Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லெனின் மதிவானத்தின் ‘உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்’ என்ற நூல் : கலாநிதி ந. இரவீந்திரன்

லெனின் மதிவானத்தின் ‘உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்’ என்ற நூல் சமூகவிடுதலைக்கான  மார்க்கத்தை  தேடத் தூண்டும் புது முயற்சியாகும்.
கலாநிதி ந. இரவீந்திரன்

உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல் என்ற சமூகவிடுதலைக்கான மார்க்கத்தை தேடத் தூண்டும் மிகத் தெளிவாகவே உலகமயமாதலையும்இ அதனாலான பண்பாட்டு நெருக்கடிகளையும் தீர்வு முயற்சிகளையும் பற்றி லெனின் மதிவானம் இந்நூலினூடாக விவாதிக்கின்றார்.
‘உலகமயம்’ உலகை ஒரு கிராமமாக உணர்த்தி எல்லோரும் தொடர்பாடலுக்குள் இயங்கும் வாழ்வினை நிதர்சனமாக்குவது நல்லதுதானேஇ இதற்குள் எங்கே வருகிறது பண்பாட்டு நெருக்கடி?

என்னதான் ஒரு கிராமம் போல ஆனாலும் அங்கே வாழ்வு எல்லோருக்கும் ஒரு படித்தாக இல்லை. பலர் மந்தைகள் போல ஓய்வொழிச்சலின்றி உழைத்து உருக்குலைய அதன் பயனை அபகரித்துக் கீழான இச்சைகளில் மூழ்கும் உழைப்பறியாத உலுத்தர்களே ஆடம்பரமான வாழ்வில் திளைக்கும் அவலம் இன்னமும் நீடிக்கிறது. ஆக இருதரப்பும் (இரண்டுக்கும் இடையே அல்லாடும் மத்தியதர வர்க்கமும்) மனிதகுலம் காணவிழையும் உன்னதமான பண்பாட்டு விழுமியங்களை இழந்தபடியே இருக்கும் வகையிலேயே உலகமயம் தொடர்கிறது.

மனித சமூகம் உழைக்கும் வர்க்கங்களாயும் சுரண்டும் வர்க்கங்களாயும் இரண்டுங்கொட்டான் மத்திய வர்க்கங்களாயும் உள்ள நிலையில் அனைவரும் ஒரு படித்தான சிந்தனைக்கோ ஒத்த கருத்துக்கோ வந்துவிட முடியாது. ” ஏறச்சொன்னால் எருதுவுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் ‘ எனும் நிலையே ஒவ்வொரு விடயத்திலும் அமையும் வகையில் நலன்கள் வேறுபட்டுள்ளன. ஒரு தரப்புக்கு உன்னதமாய் இருப்பது மறுதரப்புக்கு இழிவானதாயோ அவலமானதாயோ தெரியும். உன்மையான விடுதலை வெள்ளைப் பறங்கியைத் துரை என்று சொல்லுவது தகர்க்கப்படுவது மட்டுமல்ல பார்ப்பானை ஐயரென்று சொல்வதும் இல்லாமலாக்கப்படும் வகையில் அமைய வேண்டும் என்று ஏன் பாரதி சுதந்திரப் பள்ளு பாடினார்? ஊர்ப்பானைதனை உருட்டி தம் தொந்தி வளர்க்கும் பார்ப்பானின் நலனும் தலித் நலனும் ஒன்றாக இல்லை என்பதால்!

எமது தேசங்களின் ‘ஊர்ப்பானைகளைத் தமக்காக சுருட்டும்’ உலுத்தர்கள் சுரண்டுவதற்காக பெற்ற சுதந்திரம் உழைக்கும் மக்களை இன்னும் இன்னும் ஏய்த்து அவலவாழ்வுக்குள் தள்ளுவதாக அமைந்தது. இடையே சுயசார்புப் பொருளாதாரம் எழுபதுகளில் ஓகோவென்று இருந்தது மெய். வாழ்க்கைப்போராட்டம் கடினமானதாயிருந்த போதிலும் நம்பிக்கை வைத்து உழைப்பதால் நாடு சுபீட்சமடைந்து ஒவ்வொருவரும் உன்னதவாழ்வை எட்டமுடியும் என்ற எதிர்பார்ப்பு துளிர்த்திருந்தது. உழைக்கும் மக்களுக்கும் இந்த மண்ணில் பாத்தியதை உள்ளதான ஒரு அருட்டுணர்வு ஏற்பட்டிருந்தது. ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்களது ஊழலும் சுரண்டற் கும்பலின் வக்கற்ற பிரயோகங்களும் காரணமாக சுயசார்புப் பொருளாதாரம் தோல்வியில் முடிந்தது. உழைக்கும் மக்களின் அரசுகள் நடைமுறைப்படுத்துவது போன்ற தாற்பரியத்தை அவர்களிடம் எதிர்பார்க்க முடியதுதானே?

