குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் வர இருக்கிறது. மோடி அரசு அடுத்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்குமா பிடிக்காதா என்பதை பல்ஸ் பார்க்கும் தேர்தலாக இது அமைய விருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் எப்படியாவது ஐந்து மாநிலங்களிலும் பாஜக வென்றே ஆக வேண்டும் என்று திவீரமாக பணியாற்றுகிறது.
7 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்த போதும் அதன் சாதனை என்று சொல்லிக் கொள்ள பெரியாத எதுவும் இல்லை. ஆனால், ராமர்கோவில்,மாட்டிறைச்சி, குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற இந்த மாநிலங்களில் வாழும் இந்துக்களின் ஆதரவை பெற்று விடலாம் என நினைக்கிறது பாஜக.
காங்கிரஸ் கட்சியோ இன்னும் தன் கட்சிக் கட்டமைப்பையே காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் பிரமுகர்கள் இன்னும் பாஜகவுக்கு தாவி வருகிறார்கள்.
உத்தரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரோடு ராகுல்காந்தி இன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார். ஏற்கனவே மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சரத்பவார் என பல தலைவர்களுடன் சந்திப்பை நடத்திய பிரசாந்த் கிஷோர் இப்போது ராகுல்காந்தியை சந்தித்திருப்பது முக்கியத்துவம் உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆனால், 2017-ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர்தான் காங்கிரஸ் கட்சிக்கு பணி செய்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் தோற்றுள்ளது. உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜகவை எப்படி காங்கிரஸ் எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியே?