இந்திய ஒன்றிய அரசு பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி வாங்கிய ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்திருப்பதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்தக் கோரியது.
ரபேல் போர் விமான ஊழல் சர்ச்சைகளுக்குப் பின்னரும் மோடி மீண்டும் வென்று ஆட்சியமைத்தார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை கொள் முதல் செய்ய 2016 ஆம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதில் 23 விமானங்களை இந்தியா வாங்கியும் விட்டது. மீதி 36 விமானங்கள் 2022- ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்க இருக்கும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.இந்த ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு பொது நலன் வழக்கை விசாரித்து, 2019 நவம்பரில் அதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறியது.
இது சர்சைக்குள்ளாகி ஓய்ந்த நிலையில் இப்போது இந்தியாவுக்கும் பிரான்ஸ் விமான உற்பத்தியாளரான டசால்ட்டுக்கும் இடையில் 36 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பிரான்ஸ் பொது விவாகரங்களுக்கான வழக்கு மையத்தின் குற்றப்பிரிவு இதை விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மீடியா பார்ட் பத்திரிகையும் தன்னார்வ நிறுவனமான ஷெர்பாவும் கொடுத்த புகாரை அடுத்து இந்த விசாரணை துவங்கப்பட இருக்கிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்யப்பட்ட போது பிரான்ஸ் அதிபர் பதவியில் ஹாலண்ட் இருந்தார். இப்போது மக்ரோன் இருக்கிறார். அன்றைய ஹாலண்டின் அரசின் நிதியமைச்சராக இருந்த மக்ரோன் இன்று அதிபராக இருக்கிறார். விசாரணைகளின் போக்கு இந்திய அரசியலில் புயல் கிளப்பக் கூடும்.