Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்த வெற்றியும் போராட்டத் தோல்வியும் : சண்முகம்

war1கடந்த மே மாதம் 19ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிந்து விட்டதாகவும் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதெனவும் பிரகடனம் செய்து கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் முனையில் இருந்து புலிகள் இயக்கம் தமது துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து விட்டதாகவும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகத்திற்கும் பிரித்தானியாவிற்கும் தெரியப்படுத்தினர். அதன் மூலம் அவர்கள் முன்னெடுத்த நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்கு வந்துள்ளதையும் தமிழீழத்திற்கான போராட்டம் தோல்வியடைந்தமையும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன் வே. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டதையும் அரசாங்கம் அறிவித்தது. இத்தகைய வெற்றிக்கான அறிவிப்பும் தோல்விக்கான செய்தியும் உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் பல்வேறு கோணங்களில் இருந்தும் நோக்கப்பட்டது. ஒவ்வொரு தரப்பு அரசியல் விமர்சகர்களும் ஆய்வாரள்களும் தத்தமக்குரிய வர்க்க இன அரசியல் கண்ணோட்டங்களில் இருந்தே இதனை அணுகிக் கொண்டனர். இந்தியா அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் யாவும் தத்தமது ஆதிக்கப் பிடி அல்லது செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச காய்நகர்த்தல் போட்டி அடிப்படையிலேயே இவற்றை அணுகிக் கொண்டன. இறுதியான யுத்த கால கட்டத்தில் மட்டுமன்றி அந் நாடுகள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக்கிய கைங்கரியம் தொட்டு மூன்று தசாப்த காலத்தில் அதனை அவ்வப்போது வளர்த்து இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டமை வரை தத்தமது உலக- பிராந்திய மேலாதிக்க அடிப்படையிலேயே செயலாற்றி வந்துள்ளன என்பது நோக்குதற்குரியதாகும்.
இந்த யுத்தத்தின் வெற்றி தெற்கிலே மிகப் பெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. தமது சொந்த நாட்டு மக்களில் ஒரு பிரிவினரான பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்றழித்தும் படுகாயங்களுக்கு ஆட்படுத்தியும் பசி பட்டினி கிடக்கச் செய்தும் கடுமையான தரை கடல் ஆகாய தாக்குதல்கள் நடாத்தியே அரசாங்கத்தினால் மேற்படி வெற்றி பெறப்பட்டிருக்கிறது. அதேவேளை ஆயுத பலம் கொண்டு அரச படைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை மிக்கதெனக் கூறப்பட்ட புலிகள் இயக்கம் பல முனைகளாலும் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பும் ஏனைய நாடுகள் பல வற்றின் ஒத்துழைப்புகளும் இருந்து வந்துள்ளமை எதுவும் இரகசியமானவை அல்ல.

இலங்கை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் அதன் ஆயுதப் படைகளும் ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற இரு தடவையிலான ஆயுதக் கிளர்ச்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த முன் அனுபவங் கொண்டதென்பது மீள் நினைவிற்கு உரியது. 1971இலும் 1988-1989இலும் ஜே.வி.பி முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சிகளை இலங்கையின் ஆயுதப் படையினர் முறியடித்து வெற்றி கண்டனர். அந்தக் கிளர்ச்சிகளில் கொன்றழிக்கப்பட்டவர்களான இளைஞர்கள் யுவதிகள் மக்கள் முற்றிலும் சிங்கள மக்களாகவே இருந்தனர். முதலாவது கிளர்ச்சியின் போது சுமார் இருபதினாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இரண்டாவது கிளர்ச்சியின் போது சுமார் அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் அழிக்கப்பட்டனர். மேலும் பல ஆயிரம் பேர் காணாமற் போயினர். அன்றைய கிளர்ச்சிகளை இலங்கையின் ஆயுதப் படையினர் அடக்கி ஒடுக்கிய போது பௌத்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எவரும் விட்டு வைக்கப்படவில்லை. முற்றிலும் ஆளும் வர்க்க வன்மத்துடனேயே அவ் இரத்தக் குளிப்பு நடத்தப்பட்டது. ஆனால் தற்போதைய யுத்தத்தில் வர்க்க வன்மத்துடன் பேரினவத வன்மமும் இணைந்து இருந்தமை தான் கவனத்திற்குரியதாகும். அன்றும் இந்தியாவும் ஏனைய நாடுகளும் அரசாங்களுக்குப் பக்க பலமாகவே இருந்து வந்தன.

