இங்கே மேற்குலகில், எங்கள் அரசியல் வர்க்கம், பெருநிறுவனங்களின் செயல் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறதென்று குறைகூறி வருகிறோம். ரஷ்யாவிலோ பொருளாதார வலிமை பெற்ற தொழிலதிபர்கள் நேரடியாகவே அரசியலுக்குள் நுழைய முனைவதாகத் தெரிகிறதே?
ரஷ்யாவிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்; தங்கள் கட்சிப் பதவிகளைப் பணம் படைத்த தொழிலதிபர்களுக்கு அப்படியே விற்றுவிடுகின்றன. தொழிலதிபர்கள் அரசியலுக்குள் நுழைவதென்பது குற்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க என்றே இதுவரை இருந்துள்ளது. இப்போது அதைவிடவும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கான சட்டபூர்வமான சாதகங்களை உருவாக்கிக் கொள்ளவே அவர்கள் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.
ஒன்றுதிரண்ட முதலாளி வர்க்கம் என்பது ரஷ்யாவில் இல்லை. மாறாக பெருநிறுவனத் தலைவர்களும் அரசு நிர்வாகத்தோடு தொடர்புடைய அதிகாரக் குழுக்களும்தான் (அரசாங்கத்தின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தும் சிறு தனிநபர் குழுக்கள்) இருக்கிறார்கள். இது ஒரு வகையான அரசு நிர்வாக முதலாளித்துவம். தொழிற்குழுமங்களின் வலிமை என்பது அரசு நிர்வாகத்தோடு அவை கொண்டுள்ள தொடர்புகளைப் பொறுத்ததாக இருக்கிறது. ஆனால் இப்போது அரசாங்கம் தொழிற்குழுமங்களை மேலும் மேலும் அரசுடைமையாக்கிக் கொள்ளவும் அவற்றைக் குறிப்பிட்ட அரசதிகாரக் குழுக்களின் கட்டுப்பாட்டில் வைக்கவும் முயன்று வருகிறது.
பொதுமக்கள் கட்டுப்பாடு என்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தொழிலிலும் சரி, அரசு நிர்வாகத்திலும் சரி, இரண்டிலுமே பொதுமக்கள் கட்டுப்பாடு என்பது இல்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது.
‘யூகோஸ் ஆயில்’ நிறுவனத்தின் மிகைல் கொடோர்கோவ்ஸ்கிக்கு நேர்ந்தது இதுதான், இல்லையா?
வேடிக்கை என்னவென்றால், அரசாங்கத்தின் மீதான தொழிற்துறையின் சார்ந்திருப்பைக் குறைக்க வேண்டி அமைப்புமுறையை அதிக வெளிப்படையானதாக ஆக்குவதற்காக அவர் முயன்றார். அதற்கு அமைப்பின் பதில் மிகச் சுலபமானதாக இருந்தது. அவரைச் சிறையிலடைப்பது. அவருக்காகப் பரிதாபப்படும் சில ரஷ்யர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், ‘இதற்கு முன்பு நாட்டைச் சூறையாடுவதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருந்தோம். அது முடிந்துபோன ஒன்று. இப்போது ஒழுக்கமானவர்களாக நடந்துகொள்ளத் தொடங்க வேண்டும்’ என்று ஒப்புக்கொள்ளும் நேர்மை அவரிடம் இருந்தது.
ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. என்ன சொன்னாரோ அதைத்தான் முன்பு அவர் செய்து கொண்டிருந்தார். சூறையாடினார்.
இது தன்னிச்சையான குழு ஆட்சியிலிருந்து அரசுநிர்வாக வகைப்பட்ட குழு ஆட்சியை நோக்கிய நகர்த்தல், இல்லையா?
இதே அமைப்புமுறையைத்தான் இப்போது கஸகஸ்தானிலும் உக்ரைனிலும் பெரும்பாலான மத்திய ஆசியக் குடியரசுகளிலும் பார்க்கிறோம். சோவியத்துக்குப் பின் அந்தப் புலத்தில் தோன்றிவரும் அமைப்புமுறை இதுதான். பத்து வருடங்களாகியும் அரசைச் சார்ந்திராத சுயாதிகாரமான திறன்மிகுந்த முதலாளி வர்க்கத்தை வளர்த்தெடுக்கத் தவறியதுதான் காரணம்.
