
இந்த வழக்கில் தமிழக அரசின் சந்தர்ப்பவாத முடிவைத் தொடர்ந்து இது புதிய பரிமாணத்தை அடைந்தது.
தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இந்த 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இந்த 3 பேரையும் தூக்கில் போட தடை விதித்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடும்போது, கொலை வழக்கு ஒன்றில் தூக்கு தண்டனை பெற்ற புல்ஸர் என்பவரின் கருணை மனுவை பரிசீலனை செய்ய ஜனாதிபதி காலதாமதப்படுத்தினார். இதையடுத்து அவர், தனது கருணை மனுவை ஜனாதிபதி பரிசீலிக்க மிகவும் தாமதமானதால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரபல வக்கீல்கள் ராம்ஜெத்மலானி, அந்தி அர்ஜுனா ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகிறார்கள்.
இந்த வழக்கு முடிந்த பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என்று மூப்பனார் பேரவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனு தற்போது நிலுவையில் உள்ளது.
புல்ஸர் வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தொடர்ந்துள்ள இவ்வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டும் என்றார்.
வைகோவின் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.