உழைக்கும் மக்களின் அரசாக இருந்த சோவியத் யூனியனும் சுரண்டற் கும்பலால் அபகரிக்கப்பட்டு சின்னாபின்னமாய்ச் சிதறியது. சோவியத் யூனியன் உலக வரைபடத்தில் காணாமல் போய்இ பல தேசங்கள் முளைவிட்டிருப்பது ஏதோ அற்பத்தனமான சிறிய மாற்றமல்ல. இந்த மாற்றத்தோடுதான் உலகமயம் வெற்றிபெற்றதான எக்காளம் எழுகிறது. முன்னரும் பின்னருமான மாற்றத்தின் அடிப்படையை அலசும் போது வேறுபாடு எத்தனை பாரியது எனப்புரியும்.

முன்னர்இ உழைப்பில் சிந்தும் வியர்வையும் விடுதலைக்காக தொடர்ந்து போராடுகையில் காணிக்கையாகும் உதிரமும் வீணாகிவிடாது: எதிர்காலத்தில் ஒரு சமத்துவ சமூகம் சித்திக்கும் என்ற நம்பிக்கை வலுவாக இருந்து மனுக்குலத்தை இயக்கிக் கொண்டிருந்தது. பின்னர் உலகமயத்தின் தத்துவமான பின் நவீனத்துவம் எதைச் சொன்னது? உன்னதமான எதிர்காலம் என்பதற்கான சமூக மாற்றம் என்ற பெருங்கதையாடல் எல்லாம் சரிப்பட்டுவராதுஇ அதற்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தில்லைஇ சிறுகதையாடல்களே மெய் ஒவ்வொரு சிறுகதை யாடலுக்குமுரிய அடையாளங்களும் தத்தம் இருப்புக்கு அருகிலுள்ளதோடு மோதிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் ளூ இது குழப்பங்களை வலுப்படுத்துமாஇ படட்டுமே இ குழப்பம் மட்டுமே நிதர்சனம் !

ஆக  உலகமயம் ஊடுருவும்போது எமது மனங்களில் எதிர்கால சுபீட்சவாழ்வின் நம்பிக்கையைச் சிதைத்து அழித்துக்கொண்டு நுழைந்தது. இது ஒட்டுமொத்த மனுக்குலப் பொதுவாழ்வில் இருந்த நம்பிக்கை அழிப்பு. அதற்கு ‘மாற்று’ அவர்களிடம் இருந்தது. எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுதல் எதுவும் வேண்டாம்இ உனக்குத் தனியே வளமான எதிர்காலமுண்டு ளூ முன்னதாக உழைத்துக் கஷ்டப்பட்டு அதை அடையவும் வேண்டியதில்லை தாராள மாய்த்தரும் கடனில் ஜொலிக்கும் இல்லம்! பிறகென்னஇ குதூகல இல்லத்தில் நிம்மதியாய் உண்டு உறங்க நேரமிராதுஇ நாய்படாப்பாடு பட்டு உழைத்தாலும் பட்ட கடனை அடைத்து மாளாதே!!

தமது ஆத்மார்த்த வாழ்விழந்து பண்பாட்டு விருத்திக்கெட்டு போலியான ஆடம்பர வாழ்வில் மூழ்கடிக்கப்படுகின்ற பலரும் இன்று இழப்பை உணரத்தலைப்படுகின்றனர். மீட்சி பற்றிய தேடல் அரும்பத்தொடங்குகின்றது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு தலித்திய வாதத்தினுள் முடங்கிய விடுதலை நாட்டம் மீட்டெடுக்கப்பட்டு மார்க்சியத்தை நாடத்தொடங்கியிருப்பதில் வெளிப்பட்டிருப்பதில் காணலாம். நாட்டாரியல்இ தலித்மறுமலர்ச்சி என்ற மகுடங்களுடனான
தன்னார்வக் குழுக்களுக்கு ஊட்டமளித்து மக்களைப் பிளவுபடுத்தும் பல கைங்கரியங்களை உலகமயம் முன்னெடுத்தது. அவற்றுள்இ பின் நவீனத்துவம் வாயிலாக விதைக்கப்பட்ட தலித்தியவாதம் சமூக மாற்ற பெருங்கதையாடலை விடுத்து தலித் மக்கள் தனித்துப்போராடுவதைப் பேசியது. குறைந்தது தலித் சாதிகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்தி ஒரு சிறு அமைப்பைத்தானும் உருவாக்க முடியாத மிகப் பலவீனப்பட்ட தத்துவவீச்சுகளே வேண்டியிருந்தது.