ஏற்கனவே இடம்பெற்ற கிளர்ச்சிகள் அடக்கப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட இரு சந்தர்ப்பங்களிலும் எந்தவித வெற்றி விழாக்களும் நடத்தப்படவில்லை. ஏனெனில் அவ் அடக்கு முறையால் சிங்கள மக்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டு சோகத்திலும் வேதனையிலும் மூழ்கி இருந்தனர். ஆனால் இன்றைய நிலை தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தான் யுத்த வெற்றி எனப்படுவது வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் தான் துட்டகைமுனு, விஜயபாகு, பராக்கிரமபாகு போன்ற மன்னர்களுடன் மகிந்த ராஜபக்ஷ ஒப்பிடப்பட்டு புகழாரங்கள் சூட்டப்படுகிறார். அதேவேளை தோல்லியுற்ற புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் சோழ மன்னனான எல்லாளனுடன் வைத்துப் பார்க்கப்படுகிறது. நிலவுடைமைக் கால மன்னர்களும் அவர்களது ஆட்சி ஆதிக்க நிலை நிறுத்தல்களுக்கான யுத்தங்களும் இன்றுவரை சிங்கள தமிழ் மக்களைத் திசை திருப்பி வைத்திருப்பதற்கு ஒரு எண்ணக்கருவாகப் பயன்படுத்தப்டும் அவலநிலை அரசியல் ரீதியாக இரு தரப்பு மக்களிடையேயும் உணரப்படாமை தான் இலங்கையின் இன்றைய சோகமாகும். சிங்கள் மக்கள் மத்தியில் பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் தொடர்ந்து அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் துட்டகைமுனுவும் கஜபாகும் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்குத் தேவையாக உள்ளது. அவ்வாறே தமிழ் மக்கள் மத்தியில் சோழர் காலத்தைக் காட்டி ஆண்ட பரம்பரைக் கதைகள் பேசித் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழீழத்தை வென்றெடுக்க முனைந்த போக்கையும் காண முடிந்தது.

