
ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மூவரை தூக்கிலிடுவது அரசியல் சாசனப்படி சரியல்ல என அவர்களது தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனையை உறுதி செய்து தனது தலைமையிலான அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் சில தவறுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் இயற்கை குணம், பண்புகள் மற்றும் அவர்களது முன்னோர்கள் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தாமஸ் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மூவரையும் தூக்கிலிடுவது அரசியல் அமைப்பின்படி சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தீர்ப்புக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னர், நீதிபதி சின்ஹா தலைமையிலான அமர்வு பிறப்பித்த ஒரு உத்தரவில், குற்றவாளியின் பண்புகளையும், இயற்கை குணங்களையும் ஆராயாமல் மரண தண்டனை விதிக்கக்கூடாது என உறுதிபட தெரிவித்ததை தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யலாம் என நீதிபதி தாமஸ் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறையில் கழித்துள்ள 22 ஆண்டுகள், ஆயுள் தண்டனையைவிட கூடுதலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மூன்று பேரையும் தூக்கில் போடுவது, ஒரே குற்றத்திற்காக இரண்டு தண்டனை விதிப்பது போன்றதாகும் என அவர் கூறியுள்ளார். நீதிபதி தாமஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு, கடந்த 2000-வது ஆண்டு ராஜிவ் கொலைக்குற்றவாளிகள் மூவரின் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
தூக்குததண்டனைக்கு நிறைவேற்றுவதற்கு மத்திய அரசும் ஜெயலலிதா அரசும் தீவிரம் காட்டிவருகின்றன. மூவரின் உயிர் மட்டுமல்ல சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தையும் தூக்குக்கயிற்றில் தொங்கவைப்பதே இந்திய அரச பயங்கரவாதத்தின் நோக்கம்.