சரிஇ சுரண்டும் வர்க்கத்தால் உலகை உண்மையாக ஒன்றுபடுத்தி விட முடியாது ஏற்றுக்கொள்வோம் அதற்காக மனிதகுலம் சாதி மதம் நிறம் பாலினம் எனப்பிளவுபட்டே மோதியழிய வேண்டியதுதானா? இத்தகைய ஒரு அவல நிலையிலான அவநம்பிக்கை வாதம் உலகமயத்துக்கும் அதன் தத்துவப் பின் நவீனத்துக்கும் உரியது. மனிதகுலம் ஏற்றத்தாழ்வில் பிளவுபட்ட நாள் முதல் அந்த இரு வேறு உலகத்து இயற்கையைத் தகர்த்து ஒன்றுபடும் அவாவுக்கான சிந்தனையும் கற்பனா ரீதியிலாயினும் இருந்தே வந்தது. இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப விருத்தி எல்லோரும் வளமான வாழ்வைக் காண ஏற்ற உற்பத்தி வளர்ச்சியை எட்டிவிட்டது. அதனை அபகரித்திருப்போரிடமிருந்து மீட்டுஇ அதை உருவாக்கி வளர்த்த சமூகத்திடம் கையளிக்கும் புரட்சியே இனி வேண்டியுள்ளது.

அத்தகைய சிந்தனையை நாடவெட்டாமல் முறியடித்து ஓடாய் உழைத்து மாடாக மாளவிடும் வாழ்வை நிதர்சனப்படுத்தும் பண்பாட்டுச்சிதைவுகளை உலக மயம் செய்துகொண்டிருக்கிறது. விடுதலை நாட்டத்தை மறக்கடித்து பொருளாதாரச் சுரண்டலை நீடிக்கும் அரசியல் ஆக்கிரமிப்பை நிகழ்த்துவதற்கு முன்னதாக அதற்குத் தயாராகும் பண்பாட்டு ஆக்கிரமிப்பை நடத்த வேண்டியிருப்பதனை அவர்கள் அறிவார்கள். இலங்கையில் எண்பதுகள் தொடக்கத்தில் திறந்த பொருளாதாரம் வீறு நடைபோடத் தொடங்கிய போது யப்பானின் இலவசத் தொலைக்காட்சி மையம் கட்டித் தரப்பட்டதை அறிவோம். ‘முட்டாள் பெட்டி’ முன் முடக்கிவைப்பது எத்தனை பெரிய பண்பாட்டழிப்பு என அறியோமா?

முந்திய காலனியப்படுத்தலுடனான உலகமயமாதலில் ஆபரிக்கா அபகரிக்கப்பட்டது பற்றி ஒரு கவிதையுண்டு; அவர்கள் வந்த போது எங்களிடம் நிலம் இருந்தது அவர்களிடம் பைபள் இருந்தது. இன்று நிலம் அவர்களிடம் எங்கள் கைகளில் பைபள்! இது பண்பாட்டு ஆக்கிரமிப்பன் ஒரு வடிவத்தைக் காட்டிய கூற்றுஇ அவ்வளவே. பிரதானம்இ வளத்தை அபகரிக்கிறவர்கள் முன்னதாக பண்பாட்டு ஆக்கிரமிப்பை செய்ய வேண்டியுள்ளது என்பதுதான்.

இதனைத் தகர்த்து எமது விடுதலையைச் சாத்தியப் படுத்துவதும்இ மனுக்குலம் ஒருதாய் வழித்தொடர்ச்சி என்ற வரலாற்று உண்மையின் அடிப்படையில் ஒன்று படுவதும் சாத்தியமாகுமா? ஆகும்!

