங்கள் உருவாக்கியது. பால் தீ மானின் அன்றைய எழுத்துக்கள் மிகுந்த வன்முறை கொண்டதாக இருக்கிறது என தெரிதா ஓப்புக் கொள்ள வேண்டி வந்தது. ஆனால் வக்கிரமான யூதவிரோதம் குறி;த்து தீ மான் மாறுபட்ட கருத்து வெளியிட்டார் எனும் அடிப்படையில், கட்டுடைப்பின் திர்மானிக்கவியலாமையை தீ மான் எழுத்துக்களின் மிது பாவித்தார் தெரிதா.
பாசிசத்திற்குப் பலியான யூதமக்களை இரண்டாம் பட்சமாக்கி, தீ மானை பலியானவராக முன்வைக்கும் திருகல் போக்கு இது எனத் தெரிவித்த டெரி ஈகிள்டன், தீ மானின் பிற்காலத்திய எழுத்துக்கள் அவரது பாசிசக் கண்ணோட்டத்தின் தொடர்ச்சி எனக் காண்பதையும் நிராகரித்தார். ஆனால் விமோசன அரசியலை முற்றாக மறுதலித்த சம்சயவாதியாக தீ மான் இருந்ததற்கான காரணம் அவரது புhசிச ஆதரவு மிச்ச சொச்சங்கள் அவரில் இருந்ததே காரணம் என்றார் ஈகிள்டன்.
பாசிஸ்ட்டுகள் தொடர்பாக தீர்மானிக்கவியலாமையையும் வித்தியாசமானவையும் பாவிக்கப்படுதலை முற்றிலும் நிராகரித்தார் ஈகிள்டன். அதே டெரி ஈகிள்டன்தான் தெரிதா மீதான பழமைவாதிகளின் கொடூரமான தாக்குதலையும் நிராகரித்தவராக இருக்கிறார்.
டெரி ஈகிள்டன் சொல்கிறபடி, அமெரிக்காவில் ரோரிட்டியும், பால் தீ மானும் தெரிதாவின் கட்டுடைப்பை அரசியல் அற்றதாகவும் வரலாறு அற்றதாகவும,; வெறுமனே காலம் கடந்த அறவியல் விசாரணையாகவும் ஆக்கியது போல, இந்திய தமிழகச் சூழலில் இந்துத்துவவாதிகள் தெரிதாவை ஒரு அத்வைதியாக, பூரணம்-சூன்யம் எனும் இருண்மையில் சிக்கியவராக ஆக்கிவிடக்; கூடும். அல்லது தமது சுய அடையாளங்களை மட்டுமே பெருங்கதையாடலாக்க முயல்கிற கலாச்சாரச்சார்புவாதிகள் தெரிதாவை ஒரு அழிவுகரமான கட்டுடைப்புவாதியாகவும் பயன்பாட்டு நோக்கில் முன்னிறுத்திவிடக்கூடும்.
கட்டுடைப்பை அழிவு நடவடிக்கையாக முன்வைப்பவர்களுக்கு மாறாக, தெரிதா அழிவை முன்மொழிந்தவரல்ல மாறாக குலைப்பை முன்வைத்தவர். பிறிதொரு வகையில் அரசியல் சாரா தூய இலக்கியவாதிகளும்; பல்கலைக் கழகப் பேராசிரியர்களும்; தெரிதாவை வெறுமனே மொழி விளையாட்டுக்களை நிகழ்த்திய ஒரு கல்வித்துறைசார் இலக்கிய விமர்சகராகவே முடித்துவிடக் கூடும்.
தெரிதாவினது எழுத்துக்களைத் தீவிரமாக வாசித்து, அவர் குறித்து காத்திரமான அபிப்பிராயங்களை முன்வைத்து வரும் மார்க்சியர்களும் கல்வித்துறையாளர்களும் நடவடிக்கையாளர்களுமான பிரெடரிக் ஜேம்சன், கிறிஸ்தோபர் நோரிஸ், டெரி ஈகிள்டன், காயத்திரி ஸ்பீவக், ஜீடித் பட்லர் போன்றவர்கள் நெருதாவினது எழுத்துக்களின் அறுதி நோக்கம், மேற்கத்திய நிறுவனங்கள், மேற்கத்தியத் தத்துவும், இலக்கியம் அரசியல் அறவியல் நீதியமைப்பு என அனைத்தும் குறித்த சந்தேகத்தை வெளியிடுவதனாலும், இவைகள் அனைத்தையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி சதா மாற்றீட்டை முன்வைப்பதாலும், மிகுந்த அரசியல் பண்பு வாய்ந்தது என்றே குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவினால்; சூறையாடப்பட்டுவரும் இன்றைய ஒற்றை ஆதிக்க உலகில், எந்தவிதமான கலாச்சார அரசியல் எதிர்ப்பையும் உருவாக்கவியலாதவை என போத்ரிலாரையும் லியோதார்த்தையும் நிராகரித்துவிடும் கிறிஸ்தோபர் நோரிஸ் தெரிதாவினது கட்டுடைப்பு விமர்சனம்;, அதிகாரத்தின் ஊற்றுக்களை சகல தளங்களிலும் மிகநுட்பமாக வெளிப்படுத்தும் தன்மையன என்கிறார்.
தெரிதா எந்தக் குரலற்ற மக்களிடையில் இருந்து பிறந்தாரோ அந்த விளிம்புநிலை மக்கள் குறித்துப் பேசிய, அதே வேளை விளம்புநிலை மக்களுக்கான மார்க்சியத்தைப் பேசிய ரேமான்ட் வில்லியம்ஸ், இ.பி. தாம்ஸன், ஸடூவர்ட் ஹால் மறி;ம் பெண்நிலைவாதிகள் போன்றவர்களோடு வைத்துப் பேசத்தக்கவர் என்கிறார் டெரி ஈகிள்டன்.
தெரிதாவின் ‘மார்க்சின் ஆவிகள்’ புத்தகம் வெளியானபோது ஈகிள்டன் எழுதிய (தி ரேடிகல் பிலாசபி : 73 : 1995) எழுதிய ‘மார்கி;யமல்லாத மார்க்சியம்’ எனும் கட்டுரை, உலகின் இன்றைய பணிரெண்டு சிந்தனையாளர்கள் எனும் தொகுப்பிற்காக எழுதிய (நியூ ஸ்டேட்ஸ்மேன் : ஜூலை 14 : 2003) தெரிதாவின் கோட்பாடு குறித்த விமர்சனக் கட்டுரை, தெரிதா மரணமுற்றபோது இங்கிலாந்துக் கல்வியாளர்களும் பழமைவாதிகளும் தெரிதா மீதான கடுமையான தாக்குதலின் போது ‘தெரிதா மீது பாயவேண்டாம்’ என ஈகிள்டன் ஆற்றிய (தி கார்டியன் 13 அக்டோபர் 2004) எதிர்வினை போன்றவற்றின் வழி தெரிதாவிடம் மார்கசியர்கள் ஏற்பவையும் நிராகரிப்பைவையும் குறித்து தெளிவான பார்வையை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் ஈகிள்ட்ன்.
நிறவாதத்திற்கு எதிராகவும், மண்டேலாவின் விடுதலைக்கு ஆதரவாகவும நின்ற தெரிதாவை அவர் ஏற்றார். மேற்கத்திய நிறுவன அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கும்; தெரிதாவை அவர் ஏற்றார். விமோசன அரசியலை முன்வைக்காத தெரிதாவை அவர் மறுத்தார். கட்டுடைப்பின் தீர்மானிக்கவியலாத தன்மையையும், வரலாறு கடந்த எல்லையற்ற தன்மையையும் அவர் மறுத்தார். மொழி விளையாட்டாக எஞ்சிய தெரிதாவின் இலக்கிய விமர்சனத்தைப் பல முறைகள் ஈகிள்டன் மறுதலித்தார்.
இலக்கு, அரசியல் நிறுவனம், சோசலிசக் கட்சி, இதுவரைத்திய சோசலிச அனுபவம், ஸ்டாலின் மீதான மார்கசியர்களின் விமர்சனம் போன்ற எதுவும்; இல்லாத தெரிதாவின் மார்க்ஸ் தொடர்பான நூலை, ‘மார்க்சியமில்லாத மார்க்சியம்’ என நிராகரித்தார் ஈகிள்டன்.
