Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லக்கிம்பூர் கொலை- பாஜக அமைச்சர் மகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்த போராட்டங்கள் நடந்தது. பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றுக்காக உத்தரபிரதேசம் வர இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு  தெரிவித்து விவசாயிகள் லக்கிம்பூர் கேரி என்ற இடத்தில்  ஊர்வலம் சென்றனர்.  அப்படி நடந்த ஊர்வலத்தில், கடந்த அக்டோபர்  3-ம் தேதி விவசாயிகள் பேரணியின்போது, ஐந்து பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில், நான்கு விவசாயிகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில், மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கேரியில் நடந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடிய பின்னர் வேறு வழியில்லாமல் விவசாயிகள்மீது மோதிய மூன்று கார்களும் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமானவை. எனவே, இது தொடர்பான வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அதன் பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்குமாறு உத்தரவிட. ஜாதவ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு  அமைக்கப்பட்டது. அந்தக் குழு, “இது தற்செயலாக நடந்ததோ விபத்தோ அல்ல இது திட்டமிடப்பட்ட கொலை” என்றது.

ஆஷிஷ் மிஸ்ரா

இப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா மகன் அஷீஷ் மிஸ்ரா உட்பட கொலையாளிகள் மீது ஐந்தாயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வுக்குழு தாக்கல் செய்துள்ளது. இதனால் அவர்கள் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் கொலையாளிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் வர இருப்பதால் இப்போதைக்கு இந்த நடவடிக்கைகள் திவீரமாகும். மீண்டும் பாஜக உத்தரபிரதேச மாநிலத்தில் வென்றால் இவர்கள் வெவ்வேறு வழிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Exit mobile version