ஏதாவது ஒரு துறையை விட்டு அரசு வெளியேறும் ஒவ்வொரு முறையும் விஷயங்களைத் திறம்பட நடத்த அதிகாரக் குழுவினர் தவறிவிடுகின்றனர். முதலாளித்துவ தாராளவாதப் பரிசோதனையில் இது முற்றிலும் ஒரு தோல்வியாகவும், அரசதிகாரத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்வதாகவுமே இருக்கிறது.
அரசதிகாரத்தைப் பொறுத்தளவில், லஞ்சம் என்பது மட்டுமே இப்போது போதுமானதாக இல்லை. சட்டப்பூர்வமற்ற தங்கள் பொருளாதார அதிகாரத்தை சட்டப்பூர்வமான சொத்துக்களாகவும், முதலாளிகள் அனுபவிப்பதனைப் போன்ற சலுகைகளாகவும் மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.
‘சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பது முதலாளித்துவத்திற்கு வெற்றி’ எனப் பார்க்கும் மேற்கத்திய இடதுசாரிகளின் கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?
நிச்சயமாக அது முதலாளித்துவத்திற்கு வெற்றிதான். ஆனால் சோவியத் அமைப்புமுறை சரிந்தது தன்னுடைய உள் முரண்பாடுகளால்தான். ஒரு நீண்டகாலப் பார்வையில் அதுவும்கூட சில புதிய வாய்ப்புக்களை, சில பயனுள்ள வரலாற்று அனுபவங்களை இடதுசாரிகளுக்கு வழங்குகிறது.
சோசலிசத்தின் கூறுகள் இருந்தபோதிலும், நாம் சோவியத் யூனியனை சோசலிச நாடு என்று அழைக்கக்கூடாது.
அதே நேரத்தில் பிரிட்டிஷ் ட்ராட்ஸ்கியவாதியான டோனி கிளிஃப்பையும் மற்றவர்களையும் போல, சோவியத் யூனியனை அரசு முதலாளித்து நாடு என்று அழைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. ஸ்வீடிஷ் சமூக ஜனநாயகம் குறித்தும் அதே போலச் சொல்ல முடியும். அது ஒரு சோசலிசச் சமூகம் அல்ல. ஆனால் சில சோசலிச நிறுவன முறைமைகள் அங்கே இருக்கின்றன. தீர்மானிக்கக்கூடிய சக்தி பெற்றவை அல்ல என்றபோதிலும் அவை இருக்கின்றன்.
சோவியத் அனுபவம் என்பது படிப்படியாக கடந்தகால வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டு வருகிறது. கடந்தகாலம் பற்றி ஒரு சமநிலைப் பார்வைக்கு ரஷ்யர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். புதிய தலைமுறை இடதுசாரிகள் ஒட்டுமொத்தமும் மிக மேற்கத்தியமயமானவர்களாக இருக்கிறார்கள். ஸ்டாலினியம் குறித்து விமர்சனம் கொண்டிருக்கிறார்களே தவிர, அதன் அதிர்ச்சியிலேயே இன்னும் நொறுங்கிக் கிடப்பவர்களாக அவர்கள் இல்லை.
உங்களுடைய எழுத்தில் ‘ஜனநாயக வெளித்தோற்றத்தின் தேவை’ பற்றிப் பேசுகிறீர்கள். இப்போது ‘நிர்வகிக்கப்பட்ட ஜனநாயகம்’ என்பது பேசப்படுகிறது.
ஆம். ஆனால் பிரச்சினை என்னவென்றால், மேலும் மேலும் நிர்வகிக்கப்படுவதாக ஆகிக் கொண்டு இருக்கிறதே தவிர, ஜனநாயகத் தன்மை மேலும் மேலும் குறைந்து கொண்டுதான் இருக்கிறது.