தெரிதாவின் இறுதிக் காலத்தில் கிறித்தவ இறையியலாளரான லெவினாசின் பார்வை தெரிதா மீது படிந்தது என்பார்கள் விமர்சகர்கள். ‘மார்க்சின் ஆவிகள்’ புத்தகத்தில் தெரிதாவின் சொற்களின் மீதான் லெவினாசினது பாதிப்பைக் காணவியலும். மதமல்லாத தீர்க்கதரிசனம், தீரக்கதரிசனமல்லாத தீரக்கதரிசனம் என்பதனை மார்க்சியக் கனவின் நீட்;சியாக தெரிதா அந்நூலில் பேசுகிறார.;
1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெரிதாவுக்கு கேம்பிரிடஜ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கென முடிவு செய்தது. இங்கிலாந்தின் மரபுரீதியான தத்துவாதிகளும் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களும் தெரிதாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என போரக்; கொடியுயர்த்தினார்கள். தெரிதா முறைப்படியான தத்துவாதியும் இல்லை. இலக்கிய விமர்சகரும் இல்லை என அவர்கள் வாதித்தார்கள். தெரிதா ஒரு அவநம்பிக்கைவாதி எனவும், அர்த்தம், அடையாளம்,கருத்தாக்கம், நீதி என அனைத்தையும் மறுப்பவர் எனவும், அவர் ஒரு அராஜகவாதியான கவி எனவும் அவர்கள் வாதிட்டார்கள்.
கல்வியாளர் எனும் அளவில் தத்துவவாதியாக முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட தெரிதா, அவருக்குப் பயிற்றுவிக்கபட்ட மேற்கத்திய தத்தவத்தின் ஆணிவேர்களையே அசைத்துப் பாரத்தவராக இருந்ததால், தத்துவம், இலக்கியம் மட்டுமல்ல அனைத்துத் துறைகளுக்கும் தனது கட்டுடைப்பைப் பிரயோகித்து அனைத்தையும் தீர்;மானிக்கவியலாததாகவும் எல்லையற்றதாகவும் ஆக்க முயன்றதால், காரண காரிய விஞ்ஞானப் பார்வையைச் சகலத்திலும் வழியுறுத்திய ஆங்கில மரபாளர்கள் தெரிதாவை நிராகரித்தார்கள்.
ரேடிகல் பிலாஸபி ஆசிரியர் குழவைச் சேர்ந்த கல்வியாளரான ஜொனாதன் ரீ, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியான டெரி ஈகிள்டன் போன்றவர்கள் கேம்;பிரிட்ஜ்; பேராசிரியர்களின் எதிர்ப்பு தத்துவார்த்த ரீதியானது என்பதை விடவும் அமைப்புரீதியான எதிர்ப்பு என மறுப்பு அறிக்கை வெளியிட்டார்கள்.
அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் தெரிதாவை இவர்கள் மறுப்பதில் ஆச்சர்யமில்லை எனவும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்தார்கள். இறுதி வாக்கெடுப்பில் தெரிதாவுக்கு ஆதரவாகக் கல்வியாளர்கள் திரண்டதால் தெரிதா கேம்பிரி;ஜ் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை 1992 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்றுக் கொண்டார்.
தெரிதா அரசியல் அபிப்பிராயங்களை என்றும் நேரடியாகச் சொன்னவரில்லை. தென் ஆப்ரிக்காவில் நடந்த கருத்தரங்கொன்றில் மன்னித்தல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலிறுக்கவில்லை. மன்னிக்கலாம் ஆனால் நிறவாதக் கொடுமைகளை மறக்கமுடியாது என்றார் நெல்சன் மண்டேலா.
பயங்கரவாதம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், தாராளவாதம் போன்றவை குறித்த கடுமையான விமர்சனங்களை தனது இறுதிக் காலத்தில் மேற்கொண்டார் தெரிதா. அறப் பண்புகள் குறித்தும், நீதியுணர்வு குறித்தும் அவர் தனது இறுதிக் காலத்தில் பேசினார்.
தான் மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளுக்கு எதிரானவர் என்பதனை மறுத்த அவர், தான் எப்போதுமே மறுமலர்ச்சி யுக மதிப்பீடுகளின் மித பெருமதிபபு கொண்டவன் எனவும்; தெரிவித்தார்.
தன்னை ஒரு போதும் அவர் பின் நவீனத்துவாதியென்றோ அல்லது பின் அமைப்பியல்வாதி என்றோ கோரிக் கொண்டதில்லை.
மொழிக்கு அப்பால் எதுவுமே இல்லையென ஒரு போதும் தான் கோரிக்கொண்டதில்லை என்ற அவர், தன்னை வெறுமனே மொழி விளையாட்டுக்காரராகப் புரிந்து கொண்டிருப்பதனைக் குறித்து வருத்தம் வெளியிட்டார். நான் மார்கியன் அல்ல என கார்ல் மார்கஸ் தெரிவித்ததது போலவே, தன்’ பெயரால் நடைபெறும் பின்;நவீனத்துவ முறையியல் உருவாக்கம் குறித்து அவர் நக்கல் செய்தார்.
