Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரௌடி அரசியலின் பிதாமகன் மதுசூதனன் காலமானார்!

அதிமுக என்ற கட்சியின் செல்வாக்குபல மிக்க தலைவராகவும் சென்னை என்ற நகரத்தை ஒரு காலத்தில் ஆட்டிப் படைத்தவருமான மதுசூதனன் தனது 80-வது வயதில் காலமானார்.
80 வயதில் மறைந்துள்ள மதுசூதனன் தன் வாழ்வின் 60 ஆண்டுகளை அரசியலில் செலவிட்டுள்ளார். எம்.ஜி.ஆர் படங்களின் ரசிகனாக இருந்த மதுசூதனன் ஆரம்ப காலங்களில் சாராய வியாபாரியாக இருந்தவர். எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது அவருக்கு தொண்டர் படை இயல்பாகவே இருந்தது. ஆனால், குண்டர் படையும் தேவைப்பட அரசியலில் எம்ஜி.ஆரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்தான் வாண்டையார், ஜேபி ஆர், மதுசூதனன் போன்றோர். இவர்களில் பலர் கல்வி வள்ளல்களாக மாறினார்கள். ஆனால், மதுசூதனன் சென்னையின் நிழல் உலக தாதா போன்றே இருந்தார்.
அதிமுகவின் பல மிக்க தொண்டர் படை என்பதை விட குண்டர் படையாகவே மதுசூதனன் இருந்தார். சுப்பிரமணியசாமிக்கு நிர்வாண எதிர்ப்பு காட்டியது. சந்திரலேகா மீது ஆசிட் வீசியது,ஆடிட்டர்களை தாக்கியது, வழக்கறிஞர்களை உதைத்தது என மதுசூதனன் வரலாறே கொஞ்சமல்ல ரொம்பவே திகில் நிறைந்தது.ஆனால் அத்தனையும் அவர் அதிமுகவுக்காக செய்த காரணத்தால் ஜெயலலிதாவின் குட் புக்கில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்ற மதுசூதனனை 2010-ஆம் ஆண்டு அதிமுகவின் அவைத் தலைவர் ஆக்கினார். அவர் இருக்கும் வரை அந்த பதவியில் அவர்தான் இருப்பார் என்றும் சொன்னார். சென்னையில் அவரையும் மீறி வளர்ந்த அதிமுக ஜெயக்குமாரோடு மரணிக்கும் வரை முட்டல் மோதலோடு இருந்தார்.
சென்னையில் மதுசூதனனை சமாளிக்க திமுக சைதை கிட்டு போன்றவர்களை வளர்த்தெடுத்ததும் ஒரு வரலாற்று தொடர்ச்சிதான். தமிழக அரசியலில் ரௌடியிசத்திற்கு அளப்பரிய பங்காற்றிய மதுசூதனன் மறைவு அதிமுகவுக்கு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத பேரிழப்புதான்!

Exit mobile version