யெல்ட்சினின் ஆட்சியில் ஒரு வகையான குழப்ப நிரவாகம் இருந்தது. இப்;போது புடின் ஆட்சியில் ஒரு வகையான நுண்நிர்வாகமாக மாறி வருகிறது. அனைத்தும் கணிக்கக்கூடியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். கட்சிகளுக்கு இடையேயான போட்டி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியாக அல்லாமல், ஜனாதிபதியின் அனுதாபத்தைப் பெறுவதற்கான போட்டியாக இது இருப்பதுதான்.
இது மக்களை வலுவேற்றுவதல்ல, சர்வாதிகாரியை வலுவேற்றுவது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்துக்கு உரிமை உண்டு. அதையே திரும்பத் திரும்பச் செய்வார்களானால், அவர்கள் அரசைக் கலைப்பதில்லை தங்களையே, நாடாளுமன்றத்தையே கலைத்துக் கொள்வார்கள். ஆக, புதிய தேர்தல்கள் நடத்தப்படும், அரசாங்கத்தோடு ஒத்துப்போகும் நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க. அதுவும் ஒரு ஜனநாயகத் தேர்தலாக இருக்காது. முற்றிலும் ஏற்பாடு செய்யப்பட்டதாக இருக்கும். வாக்குப் பெட்டிகளை நிரப்புவார்கள். முடிவுகளை மாற்றி அறிவிப்பார்கள். வௌ;வேறு அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட கண்காணிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமான முடிவுகளுக்கு மாறாக வேறுபட்ட முடிவுகளை எடுத்துக் காட்டுவார்கள்.
இதனுடைய ஜனநாயகப் பக்கம் என்னவென்றால், மாறுபட்ட முடிவுகளும் பிரசுரிக்கப்படும் என்பதுதான். எவ்வளவு வாக்குகள் திருடப்பட்டன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். பத்திரிகைகளிலும் இது வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது.
ரஷ்யாவில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர் விளாதிமிர் புடின்தான் என்பது மேற்கத்தியப் பத்திரிகைகளைப் பொறுத்தளவில் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. இது உண்மையா?
இல்லை. ஆனால் தனக்குச் சவாலான போட்டியாளர் எவரும் உருவாக அவர் அனுமதிப்பதில்லை. இது இப்போது ஒரு அபத்தமான நிலையை எட்டியிருக்கிறது. இனி யாரும் வாக்களிப்பதை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்களோ என்று அரசாங்கம் பயப்படும் அளவுக்கு, அனைவருமே வெறுத்துப் போனவர்களாக, கோபம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
தேர்தல் புறக்கணிப்பு போன்று தன்னிச்சையாகவே ஏதாவது நடந்துவிடுமோ என்று அரசாங்கம் பயப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இடதுசாரிகளுக்கு இதில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தில்லுமுல்லு நடப்பதால் வெற்றிபெற வாய்ப்பில்லை. ஆனால் குறைந்த பட்சம், உண்மையில் கவனிக்கத்தக்க விஷயங்கள் என்ன என்பதை ஒரு அக்கறையுள்ள வேட்பாளர் எடுத்துச் சொல்ல முடியும்.
ஜனநாயகம் இன்மை, தேர்தல் தில்லுமுல்லு, வீடுகளையோ அல்லது வருமானத்தின் பெரும்பகுதியையோ மக்கள் இழக்கும்படியான ‘குடியிருப்புகளைச் சந்தைமயமாக்கல்’ போன்ற சமூக நிலைமைகள் ஆகியவை குறித்துப் பிரசாரம் செய்ய முடியும்.
கடந்த தேர்தலில் வெறும் 12.6 சதவீத வாக்குகளைப் பெற்று பாதிக்கும் மேலான தங்கள் வாக்குகளை இழந்தபின், அதிகாரப்பூர்வமான கம்யூனிஸ்டுக் கட்சி இப்போது தேர்தல் வந்தால் சுத்தமாகக் காணாமல் போகும் நிலையை அடைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக விளங்கும் ஒரே கட்சியான அதில் இப்போது ஒரு வெளிப்படையான சிக்கல் தோன்றியுள்ளது. அது ஒரு இடதுசாரிக் கட்சி அல்ல. ஆனால், வௌ;வேறு அரசியலுள்ள வௌ;வேறு குழுக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு வகையான தேசியக் கட்சி. எனவே அதில் எஞ்சியிருப்பதைக் கைப்பற்றவோ, அல்லது அதற்கு மாற்றாக ஒரு புதிய இடதுசாரிக் கட்சியை உருவாக்கவோ முயன்று வருகிறார்கள்.