தெரிதா தனது கட்டுடைப்பை ஒரு திட்டவட்டமான அமைவுக்குட்பட்ட முறையியலாக உருவாக்க என்றுமே முயன்றதில்லை. தெரிதா மேற்கத்தியத் தத்துவ மரபுகள், கோட்பாடுகள் போன்றவற்றில் எதனையும் நிராகரிக்கும் முகமாகவோ அல்லது முழுமையாக எதனையும் ஏற்குமுகமாகவோ தனது அறிவார்நத நடவடிக்கையைத் தேர்ந்த கொள்ளவில்லை. மேற்கத்திய தத்துவ மரபைக் குலைப்பதாகவும்;, பிரதானமானதற்கு மாற்றாக வித்தியாசமானதையும் விளிம்புநிலையில் இருந்ததனையும் பிரதான இடத்திற்குக் கொண்டு வருவதாகவுமே அவரது நடவக்கை அமைந்தது.
தெரிதா தனது புகைப்படம் வெளியாவதனை தொண்ணூறுகளின் இறுதி வரையிலும் மறுத்து வந்தார். தெரிதா எனும் பெயரில் அவர் குறித்து ஒரு விவரணப்படமே வெளியானதையடுத்து, அவர் ஒரு புகழ்பெற்ற கவர்ச்சியான நட்சத்திரப் பேச்சளாராக, வெகுஜனக் கலாச்சார பிம்பமாக ஆனார்.
அவரது மரபை பிரெஞ்சு லிபர்ட்டேரியன் மரபு எனக் குறிப்பிடுவார் டெரி ஈகிள்டன். சுச்சுவேசனிசம,; ஸர்ரியலிசம் போன்ற ஸ்டாலினிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, கலாச்சாரக் கொண்டாட்ட அணியினர் அவருக்கு ஆதர்சமாக அமைந்தனர். லிபர்ட்டேரியனான நோம் சாம்ஸ்க்கி பகழ்பெற்ற அளவிலேயே தெரிதாவும் அமெரிக்காவில் அறிவுத்துறையினர் மத்தியில் புகழ்பெற்றார்.
அவர் மணரமுற்றபோது இங்கிலாந்தின் ‘டைம்ஸ்’ பத்திரிக்கை தெரிதாவின் மரணத்திலேனும் ஏதேனும் நிச்சயத்தன்மை இருக்கிறதா என நக்கலாக எழுதியது. ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கை, தெரிதாவும் அவரது நண்பர்களும் கட்டுடைப்பு என்றால் என்ன என்பது குறித்துத் திட்டவட்டமாக விளக்க விரும்பவில்லை அல்லது அவர்களால் முடியவில்லை என்று எழுதியது. ஆகவே தெரிதாவின் கட்டடைப்பு என்றுமே புரிந்து கொள்ள முடியாததாகவும், முரண்பட்ட வியாக்யானங்களுக்கு உட்பட்டதாகவுமே இருக்கும் எனவும்; தீரப்பு வழங்கியது.
ஜீடித் பட்லர்போன்ற பெண்நிiவாதிகள் உட்பட நூற்றுக் கணக்கான அமெரிக்கக் கல்வியியலாளர்கள் தெரிதாவின் கட்டுடைப்பின் தன்மையைக் புரிந்;து கொள்ளாத நியூயார்க் டைம்ஸின் அறிவு எதிரப்புத் தன்மையைக் கடமையாக விமர்சித்து கூட்டறி;க்;கை (அந்த அறிக்கையில் என் பெயரையும் நான் இணைத்துக் கொண்டேன் என்பது ஒரு சந்தோசமான அனுபவம் – ய.ரா) வெளியிட்டார்கள்.
இங்கிலாந்திலும் தெரிதாவின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த கன்சர்வேடிவ் கட்சியின்; தத்துவவாதியாக ரோஜர் ஸ்குருட்டன் இருக்கிறார். தெரிதா வாழ்ந்த போதும் சரி, அவரது மரணத்தின் பின்பும் சரி, அவர்மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர்களும் அவரை முற்றாக மறுத்தவர்களும் பழமைவாதிகள்தான்.
