யுத்தப் பிரதேசத்தில் ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்படுவதுடன் மாத்திரமல்லாது ஒரு யுத்த தளபாடம் போல் பயன்படுத்தப்படுகிறார்கள். தனியார் நிலவுடைமை ஆட்சி அதிகாரம் ஆரம்பித்த மன்னர் காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நடைபெற்ற அனைத்து போர்களிலும், பெண்கள் போரில் பங்குபற்றினாலும் இல்லாவிட்டாலும் காலத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களிலும் பெண்களே யுத்தத்தின் பாதிப்பை அதிகமாக அனுபவிப்பவர்களாக இருந்துவருகிறார்கள், யுத்தத்தின் உச்சமான துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதற்குக் காரணம் அரசியல் ஆட்சி அதிகார சிந்தனையில் மாற்றம் இல்லையா? அல்லது அநேகமான போர்களை ஆண்களே நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் என்பதா? அல்லது பெண்கள் போரை எதிர்கொள்ளும் ஆற்றல் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதா? எது காரணம்?
‘பொஸ்னியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் யுத்தம் காரணமாகத் தமது கணவன்மார் காணாமல்போய்விடுவதால் பல்லாயிரம் பெண்கள் கணவனின் அனுசரணையை இழந்துவிடுவது மட்டுமல்ல, உத்தியோகபூர்வமாக விதவைகள் என்ற அங்கீகாரத்தையும் இழந்துநிற்கிறார்கள்’ என்று கூறுகிறார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் கமிட்டியின் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் நிகழ்ச்சித் திட்டம்’ என்ற அமைப்பின் தலைவியான புளோரன்ஸ் ரெர்சியர். பொஸ்னியாவில் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல் 10 வருடத்திற்கு மேல் தொடர்ந்த யுத்தம் நேபாளத்தில் தற்போது நிறுத்தப்பட்டு ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் புதிய அரசு ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய திட்டம் எதனையும் அந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை 30 வருடங்களுக்கு மேலாகத் தொடரும் யுத்தம் பெண்கள் மேல் பெரும் சுமையாக அழுத்திக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் இனப்பிரச்சினை மேலெழுந்து போராட்டங்கள் உத்வேகம் பெற்றபோது, 1965 காலகட்டங்களில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் பெண்களே முன்னணியில் பயன்படுத்தப்பட்டார்கள். போராட்டங்களைத் தடுக்கவரும் எதிராளிகள் பெண்கள் மேல் உடனடியாகத் கடுமையான தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள் என்ற எண்ணத்தில், போராட்டம் நீடிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே பெண்களை முன்னணியில் நிறுத்துவார்கள்.
1983 இன் பின்னர் ஆயுதப்போராட்டம் முழுவடிவம் பெறத் தொடங்கியபோது, தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களில் பெண்கள் தாமே விரும்பிப் பங்குபற்றத் தொடங்கினார்கள். அவர்கள் அதிகமாக ஆண் போராளிகளை மறைத்து வைப்பதற்கும் அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கல், மற்றும் பிரசாரங்களுக்கான துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டதுடன் சிலர் ஆயுதம் ஏந்தி யுத்த களத்திற்கும் சென்றார்கள். போராளிகள் மறைந்து வாழ்வதால் அவர்களைக் கைதுசெய்யமுடியாதபோது உதவிபுரிந்த பெண்களே அரசாங்கப் படைகளினால் துன்புறுத்தப்பட்டார்கள்.
இடையறாது யுத்தம் நடைபெறும் எமது நாட்டில் கணவனை இழந்த இளவயதுப் பெண்கள், தகப்பனை சகோதரனை யுத்தத்திற்குப் பலி கொடுத்தவர்கள், அங்கவீனமடைந்த இளம் பெண்கள், தமது எதிர்காலம் பற்றி எந்தவித நம்பிக்கையும் அற்ற நிலையில் அநாதரவானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் மனம் உடைந்து வாழ்பவர்களைத் தமிழீழம் என்ற இலட்சியக் கனவிற்குள் அகப்படுத்துவது சுலபமாக இருக்கிறது. உளவு நடவடிக்கை மற்றும் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதில் பெண்களுக்கு உள்ள சாதகமான அம்சங்களும் பெண்களைப் பெருமளவில் புலிகள் பயன்படுத்திவருவதற்குக் காரணமாகியுள்ளது. பெண் உடம்பை நிந்தனை செய்யும் ‘மனித வெடிகுண்டு’ மனிதனை ஒரு சடப்பொருளாக நினைக்கும் எந்தவித போரியல் நீதிக்கும் உட்படாத ஒன்று.
வான் தாக்குதல், இரண்டு பக்கத்திலும் நடத்தப்படும் செல் தாக்குதல் மற்றும் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது புலிகள் நடத்தும் குண்டுத்தாக்குதல்களினால்; யுத்தத்தில் நேரடியாக ஈடுபடாத 70000க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை இறந்திருக்கிறார்கள். இதற்கு புறம்பாக இலங்கை இராணுவமும் தமிழர் தரப்பு ஆயுதக்குழுக்களும் பெருந்தொகையில் நேரடி யுத்தத்தில் இறந்திருக்கிறார்கள். மேலும் பல இளைஞர்கள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
குடும்பத்தின் ஆண்கள் இறக்கும்போது அல்லது காணாமல் போகும்;போது பெண்கள் குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாகிறார்கள். இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் கிராமப்புறப் பெண்களாகவும் இளம் வயதினராகவும் உள்ளனர். குடும்பத்தை நடத்தும் அனுபவம் அற்றவர்களாகவும் வெளியுலக அனுபவம் அற்றவர்களாகவும் இருப்பதால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். மேலும் காணாமல் போன தமது கணவனோ அல்லது மகனோ திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையுடன் அதற்கான எந்த அத்தாட்சியையும் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், அவரைக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு வகைகளில் தம்மிடம் உள்ள பணம், நகைகள் மற்றும் காணியைக் கூட விற்று செலவழித்துவிட்டு நடுவீதிக்கு வந்துவிடுகிறார்கள்.
