தேர்தல்காலத்தில் ஜெயலலிதாவிற்கு வாய்ப்பாகப் போன நீதிபதி சதாசிவத்தின் பரிந்துரை அவரை அதிரடித் தீர்மானம் எடுக்கத் தூண்டியது. மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மூன்று பேரை மட்டுமல்ல ஏழுபேரையும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும் தவறினால் தான் அவர்களை மானில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விடுதலை செய்வேன் என அறிவித்தார். மாநில அரசிற்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய அதிகாரம் வழங்கும் குற்றப்பிரிவு 432 இன் அடிப்படையிலேயே அந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
குற்றவியல் பிரிவு 432 ஐ பின்னதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிரிவு 435(1) கட்டுப்படுத்துகிறது என்பது ஜெயலலிதாவிற்குத் தெரியாததல்ல. அடிப்படையில் பிரிவு 435 இன் அடிப்படையில் மத்திய அரசு அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் சார்ந்த வழக்குகளில் மாநில அரசு சுயாதீனமாக முடிவெடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தீர்மானத்தை மத்திய அரசும் அதேவேளை பாரதீய ஜனதாக்கட்சியும் எதிர்க்கின்றன. காங்கிரசும் பாரதீய ஜனதாவும் தனது வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்திய தேசியப் பற்று என்ற பழமைவாத ஒருங்கிணைப்பை நம்பியிருக்கின்றன. இந்துத்துவம் என்ற பிந்தங்கிய இளைகளால் பிணைக்கப்பட்டுள்ள இந்தியத் தேசியம் பாரதீய ஜனதாவினதும் காங்கிரசினதும் அதிகாரவர்க்கத்தைப் பாதுகாப்பதற்கான முகமூடி. ஜெயலலிதா போன்ற மாநில முகவர்கள் இதன் அடியாட்கள் மட்டுமே.
ஆக,வை.கோ ஆதரிக்கும் பாரதீய ஜனதாவும் அதே வேளை காங்கிரசும் ஏழு பேரும் விடுதலை செய்யப்ப்படுவதை எதிர்க்கின்றன.
அப்பாவிகளை மரணபயத்தோடு சிறையில் அடைத்து வைத்திருந்த இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதுநிதிகளான ஜெயலலிதாவும், காங்கிரசும், பாரதீய ஜனதாவும் அப்பாவிகளின் உயிர்களகளை பந்தாடிக்கொண்டிருக்கின்றன.
இந்திய அரசின் பிரதம மன்மோகன் சிங், ரஜீவ் காந்தி கொலை இந்திய ஆன்மாவின் மீதான் தாக்குதல் என்கிறார். இந்திய ஆன்மா இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த போது, போராட்டக்குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தி ஆயிரமாயிமாய் இளைஞர்களைத் தனது மரணப்பசிக்கு இரையாக்கிய வேளையில், மன்மோகன் சிங் கனவு கண்டுகொண்டிருந்திருப்பாரோ.
சிறையிலிருப்பவர்கள் அப்பாவிகள். அவர்கள் கொலையுடன் தொடர்பற்றவர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த அடிப்படையில் குற்றவாளிகள் இல்லை என்பது மக்களின் மொழி. 90களில் மக்களின் மொழியை ரஜீவ் காந்தி நிராகரித்தபோதே குண்டுகள் பேசின. ரஜீவ்காந்தி போன்ற தனி நபர்கள் கொல்லப்படுவதால் அவர் சார்ந்த அதிகாரவர்க்கம் அழிந்து விடாது. ஆனால் ரஜீவ் காந்திக்கு சிறீ பெரம்பத்தூரில் வழங்கப்பட்ட மரணதண்டனை தவறென்றால் அவரைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதும் தவறானது. ஆக், கொலையுடன் தொடர்பற்ற அப்பாவிகளுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது எப்படிச் சரியானதாகும்?
ரஜிவ்காந்தி கொலையின் பின்புலம், அவற்றின் சூத்திரதாரிகள், ஏவப்பட்டவர்கள், கொலைசெய்தவர்கள் ஆகியோரைக் கண்டுபிடிப்பதும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களையும் ரஜீவ் காந்தியின் போர்க்குற்றங்களையும் விசாரணை செய்வது அவசியமானது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படும் வரை போலிக் குற்றம் சுமத்தப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும்.