1848ஆம் ஆண்டு பிரான்சில் லூயி போனபார்த்தின் அதிகாரம் இவ்வகையான லும்பன்களை ஆதாரமாகக் கொண்டது என கார்ல்மார்க்ஸ் கூறுகிறார். சதிப்புரட்சியினூடாக ஆட்சியை கையகபடுத்திய நெப்போலியன் பொனபார்த்தையும் லும்பன் சமூகத்தின் பிரதிநிதியாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.
பின்னதாக ஆஸ்திரிய லும்பன்களின் ஆதிக்கம் குறித்து கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். தவிர, நாபோலில் 1848 நெருக்கடிகளின் ஏற்பட்ட போராட்டங்களில் லும்பன்களின் பாத்திரம் குறித்து ஏங்கல்ஸ் விபரிக்கிறார்.
லும்பன்கள் என்ற சோற் தொடர் இன்று மார்க்சியர்கள் தவிர்ந்த சமூகவியலாளர்களாலும் ஏறக்குறைய ஒரே உள்ளர்த்ததில் பிரயோகிக்கப்படுகின்றது.
லும்பன்கள் உற்பத்தியோடும், உழைப்போடும் நேரடியாகத் தொடர்பற்ற ஒழுங்கற்ற உழைப்பில் அவ்வப்போது ஈடுபடுகின்ற சமூகமாகக் காணப்படும். உழைப்பைப் பொறுத்தவரை இவர்களின் பாத்திரம் இவ்வாறு அமைந்திருக்க, லும்பனிசத்தின் அரசியல் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளிலிருந்து பின்னவீனத்துவம் வரை நீண்டு செல்கிறது. அதிகாரவர்க்கம் இவர்களை இலகுவில் பயன்படுத்திக் கொள்கிறது.
கார்ல் மார்க்சின் கூற்றுப்படி, லும்பன்கள் புரட்சியிலோ, போராட்டங்க்ளிலோ ஈடுபடுவதற்கான எந்த நோக்கங்களையும் கொண்டிருக்க மாட்டார்கள், எபோதும் தமது நாளாந்த வாழ்க்கைக்காக் அதிகார வர்க்கத்திலும், முதலாளித்துவ அமைப்பிலும் தங்கியிருகும் நிலையே காணப்படுவதால் சமூக மாற்றத்தில் விருப்புடையவர்களாக காணப்பட மாட்டார்கள் என்கிறார்.
ஈழப் போராட்டம் என்பது யாழ்ப்பாண சமூகத்தை மையப்படுத்தியே உருவாகியிருந்தது. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் பிரதான தொழில் சேவைத்துறையாக அமைந்திருந்தது. அலுவலக நிர்வாகத்தினர், கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் என்ற நிர்வாக மற்றும் சேவைத்துறை சார்ந்த தொழில்களைச் சார்ந்திருந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் அத்துறைகளுக்கே உரித்தான மன உணர்வையும் கொண்டிருந்தது.
வடபகுதியின் மொத்த சனத்தொகை இலங்கையின் சனத்தொகையில் 7 வீதமாகவே மட்டும் காணப்பட்ட நிலையில் பல்கலைக்கழக அனுமதியில் 28 வீதமான அனுமதியை இவர்களே பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் 1971ம் ஆண்டு சிரிமாவோ பண்டாரனாயக்க அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்த காலப்பகுதியில் பல்கலைகழக நுளைவிற்காக மொழிவாரித் தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது. இதனூடாகத் பல்கலைகழக அனுமதி பெற தமிழர்கள் 250 புள்ளிகளைப் பெறவேண்டிய அதே நிலையில், சிங்கள மாணவர்கள் 229 புள்ளிகளைப் பெற்றாலே போதுமானது என்ற நிலை உருவானது.
1974ஆம் ஆண்டு இத் தரப்படுத்தலானது மொழிவாரித் தரப்படுத்தல் என்ற நிலையிலிருந்து பிரதேசவாரியானதாக மாற்றப்பட்டது. அதன் பின்னதாக 7 வீதமான யாழ்ப்பாணத் தமிழர்களே பல்கலைக்கழக அனுமதி பெறக்கூடிய நிலை உருவானது.
பல்கலைகழகக் கற்கையோடிணைந்த சேவைத் துறையையே மையாமகக் கொண்டிருந்த யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் வாழ்நிலை இப்போது கேள்விக்குள்ளாகிறது. இவ்வேளைகளிலேயே இலங்கை அரசிற்கு எதிராக மாணவர் பேரவை, இளைஞர் பேரவை போன்ற அமைப்புக்கள் உருவாகின்றன. தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அவையே ஊற்றுமூலமாக அமைந்தன.
மத்தியதரவர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்த இளைஞர்கள் இவ்வகையான தேசிய உணர்வினைக் கருத்தியல் தளத்தில் வளர்த்தெடுக்க, மறுபுறத்தில் அதன் கீழணியினர் செயற்பாட்டுத்தளத்தை உருவாக்கினர். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப் புரட்சி அமைப்பு போன்றன இவ்வாறான பின்ன்ணியில்ருந்தே உருவாகின்றன.
பல்கலைகழக அனுமதியற்று வேற்று உழைப்பில் ஈடுபட விரும்பாத இளைஞர்களும், இதன் பாதிப்பினூடாக உருவான ஒரு பகுதி கீழ் மத்தியதர இளைஞர்களும் தேசியப் போராட்டத்தை உருவாக்குகின்றனர்.
இந்த இளைஞர்கள் வர்க்கங்களுள் உள்ளடக்க முடியாத உற்பத்தியோடு தொடர்பற்ற லும்பன் மனோபாவத்தைக் கொண்டிருந்தனர். இதன் வழியே உருவான விடுதலை இயக்கங்கள் தத்துவார்த்த அரசியல் பார்வையற்ற லும்பன் மனோபாவத்தைக் கொண்டனவாக அமைந்திருந்தன.
இலங்கை அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்க 80 களில் சில இடதுசாரி சிந்தனைகளையும், அரசியல் பார்வையும் கொண்ட விடுதலை அமைப்புக்கள் உருவாகின. புரட்சிக்கான புறச் சூழல் கனிந்திருந்த இந்தச் சந்தர்ப்பத்தை இந்திய அரசு தலையிட்டு போராட்ட சூழலை முற்றாகச் சீர்குலைத்து அழித்த வரலாறு மறுபடி மறுபடி பேசப்படுகின்ற ஒன்று.
எது எவ்வாறாயினும் லும்பனிசம் என்பது முள்ளி வாய்க்கால் வரை ஆதிக்கம் செலுத்தி அழிந்து போனது.
அதே லும்பனிசத்தின் கூறுகள் இன்று புலம் பெயர் நாடுகளில் தமது வேர்களைப் படரவிடுகின்றன. புலம் பெயர் நாடுகளில் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடியின் பின்னான வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு ஊக்கியாகத் தொழிலாற்றுகின்றது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை நிறுவன மயப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சியின் உதிரி வேலையாட்களாவே பெரும்பாலான அகதிகள் அதிகாரவர்க்கத்தால் பயன்படுத்தப்ப்டுகின்றனர்.
இவ்வாறான தொழிற்துறை தொழிற்சங்கப் போராட்டங்களிலிருந்து அன்னியப்பட்ருப்பதால் அவர்களின் லும்பன் மனோபாவம் அதிகரிக்கிறது. சிலர் சில்லறை வியாபார நிறுவனங்கள் போன்ற சுய தொழிலை உருவாக்கிக் கொள்ள ஏனையோர் புலம்பெயர் மண்ணோடு ஒட்டிக்கொள்ளாத பரிதாபகரமான வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவ்வாறான சூழலில் இலங்கை ஐரோப்பிய மற்றும் இலங்கை அரச அதிகாரங்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. பலர் உளவாளிகளாக மாறிவிடுகின்றனர். உள் நோக்கம் கொண்ட பல உளவு அமைப்புக்கள் உருவாகின்றன.