இவ்விடத்திலே முக்கிய விடயம் ஒன்று சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத் தரப்பில் இருந்தும் போராட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி நின்ற தமிழ்த் தேசியவாத தரப்பிலிருந்தும் இன்றைய நவ கொலனிய அமைப்பு முறை உணரப்படவில்லை. மேலும் ஏகாதிபத்திய ஊடுருவல்கள் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலினூடாக உட்புகுத்தப்பட்டதை இரு தரப்புமே ஏற்றுக் கொண்டன. இந்திய பிராந்திய மேலாதிக்கத்தின் பிடிகளுக்கான அடிப்படைகள் புகுத்தப்பட்ட போது அவற்றின் எதிர்கால அபாயங்கள் பற்றி அக்கறைப்படுத்தப்படவில்லை. இறுதி யுத்த சூழலில் கூட இரு தரப்புக்களுமே தத்தமது நிலைநின்று அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியத்தையோ அன்றி இந்திய மேலாதிக்கத்தையோ எதிர்க்கத் துணியவில்லை. அதனால் தான் மூன்று தசாப்த கால தேசிய இனப் பிரச்சினை காரணமான யுத்தத்தில் உலக – பிராந்திய மேலாதிக்க சக்திகள் ஒரு தரப்பாகச் செயற்பட்டு வந்திருக்கின்றன என்ற உண்மை மேன்மேலும் துலக்கம் பெற்றுள்ளது. இதற்குப் பின்பும் தமிழ் தேசியவாதிகளும் அவர்களை நியாயப்படுத்தும் அரசியல் விமர்சகர்களும் ஆய்வாரள்களும் என்ன கூறப் போகிறார்கள். இரண்டு கைகளைக் கொண்டு இரண்டு கண்களை மறைக்க முடியுமே தவிர நிலாவை மறைக்க முடியாதது போன்றதே யதார்த்தங்களை மறைக்க முற்படும் தமிழ்த் தேசியவாதிகளின் அணுகு முறையாகும்.
மேலும் இவ் வெற்றி தோல்வி சிங்கள தமிழ் தேசிய இனங்களின் மத்தியில் வேறுபட்ட உணர்வலைகளையும் கண்ணோட்டங்களையும் உருவாக்கி உள்ளன. முழுச் சிங்கள மக்களுமே வெற்றிக் களிப்பில் உள்ளனர் என்று கூற முடியாது. ஆனால் பொதுவான மௌனம் பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் நிலவியது. அது முழுமையான சம்மதத்தின் அறிகுறி என்று கூறிக் கொள்ள இயலாது. ஆனால் அரசாங்கம் 2006ம் ஆண்டு மாவிலாறு அணையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தண்ணீரை விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் கையளித்த நிகழ்வு முக்கியமான திருப்புமுனையாகும். அதனை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஆரம்பம் என்று அரசாங்கம் முன்வைத்த நிலைப்பாட்டை சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் முஸ்லீம் மக்களில் பலரும் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமன்றி புலிகள் இயக்கம் ஆரம்பம் முதல் சிங்கள மக்கள் மீதான அரசியல் அணுகுமுறையில் கைக்கொண்ட குறுந்தேசியவாத அகங்காரப் போக்கும் குடிமக்கள் மீதான கண்மூடித்தனமிக்க தாக்குதல்களும் பயங்கரவாதம் என்ற அரசாங்கத்தின் நிலைக்கு சிங்கள மக்கள் முழு ஆதரவு கொடுக்கும் நிலையை வலுப்படுத்தியது. அதே வேளை சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளுக்கும் ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகளும் ஏவப்பட்டதனால் அவர்களது குரல்கள் உள்ளடங்கிக் கொண்டன. அதனால் இலங்கையின் ஜனநாயக மனித உரிமை நிலைகள் மிகப் பெரும் பலவீனத்தையும் பின்னடைவையும் கண்டன.

அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் என்றுமில்லாத வராலாற்றுத் துயரங்களையும் சோகங்களையும் இப் போராட்டத்தின் தோல்வி ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தி நம்பிக்கையீனம் எதிர்காலம் பற்றிய அச்சம் பீதி என்பன எங்கும் விரவி நிற்பதைக் காண முடிகிறது. இதற்குப் புலிகள் இயக்கம் மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவமும் கொள்கை வழிகாட்டலும் தருவதாகக் கூறி நின்ற அனைத்துத் தமிழ் தேசியவதாக் கட்சிகளும் இளைஞர் அமைப்புக்களுமே பிரதான பொறுப்புதாரிகளாவர். பாராளுமன்றப் பாதையிலும் பின்பு ஆயுதப் போராட்டப் பயணத்திலும் போலியான வாக்குறுதிகளையும் ஆயுதங்களையும் முதன்மைப்படுத்திய வீரதீர இளைஞர்களையும் நம்பிச் சென்றே இன்று நிர்க்கதிக்குள்ளாகிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். ஆரம்பம் முதலே தமிழ் மக்கள் மத்தியில் மாக்ஸசிச லெனினிச வாதிகள் இடதுசாரிகள் முன்வைத்த அரசியல் கருத்துக்களை தமிழ் தேசியவாதிகள் கவனத்தில் கொள்ள மறுத்தனர். மாக்ஸிச லெனினிச இடதுசாரிக் கொள்கைகளும் அவற்றை முன்னெடுத்த கட்சிகள் பொது அமைப்புகள் தமிழ்த் தேசிய பழைமைவாத அரசியல் சக்திகளால் மூர்க்கத்தனமாக எதிர்க்கப்பட்டன. துரோக சக்திகள் என்று கூடக் காட்ட முற்பட்டனர். இன்றைய அவல நிலையில் கூட இவர்கள் தமது தவறுகளை ஒப்புக் கொள்ளும் நிலையில் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களது மேட்டுக்குடி உயர்வர்க்க நிலைப்பாடாகும். ஆனால் நம்பிச் சென்று ஏமாற்றப்பட்டு அழிவுகளை அனுபவித்த மக்கள் தான் தமது தவறான பின்பற்றல்களையிட்டு பட்டறிவுடன் மீளாய்வு செய்து சரியான அரசியல் மார்க்கத்தைத் தேட வேண்டியுள்ளது. தோல்வி இடம்பெறக் கூடியதாயினும் அதிலிருந்து உரியவாறு அரசியல் வரலாற்றுப் பாடத்தையும் பட்டறிவையும் பெற்றால் உரிய சுயவிமர்சனங்களைச் செய்தால் தோல்வியை வெற்றியின் தாயாக்க முடியும். அது வரலாற்றால் நிராகரிக்கப்பட்ட தமிழீழம் என்ற பிரிவினைவாதத்தையும் தந்திரோபாயமற்ற அரசியல் இராணுவப் போராட்டத்தையும் தமிழர் குறுந்தேசியவாத ஆதிக்க அரசியலையும் மீளமைப்பதற்கு அல்ல என்பது தெளிவுடன் புரியப்பட வேண்டும்.

மேற்படி வெற்றி தோல்வி இரண்டிலிருந்தும் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் நிறையப் படிப்பினைகளும் பட்டறிவுகளும் பெற வேண்டும். வெற்றி என்ற பதாகையின் பின்னால் ஏகப் பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்கள் எவ்வாறு மேன்மேலும் சுரண்டி அடக்கப்படப் போகிறார்கள் என்பது அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும். இதே வர்க்க வன்மம் கொண்ட அரசாங்கமும் நவீனமாகக் கட்டியமைக்கப்பட்ட அரசு யந்திரப் படைகளும் எதிர்காலத்தில் சிங்கள உழைக்கும் மக்களை எவ்வாறு கையாளும் என்பதையிட்டு ஆழ்ந்து சிந்திப்பது மக்கள் முன்னால் உள்ள கடமையாகும். வெற்றிகளும் விருதுகளும் பெற்று நிற்கும் ராணுவம் சிங்கள மக்களுக்கானது அல்ல. பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்குரியதேயாகும்.
எனவே யுத்தத்தின் வெற்றி அடிப்படையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்குரிய வெற்றியல்ல. அது பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் பௌத்த சிங்கள மேலாண்மை சக்திகளுக்குமுரியதேயாகும். அவ்வாறே தோல்வி என்பது தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த தமிழ்த் தேசியவாத பழைமைபேண் வாதிகளுக்கும் அதனை இளைஞர் ஆயுத பலத்தால் மட்டும் வென்றெடுக்கலாம் என்று மக்களை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்ற புலிகள் இயக்கத்திற்குமே உரியதாகும். ஆனால் இடம்பெற்ற இத் தோல்வியானது தமிழ் சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் உழைக்கும் மக்கள் வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படும் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. அதன் மூலம் பரந்துபட்ட வெகுஜனப் போராட்டப் பாதையில் முன் செல்வதற்கான அரசியல் மார்க்கம் பற்றிச் சிந்திக்கவும் செயற்படவும் உரிய புதிய சூழல் உருவாகி உள்ளது. அதனை விட வேறு மார்க்கம் ஆக்கபூர்வமானதாக அமையவும் மாட்டாது.

Exit mobile version