ஐரோப்பிய மறுமலர்ச்சியுக மதிப்பீடுகள் தொடர்பாகவும், அமெரிக்க மேலாதிக்க யுத்தம் தொடர்பாகவும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பிரச்சினை தொடர்பாகவும கட்டுடைப்பு மொழி தவிர்த்;து தெரிதா மிகத் தெளிவாக தமது கருத்துக்களை முன்வைத்த தருணங்களும் உண்டு. உலகின் பிற தாராளவாத இடதுசாரி அறிஞர்களுடன் சேர்ந்து கூட்டறிக்கைகளில் தெரிதா கையொப்பமிட்ட இரண்டு தருணங்களை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். முதலாவதாக ஈராக் யுத்தம் தொடர்பாக யுத்தத்தின் பின்னால்: ஐரோப்பிய மக்களின் மறுபிறப்பு எனும் கூட்டறிக்கையில் ஜெர்மானியத் தத்துவவாதி ஹேபர்மாசுடன் சேர்ந்து தெரிதாவினது கருத்து வெளிப்பட்ட தருணத்தையும் (பிராங்பர்ட்டர் அல்கமின் ஜீதுங் : 31 மே 2003 : ஜெர்மனி ), இரண்டாவதாக பாலஸ்தீன நிலப்பிரப்பில் அமைந்த பிர்சீத் பல்கலைக் கழகம் இஸ்ரேலிய ராணுவ நடவடிககைகளால் மூடப்பட்ட வேளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து தெரிதாவின் கருத்து வெளிப்பட்ட தருணத்தையும்;(கவுண்டர் பன்ச்: 23 ஜீன் 2003 : அமெரி;க்கா) நாம் ஆதாரமாகக் குறிப்பிடலாம்
ஸ்பானிய உளநாட்டு யுத்தம், பாசிசம், ஸ்டாலினியம், வியட்நாமிய யுத்தம் போன்று உலகின் அறிவுஜீகள் நிலைபாடு எடுத்தே ஆகவேண்டிய பிரச்;சினையாக இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமைந்த இன்னொரு விடயம், பயங்கரவாதம் தொடர்பானது ஆகும். இது குறித்தும் ழாக் தெரிதா தனது திட்டவட்டமான அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் சம்பவம் இடம் பெற்று சரியாக 40 நாட்களின் பின், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி தெரிதாவுடன் கியாவொன்னா போர்தோரி நிகழ்த்திய இந்த உரையாடல், ஜெர்மானியின் பிராங்க்பரட் பள்ளிச் சிந்தனையாளர்; ஹேபர்மாசுடன் தனியே நடத்தப்பட்ட உரையாடலையும் இணைத்ததாக விரிவாக்கப்பட்டு பிற்பாடு முழு அளவிலான ( பிலாஸபி இன் எ டைம் ஆப் டெரர்: சிகாகோ யுனிவர்சிடி பிரஸ் : 2003 ) நூலாகவும் வெளியானது
தெரிதா ஒரு கல்வித் துறைசார் தத்துவவாதியாக, பாசிசத்திற்கு தத்துவ மூலாதாரமாக ஆகின நீpட்சேவிலிருந்தும், பாசிஸ்ட்டாகவே வாழ்ந்த ஹைடேக்கரிலிருந்தும் ஆதர்சம் பெறுவது தவிரக்கவியலாது, நடந்து வந்த அமைப்பியல்சார் விவாதங்களிலிருந்தும், ஸ்டாலினிய நீக்க விவாதங்களிலிருந்தும், நிலவிய மனித மைய எதிர்ப்பு விவாதங்கலிருந்தும் அவர் மீறிச் சென்றிருக்க முடியாது.
நீட்;சேவுக்கும் ஹைடேக்கருக்கும் தெரிதாவுக்கும் இருந்த மிகப் பெரிய வித்தியாசமே மார்க்சியர்களின் மத்தியில்; தெரிதாவின் இடத்தை உறுதி செய்கிறது. நீட்சேவும் ஹைடேக்கரும் பொதுவுடமையையும் மார்க்சியததையும் நிராகரித்தவர்கள். தெரிதா ஒரு போதும் மார்க்சியத்தை நிராகரித்தவராகவோ, மார்க்சிய விரோதியாகவோ இருந்தவரில்லை.