ரஷ்யாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிப் பதவிகளைப் பணம் படைத்த தொழிலதிபர்களுக்கு அப்படியே விற்றுவிடுகின்றன.
இப்போதைய மிகப்பெரிய விவாதம் என்னவென்றால், யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதுதான். பக்கா வலதுசாரி வங்கியாளரான ஜென்னாடி செமிஜின்னா அல்லது இடதுசாரிகள் ஆதரிக்கும் தொழிலாளி வர்க்கத் தலைவரான வெலேரி மெல்னிகோவா என்பதுதான்.
ஒரு வெளிப்படையான போட்டியில் மெல்னிகோவே வெற்றியடைவார் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் அந்த வங்கியாளர் தேர்தலில் நிற்பது முற்றிலும் வெட்கக்கேடானது. பெரும்பாலான தொழிலாளர் தலைவர்களைப் போல் மெல்னிகோவ் ஒழுக்கக்கேடானவரோ ஊழல் வாய்ந்தவரோ அல்ல. ஒரு பெரும் பன்னாட்டு நிறுவனத்துடன் ஒரு வருடத்துக்கும் மேலான மோதலுக்குப் பிறகே அவர் நோர்லிஸ்க்கின் மேயரானார்.
இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஆர்க்டிக் வட்டத்துக்கும் மேலாக இருக்கும் ஒரு உலோக நகரம் நோர்லிஸ்க். அங்கே இருக்கும் நிறுவனம் ரஷ்யாவின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்து வருகிறது. நிக்கல், பிளாட்டினம் மற்றும் பிற விலைமதிப்பு மிக்க உலோகங்களின் உலக சந்தையில் ஒரு பெரும் பங்கைத் தன் கையில் வைத்திருக்கிறது. இப்போது அவர்கள் விரிவாக்கம் செய்தபடியும் அமெரிக்க நிறுவனங்களை வாங்கியபடியும் இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் எதிர்ப்பைச் சமாளித்துத்தான் மெல்னிகோவ் இரண்டாவது முறையும் மேயர் தேர்தலில் வென்றார், அதுவும் தேர்தல் தில்லுமுல்லுகளுக்கிடையே மிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று.
ரஷ்யாவிலேயே அது ஒன்றுதான் இடதுசாரிகள் அதிகாரத்தில் இருக்கும் பகுதி எனலாம்.
ஆக, கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியை ரஷ்யாவில் இடதுசாரிகளின் மறு எழுச்சிக்கு ஒரு ஊக்கமாகக் காண்கிறீர்களா?
இது மிக முக்கியமானதாகவாவது இருக்கிறது. வெளி உருவாகிறது. கடந்த மூன்று நான்கு வருடங்களாக ரஷ்யாவில், குறிப்பாக பெருநகரங்களில், ஒரு புதிய இடதுசாரி அரசியல் உருவாகி வருகிறது. இது கம்யூனிஸ்டு கட்சிக்கு உதவுவதாக இல்லை. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகளின் ஓர் அங்கமாகக் கருதப்படுவதில்லை.
பன்முக அரசியல் வெளியின் இந்தப் பகுதியை (இடதை) கம்யூனிஸ்டுகள் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
இந்த நிகழ்வு வேறு எந்தெந்த வகைகளில் வெளிப்படுவதாகக் காண்கிறீர்கள்?
அதை நீங்கள் எங்கும் காணலாம். பல்கலைக்கழக விவாதங்கள், எனது புத்தகங்களின் விற்பனை என்று எனது சொந்த அனுபவத்தில் நானே பார்க்கிறேன். முன்பெல்லாம் எனது புத்தகங்களை ரஷ்யாவில் பதிப்பிடுவது மிகக் கடினமானதாக இருக்கும். இப்போது அம்மாதிரிப் புத்தகங்களை விற்பது லாபகரமானதாய் இருப்பதால் பிரச்சினையில்லை.