அதற்கான நாட்டமும்இ தேடலும் முயற்சிகளும் போராட்டங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. மாற்றமே சர்வநிச்சயமானது உலகமய அவலம் மட்டும் தொடர்ந்து இருந்துவிட முடியுமா என்ன? சுதந்திரம் பெற்ற நாடுகள் முயற்சித்த சுயசார்பு சிந்தனை சார்ந்த முயற்சிகளை அழிப்பதற்கு ‘மாற்றங்கள்’ பற்றி உலகமயமாதலும் பின் நவீனத்துவமும் பிரஸ்தாபத்ததுண்டு; அவற்றின் அடிப்படை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் நீடித்த கருத்து முதல் வாத நிலைப்பட்டனவாய் அமைந்தன. ஏற்கனவே கண்டடையப்பட்ட மக்கள் நல நாட்ட சமூகமாற்றங்களை அழித்து அடிப்படை மாற்றத்தை மறுப்பது அது. உலகமயக் கேடுகளும் இந்த வாழ்முறை நீடிப்பும் தொடரும் என்ற மயக்கம் இருக்கத் தக்க அளவிலேயே அவர்கள் கூறும் ‘மாற்றம்’.

சாதிப்பிளவைத் தவிர்க்க முடியாததாகக் காட்டும் தலித்தியத்துக்கு மாறாக இலங்கையில் மார்க்சியர்கள் அனைத்து சாதிகளையும் ஐக்கியப்படுத்தி சாதியத்துக்கு எதிராகப் போராடி இருக்கிறார்கள். சிறுபான்மைத் தமிழர் மகா சபை என்று தலித் சாதியினர் அனைவரும் நாற்பதாம் ஆண்டுகள் முதலாயும்இ அறுபதுகளில் உயர்சாதியினரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் இங்கே சாத்தியப்பட்டுள்ளது. அப்போது உலகை ஒன்றுபடுத்துவதாக பாட்டாளிவர்க்க சர்வதேச நோக்கு மார்க்சியம் உலகப்போக்கின் பிரதான செல்நெறியாக அமைந்திருந்தது. உலகமயம் போன்ற பிளவுபடுத்தலை உள்ளீடாகக் கொண்டில்லாதஇ ஒன்றுபட்டுப் போராட வழிகாட்டும் மார்க்சியத்தால் இனியும் உலகமயத்தை தகர்த்துப் போராடுவதற்கு வழிகாட்ட முடியும்.

அந்த மார்க்சிய ஒளியில் தனது சிந்தனையை வளப்படுத்தி உலகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வுமார்க்கத்தை கண்டு காட்டுகிறவர் லெனின் மதிவானம். ஏற்கனவே அவரது ‘மலையகம் தேசியம் சர்வதேசம் (கலை இலக்கிய சமூகவியல் பார்வைகள்)’ எனும் நூல் இதனைப் பட்டவர்த்தனமாய்க் காட்டியுள்ளது. இந்நூல் அதற்கு வலுவூட்டும் மற்றொரு சான்று. உலகமயப் பின்னணியில் பண்பாட்டு சிதைவுகளும் அவற்றுக்கு எதிரான பண்பாட்டுப் போராட்ட வடிவங்களும் குறித்து விரிவாக இந்நூல் வெளிப்படுத்துகின்றது. சமூகத்தையும் அது பற்றியதான நூல்களையும் தொடர்ந்து படித்துஇ சமூகவிடுதலைக்கான மார்க்கத்தை தேடத் தூண்டும் வகையிலான எழுத்து முயற்சியை மேற்கொள்ளும் லெனின் மதிவானத்தின் பணி தொடர்வதை மனுக்குல விடுதலை சார்பில் வேண்டி நிற்போம்.

நூல் விமர்சன நிகழ்வு                            

உலகமயம் பண்பாடு எதிர்ப்பு அரசியல்

-லெனின் மதிவானம்-    
                                                  
இடம்; பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், கொழும்பு-                               
காலம்: 15- 08- 2010, நேரம்: பி.ப 4.30                                                   
தலைமை:
நீர்வை பொன்னயன் 
                                                
விமர்சன உரைகள்                                          
பேராசிரியர் சபா ஜெயராசா                                           
கலாநிதி செல்வி திருச்சந்திரன்                                           
திரு. செ. கிருஷ்ணா 
                                                         
பதிலுரை:
திரு லெனின் மதிவானம்       
ஏற்பாடு : இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்

Exit mobile version