இவ்வமைப்புக்களின் நோக்கங்கள் 80 களில் இந்திய அரசு பிரயோகித்த சீரழிவு வழிமுறைகளுக்கு எத்ந்த வகையிலும் குறைவானதல்ல. அதிகார வர்க்கங்களின் உளவு அமைப்புக்களின் பிரதான செயல்முறைகளில் மிகப் பிரதானமான கூறு அரசியல் கருத்துக்களை உருவாக்க முயலும் நபர்களைக் குறிவைப்பதாகும். லும்பன்களும் லும்பனிசமும் இச்செயன்முறைக்கு மிகப்பொருத்தமானவர்கள்.
இன்று இவர்களின் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளை அடையாளம் கண்டுகொள்வது மிக இலகுவானது. இவை பல்வேறு அரசியல் தளங்களில் இயக்கப்பட்டாலும் இவர்களிடையே பொதுவான போக்கை இனம்கண்டுகொள்ளலாம்.
1. அரசிற்கு எதிரான பொதுவான சுலோகங்களை முன்வைத்தாலும் குறிப்பான சம்பவங்களில் அரசு சார்பு நிலையை முன்வைப்பார்கள்.
இலங்கை அரசு போன்ற பாசிச அரசுகளைப் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கங்களைப் சீர்குலைப்பது இவர்களின் செயற்பாடுகளில் ஒன்றாக அமையும். குறிப்பான சந்தர்ப்பங்களில் நட்பு சக்திகளிடையே பிளவுகளை உருவாக்கல், எதிர்ப்பியங்களை மக்களுக்கு எதிரானவையாக முன்வைத்தல் என்பன போன்ற அழிவரசியலை இனம்கண்டுகொள்ளலாம்.
2. பாத்திரப் படுகொலை(Character assassination) .
புரட்சிகரக் கருத்தை உருவாக்கும் முன்னணி உறுப்பினர்கள் மீதான வசைபாடல்களும் அவதூறுகளும் இதன் ஆரம்பமாக அமையும். எதிராளியாக அவர்கள் கருதும் இந்த முன்னணி உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் வரை எந்த உறுதியான ஆதரமும்மின்றி முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொள்வர். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பொது ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைபேசிப் பிரச்சாரங்கள் போன்றவற்றினூடாக மேற்கொள்வர். இதனூடாக இக் குற்றங்களை மேற்கொண்டோர் கருத்துக் கூறுவதற்கே தகுதியற்றவர்கள் என்பதை முன்வைப்பர். கருத்து மக்களைப் பற்றிக்கொள்ளும் நிலை உருவாகும் வேளைகளில் இவ்வாறான பிரச்சாரங்களை உளவாளிகள் மேற்கொள்வர். லும்பன்களான உளவாளிகள் கூட புரட்சிகர அரசியல் கருத்துக்களை முன்வைத்து அவர்களின் எதிராளியை எதிர்கொள்ளும் அனைத்துத் தந்திரோபாயங்களையும் பிரயோகிப்பர்.
மக்கள் பற்றுள்ள இடது சாரி புரட்சியாளர்கள் மத்தியில் இவ்வாறான அவதூறு அரசியலும் பாத்திரப்படுகொலை முயற்சியும் வெற்றிபெறுவதில்லை. இடதுசாரி அரசியலின் விமர்சன முறை என்பது தனிநபர்களதும் குழுக்களதும் வர்க்க சார்பு நிலையைப் பகுத்தறிவதும் அவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுமே. இவ்வாறான பாத்திரப்படுகொலை முயற்சிகளும் அவதூறுகளும் இன்று எம்மத்தியில் பரவலாகக் காணப்படுவது போன்ற, நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்கள் முற்றாக அழிக்கப்படாத பிந்தங்கிய காலப்பகுதியில் வாழ்ந்த மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோர் மீது முன்வைக்கப்பட்ட போதும் அவர்கள் அதிகாரவர்க்கத்தின் அவதூறுகளின் பின்னணியிலிருந்த வர்க்க அரசியலையே இனம்காட்டினார்கள்.
