குமுதம் இதழுக்கு லைக்கா மோபைலின் நிறுவனரும் இயக்குனருமான சுபாஸ்கரன் வழங்கிய நேர்காணலில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தவிர, இலங்கைக்குச் சென்ற சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத் தனியார் நிறுவனம் இலங்கை அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும் கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள்.
முதலில் இலங்கைக்குச் சென்ற லைக்கா உரிமையாளர் தனியார் நிறுவனத்தின் ஹெலிகொப்டரில் சென்றார் என்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றுப் பருக்கைக்குள் மறைக்கும் முயற்சி. அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஹெலிகொப்டரில் இராணுவத்துடனேயே சென்றார்கள் என்பதற்கான புகைப்பட ஆதரங்கள் வெளியாகியுள்ளன.
மேலேயுள்ள படத்தில் லைக்கா நிறுவனத்தின் இயக்குனர் சுபாஸ் ஹெலிகொப்டரிலிருந்து இறங்கி நடந்து செல்வதையும், பின்னணியில் புலம்பெயர் நாடுகளில் தென்னிந்திய சினிமாக் காட்டிப் பணம் சம்பாதிக்கும் ‘கத்தி’ இணைத் தயாரிப்பாளர் ஐங்கரன் பிலிம்ஸ் கருணாகரமூர்த்தியையும், லைக்கா நிறுவனத்தின் முக்கியஸ்தர் பிரேம் சிவச்சாமி இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியால் வரவேற்கப்படுவதையும் காணலாம்.
சுபாஸ்கரன் எதோ இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டை போனால் போகட்டும் என்று எட்டிப்பார்த்துவிட்டு வந்தார் என்ற தொனிப்பட செய்திகளில் சொல்லப்படுகின்றது. உலகத்தின் மனிதாபிமானிகளும், ஜனநாயாகவாதிகளும், முற்போக்குசக்திகளும் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என்று குரலெழுப்பிக்கொண்டிருந்த வேளையில், லைக்கா நிறுவனமே மாநாடு நடப்பதற்கான ஒரு பகுதிச் செலவைப் பொறுப்பெடுத்துக்கொண்டது.
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களிடம் பெற்ற இலாபத்தை இலங்கையில் ராஜபக்சவைப் புனிதப்படுத்த முதலிட்ட லைக்கா அதிபர் தனக்கும் ராஜபக்சவிற்கும் தொடர்பில்லை என்று கூறுவது மக்களின் தலையில் மிளாகாய் அரைக்கும் முயற்சி.
இதற்கும் மேலாக ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து சுபாஸ்கரன் குழுவினர் போலி தொலைபேசி இன்டர்னெட் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் 100 மில்லியன் டொலர்கள் மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டிய செய்தி ஆதாரங்களுடன் சண்டேலீடர் மற்றும் இனியொரு சஞ்சிகைகளில் வெளியாகியது.
இனப்படுகொலை நடத்திய இலங்கை இராணுவத்தோடு கைகுலுக்கும் அதே முகங்கள் தமிழ் நாட்டில் ‘கத்தி’ சுத்துகின்றன. ஐங்கரன் வீடியோ நிறுவனத்தின் கருணாகரமூர்த்தியும், சுபாஸ்கரனும் அவர்களது இரத்தக்கறை படிந்த்த கரங்களோடு தென்னிந்திய சினிமா வியாபாரத்திலும் நுளைந்துள்ளார்கள்.
இலங்கையில் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை ராஜபக்ச குடும்பத்தோடு இணைந்து கொள்ளையடித்துவிட்டு சமூக சேவை செய்வதாக நாடகமாடுகிறார்கள்.