1998இல் ரயில் மறியல்கள், பொது வேலைநிறுத்தங்கள் என்று நீங்கள் பார்த்த தொழிலாளி வர்க்க சுயநடவடிக்கையின் எழுச்சி, அவர்களது சில கோரிக்கைகள் பிரைமகோவின் ஆட்சியில் நிறைவேறியதும் சிதறுண்டு போனது. ஆனால் அவர்கள் சிதறுண்டதுமே அந்த அரசு தூக்கியெறியப்பட்டது. இப்போது அந்த நடவடிக்கைப் போக்கு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் இடங்களில் ஒன்றாக நோரில்ஸ்க் இருக்கிறது.
தனது நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கு, தொழிலாளர் இயக்கத்துக்குச் சில ஸ்தூலமான வெற்றிகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான தொழிற்சங்கங்களும் அரசமைப்பின் ஒரு பகுதியாக மறுபடியும் இணைக்கப்பட்டுள்ளன. பிரச்சினை என்னவென்றால், இந்த மாதிரியான பெருநிறுவன வடிவங்களை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அங்கமாக ஆக்கினால், அது பாசிசத்துக்கே இட்டுச்செல்லும்.
பாசிசம் என்பது அதுதான் – ஒன்றுதிரட்டப்பட்ட சர்வாதிகார வடிவங்களிலான கட்டுப்பாடு மற்றும் நிறுவனங்களைக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரம்.
பின்-கம்யூனிசச் சமூகத்தில் எந்த மாதிரியான பொருளாதாரம் மிக நன்றாகப் பயனளிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குறைகளே அற்ற எந்த ஒரு வகைமாதிரியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தெளிவு. கனரகத் தொழில்கள், கச்சாப்பொருள் பிரித்தெடுப்பு மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த பெரும் நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குத் திரும்ப வேண்டுமென விரும்புகிறார்கள்.
ஆனால் பழைய நாட்களைப் போல் மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்குத் திரும்பிவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். மேலும் அதிக ஜனநாயக முறையில், மேலும் அதிகப் பங்கெடுப்போடு பெருநிறுவனங்கள் கட்டமைக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள்.
தனியார்மயமாக்கப்பட்ட பெருநிறுவனங்கள் மீண்டும் பொது மக்கள் கட்டுப்பாட்டுக்கு வர வேண்டுமென விரும்புகிறார்கள். உணவகங்கள், முடி திருத்தகங்கள், சில்லரை வணிகக் கடைகள் போன்ற சிறுதொழில்களுகான வழிவகைகள் வேண்டுமெனவும் விரும்புகிறார்கள்.
ஒரு கலப்புப் பொருளாதாரத்தை விரும்புகிறார்கள். எல்லாமே தனியார்மயமாவதை அவர்கள் விரும்பவில்லை. இன்னும் புரட்சிகரமான மக்களிடம் நீங்கள் பேசிப் பார்த்தால், சில குறிப்பிட்ட பொது நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட, நிர்வாக வெளிப்படையான, பொதுத்துறை முதலீட்டோடு தொடர்புடைய சமூகவயமாக்கப்பட்ட உற்பத்தித் தொடர்புவலைகள், கூட்டுச்சமூகத் தொழில்கள் மற்றும் உயர்தொழில்நுட்ப கூட்டுறவுத் தொழில்கள் போன்றவை குறித்துப் பேசுவார்கள்.
ஜரோப்பியச் சமூக உச்சிமாநாட்டில் ரஷ்யர்கள் (மாஸ்கோவில் இருப்பவர்கள் மட்டுமல்ல) தவறாது கலந்துகொண்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் அது இங்கு ஒரு வலிமையான இயக்கமாக ஆகவில்லை. கவனமீர்க்கும் சில காட்சிகள் தென்படுகின்றன. ஏதோ ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. பரவசமூட்டுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதில்லை.
தமிழில் : எஸ்.வி.உதயகுமார்