3. உள்ளடக்கமற்ற வெற்றுச் சுலோகங்கள்.
லும்பன் அரசியல் அதிகாரவர்க்கம் சார்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். இவர்கள் புரட்சி, ஜனநாயகம், தேசியம் போன்ற சுலோகங்களை அவற்றிற்குரிய அரசியல் உள்ளடக்கமின்றி முன்வைப்பர். உலகின் அரசியல் புறநிலை, வர்க்க அமைப்புக்களிடையேயன முரண்பாடுகள் போன்ற அனைத்து சிக்கலான விடயங்களைக் கூட அதிதீவிரப் புட்சிச் சுலோகங்களுள் அடக்கி அவற்றின் உண்மையான உள்ளடக்கம் குறித்துப் பேசுவோரை தனிமைப்படுத்தி அதிகாரவர்க்கத்திற்கு சேவையாற்ற முனைவர்.
4. குழுவாதமும் தூய்மைவாதமும்.
இயல்பாக குண்டர் படைகளின் தலைவர்கள் முதலில் தம்மைத் தூய்மையனவர்கள் என்ற விம்பத்தை ஏற்படுத்துவர். லும்பன் அரசியலிலும் இந்தவகையான போக்கு சர்வ சாதாரணமானதே. தம்மைப்பற்றித் தாமே பிரச்சாரங்களை மேற்கொள்வர். தாம் நேர்மையாவர்கள், அப்பளுக்கற்றவர்கள், தூய்மையானவர்கள், விமசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து தமக்குக் கீழ்ப்படியும் குழுவொன்றை ஏற்படுத்திக்கொள்வர். தமது குழு சார்ந்தவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரையும் அரசியல்ரீதியாகவோ, சாரீரரீதியாகவோ அழித்தொழிப்பதற்குரிய உரிமையை இதனூடாக அவர்கள் கோருவர். இதற்காக தமது கடந்தகால, நிகழ்கால அரசியல் வாழ்வை மிகப்படுத்தியும், பொய்யான தகவல்களூடாகவும் சாகசங்கள் நிறைந்ததாக புனைவர். தாம் சார்ந்த குழுவினரும் எந்த மறுப்புமின்றி ஏனைய அரசியல் கருத்துக்களை அழிப்பதற்குரிய அத்தனை பலத்தையும் தலைமைக்கு வழங்குவர். இறுதியில் இந்த அழிப்பிற்காக அதிகாரத்தின் அடியாட்களாக மாறிவிடுவர்.
இவை லும்பன் அரசியல் குழுக்களின் சில பண்புகள் மட்டுமே. இவை போன்ற வேவ்வேறு வகைப்படுத்தல்களைக் காணலாம். இவர்களின் வர்க்க சார்புனிலை என்பதிலிருந்து லும்பன்கள் மத்தியில் மாற்றங்களை எதிர்பார்க்கவியலாது எனினும், அவர்களின் ஆதிக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் குழப்பகரமான சூழல் ஆபத்தானது. தவிர, அதிகாரவர்க்கம் சார்ந்தே எப்போதும் லும்பனிசம் அமைந்திருக்கும்.
இவ்வாறான லும்பன் அரசியல் குழுக்கள் பருமனில் மாறுபடினும் பண்பில் மாற்றமடைவதில்லை. பரந்துபட்ட அரசியலில் அவர்கள் செல்வாக்குச் செலுத்தும் வரை அவர்கள் குறித்த அபாயம் வெளித்தெரிவதில்லை. எது எவ்வாறாயினும், அபாயகரமான லும்பன்கள் எதிர்கொள்ளப்படுவதற்கேற அரசியல் வகுக்கப்பட்ட வேண்டும்.