சோசலிசமும் மார்க்சியமும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்த காலத்தில், சோசலிச வீழச்சியின் பின் ‘மார்க்சினது ஆன்மா மீண்டும் எழும்’ எனச் சிந்தித்தவர் தெரிதா. தனது இறுதிக் காலத்தில் அறவுணர்வு குறித்தும் நீதியுணர்வு குறித்தும் பேசிய அவர் ( தெரிதாவின் அரசியல ;: மார்க் லிலா: நியூயார்க் ரிவியூ ஆப் புக்ஸ் : ஜூன் 28: 1998), தனது ‘கட்டுடைப்பை ஒரு வகையில் மார்க்சியத்தின் தொடர்சியெனவும்’ குறிப்பிட்டார். ‘சர்வதேசிய கீதத்தைத் தான் கேட்கும் ஒவ்வொரு முறையும் சிலிர்ப்புக்கு ஆட்படுவதாகவும்’ அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நிறுவனங்களையும் நிலவிய அனைத்தையும் சந்தேகித்து, விளிம்புநிலைப் பார்வையையும் வித்தியாசமானவற்றையும் முன்னணிக்குக் கொண்டுவந்த தெரிதாவை இதனாலேயே மார்க்சியர்கள் விமர்சனத்துடன் ஏற்கிறார்கள். ‘தான் ஒரு பெண் போல எழுதவிரும்புகிறேன்’ என்று தெரிதா சொன்ன காரணத்தினாலயே அவர் மீது விமர்சன உணர்வு கொண்ட காயத்ரி ஸ்பீவக், ஜூடித் பட்லர் போன்ற பெண்ணிலைவாதிகள் அவரை விமர்சனத்துடன்; ஏற்கிறார்கள்.
1930 ஆம் ஆண்டு எளிமையான யூத அல்ஜீரியக் குடும்பத்தில் பிறந்து, யூதர் என்பதன் பொருட்டு 10 வயதிலேயே பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தனது வாழ்காலத்தில் உலகின் சகல சிந்தனையாளர்களிடமும் மாபெரும் பாதிப்பினை எற்படுத்தி, தனது 74 ஆம் வயதில் மரணமுற்ற வெண்பஞ்சு போலும்; தலைமுடி கொண்ட ழாக் தெரிதாவின் மரணத்தின்பின், ‘தி லண்டன் கார்டியன்’ பத்திரிக்கை உலகெங்குமிருந்த பல்துறை அறிஞர்களிடம்; தெரிதா குறித்த அபிப்பிராயங்களைக் கேட்ட வேளையில், தெரிதா குறித்த விவரணப்படத்தின் இயக்குனரான அமி ஜேரிங் காப்மென் வெளியிட்ட அஞ்சலி, இறுதிக் கால தெரிதா குறித்த மிகச்சரியான விவரணச் சித்திரம் என்பதில் சந்தேகமில்லை.
அமி சொல்கிறார் :
தெரிதா தவறாகச் சித்திரிக்கப்பட்டவர். அவர் அவநம்பிக்கைவாதியோ அல்லது கலாச்சாரச் சார்புவாதியோ அல்ல. அனைத்தும் சமம் எனவோ, உனக்கு என்ன விருப்பமோ அதனைச் செய்து கொள் எனவோ அவர் ஒரு போதும் சொன்னதில்லை. கடவுளோ அல்லது உனக்கு மேலான சக்தியோ இல்லை என்பதால் உனக்கு நீயே பொறுப்பேற்றுக் கொள் என்றார் தெரிதா.
முற்ற முழுதான உண்மை என்பது இல்லை. ஆகவே ஒரு தேர்ந்து கொண்ட நடவடிக்கையை நீ ஏற்றுக்கொள் என்றார் தெரிதா. அவரது சிந்தனையமைப்பு கறரான அறவுணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும் ( தி கார்டியன்: அக்டோபர் 12: 2004).
‘எல்லாவற்றையும் சந்தேகி அனைத்தையும் இரண்டாக்கு’ என்றார் மார்க்ஸ். ‘அனைத்தையும் சந்தேகி, இரண்டாம் பட்சமானதையும் வித்தியாசமானதையும் விளிம்புநிலையில் உள்ளதையும் முன்னுக்குக்; கொண்டுவா’ என்கிறார் தெரிதா.
தெரிதாவின் தோள் மீது நின்று இன்று நாம் தொலைதூர உலகத்தைப் பார்க்க முடியும். மார்க்சின் ஆன்மாவை மறுபடி உலுப்பி எழுப்பியிருக்கிறார் தெரிதா. நம் காலத்திற்கான மார்க்சைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு மனித விமோசனத்தில் நம்பிக்கையுள்ள மானுடர்கள் அனைவருக்கும் உரியது.
மரணத்திலிருந்தின் விளிம்பிலிருந்து தெரிதா மட்டுமல்ல கார்ல் மார்க்சும்தான் உயிர்த்தெழுந்திருக்கிறார்.