Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமர்கோவில் கட்ட நிதி கொடுத்த இந்திய ஜனாதிபதி!

அயோத்தியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாபர் மசூதி இருந்து வந்தது. அந்த மசூதி இருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று சொல்லி இந்து அமைப்புகளும் பாஜகவும் அங்கிருந்து மசூதியை ஒரே இரவில் இடித்து தரைமட்டமாக்கியது.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த நிகழ்வு இந்திய வரலாற்றை புரட்டிப் போட்டது. நாடு முழுக்க எழுந்த கலவரத்தில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.  இன்று வரை இந்தியாவை மதவெறி ஆபத்துள்ள நாடாகாவும்,  திவீரவாத தாக்குதல்கள் நடக்கக் கூடிய நாடாக மாற்றியது இந்த நிகழ்வுதான்.

இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மசூதியை இடித்த இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. பாஜக மத்தியில் ஆளும் நிலையில் இந்துக்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக வரவேற்பைப் பெற்ற நிலையில்  பாஜக இந்த தீர்ப்பை வரவேற்றது. கோவில் கட்டவும் பணிகளை துவங்கியது. அதே நேரம் முஸ்லீம்களுக்கு நீதிமன்றம் ஒதுக்கிய நிலத்தை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

விஷ்வ ஹிந்து பரிசத் கோவில் பணிகளை துரிதமாக்கி இருக்கும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமர்கோவிலை திறக்க பாஜக திட்டமிடுவதால் ராமர்கோவில் பணிகள் வேகம் பெறுகின்றன. விஷ்வ ஹிந்து பரிசத், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கிராமங்களுக்குச் சென்று ராமர்கோவில் கட்ட நிதி திரட்டுகிறது. ஏற்கனவே பல்லாயிரம் கோடி நிதி திரட்டப்பட்டது அவைகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை. இந்நிலையில் இந்த நிதி திரட்டலுக்கு உதவியாக  மதச்சார்பற்ற அரசின் தலைவரான ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் ராமர்கோவில் கட்ட ஐந்து லட்சத்து நூறு ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மசூதியை இடித்து கட்டப்படும் ராமர்கோவிலுக்கு நிதி கொடுப்பதும், காந்தியைக் கொன்ற ஆர். எஸ்.எஸ். விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்புகளுக்கு அந்த நன்கொடையை அளிப்பதும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது,மதச்சார்பின்மையின் அடிப்படையான மதத்தில் இருந்து விலகியிருப்பதையே இது கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது

Exit mobile version