இதேபோல், வன்செயலில் கணவன் இறக்கும்போது, அந்த நேரத்தில் உள்ள துன்பகரமான நிலையில் இறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் சரியான தகவல்களைப் பதியாது விட்டிருப்பார்கள். இதன் காரணமாக, அரசாங்கம் வழங்கும் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் அகப்படுகிறார்கள். நஷ்டஈட்டுப் பணத்திற்காக சில உறவினர்களும் இப் பெண்களை ஏமாற்றுகிறார்கள். அந்தப் பணத்தை முதலீடாக வைத்துக்கொண்டு ஏதாவது சிறிய தொழில் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவதற்கான ஆலோசனைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆண் துணையின்றி தனித்து வாழும் பெண்ணுக்கு ஆண்களால் ஏற்படும் இடைஞ்சல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளும் இக்கட்டான நிலையொன்றில் மறுமணம் செய்துகொள்கிறாள். அந்த ஆண் வெறுமே சுயநல நோக்கில் அந்தப் பெண்ணை மணந்துகொண்டு நஷ்டஈட்டுப் பணம் ஏதோவொரு வழியில் செலவானபின் இப் பெண்ணை கைவிட்டுச் செல்கிறான். இந்நிலையில், இப்படியான பெண்கள் மீண்டும் அநாதரவாவது மட்டுமல்ல மறுமணம் செய்துகொண்டதால் சமூகத்தின் நன் மதிப்பையும் இழக்கிறார்கள். சமூகத்தின் வசை பாடலுக்கு அஞ்சியும் தனது பொருளாதாரத் தேவைக்காகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்றை நாடுகிறாள். இந்தப் பெண்கள் பெரும்பாலும் தமது கல்வியை இடைநடுவில் நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொண்டவர்களாய் இருப்பார்கள். அவர்களுக்குப் போதுமான கல்வியறிவு இருக்காது. இதனால் மத்தியகிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக செல்வதே அவர்களால் முடியுமானதாய் இருக்கிறது. இதில் அவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் எத்தகையது என்பதைப் பின்னர் பார்ப்போம்.
யுத்தம் நடைபெறும் நாடு ஒன்றில் பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கூட வேதனையையும், ஏமாற்றத்தையும், அவஸ்த்தைகளையுமே ஏற்படுத்துகின்றன. யுத்தம் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பினையும் சீர்குலைத்துள்ளது. நலிவடைந்த பெண்களை பயன்படுத்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு நல்லதொரு களமாக யுத்தம் நடைபெறும் எமது பிரதேசம் உள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் பெண்களுக்கான இறுக்கமான சில கட்டுப்பாடுகள், எந்தளவு பணத்தின் தேவை இருந்தபோதிலும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு ஒன்றைப் பெற்றுச் செல்ல அவர்களை அனுமதிப்பதில்லை. அப்படி செல்பவர்கள் அநேகமாக கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அல்லது வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களாகவே இருக்கிறார்கள்.
இப் பெண்கள் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு புறப்படத் துணியும்போது அப் பெண் எந்த நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொள்கிறாள் என்பதை ஆராய்ந்தால். இதுவரை குடும்ப பாரத்தை சுமந்து வந்த ஆணின் ஆதரவு இல்லாமல் போயிருக்கும் அல்லது தமது குடும்பத்திற்கென ஒரு முதலாக பெருந்தொகைப் பணமோ சொத்தோ இவர்களிடம் இருக்காது.
ஆண் துணை இல்லாமல் போவதற்கு எல்லாப் பெண்களுக்கும் ஒரே காரணம் இருப்பதில்லை. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் பங்குபற்றியது, நடுவில் அகப்பட்டுக்கொள்வது, மாற்றுக் கருத்துக் கொண்ட ஒரு அமைப்பின் உறுப்பினராக இருப்பது, விடுதலைப்புலிகள் அமைப்பு பிளவுபட்ட போது மாற்று அணியில் இருப்பது, போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் பற்றியோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் பற்றியோ கடுமையான சிந்தனை வெளிப்பாடுகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாக பேசிக்கொள்பவன், புலி உறுப்பினராக இருந்தும் தனது அமைப்பின் தவறுகள் பற்றி விமர்சிக்கத் துணிந்தவன், கப்பம் கொடுக்க மறுத்தவனாயிருப்பான் அல்லது தேசியம் என்ற கருத்துக்கு மாறாக அனைத்து தரப்பினர் மீதும் பற்றுக்கொண்ட ஒரு மனிதநேயவாதி யாகவிருப்பான் எப்படியிருந்தபோதிலும் பெருந்தொகையான ஆண்களின் இறப்பிற்கும், காணாமல் போவதற்கும், அங்கவீனம் அடைவதற்கும் காரணம் யுத்தம் மட்டுமே. யுத்தமே இந்தப் பெண்களை வெளிநாடுகளுக்கும் துரத்துகிறது.
அவளின் நிராதரவான நிலையைப் பொறுப்பேற்பதற்கு யாரும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் சமூக நலத் திட்டங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைத்திட்டங்கள் எதுவும் யுத்தம் நடைபெறும் இடத்தில் சீராக நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லமுடியாது. யுத்தத்தில் அலைக்கழிக்கப்படும் இந்தப் பெண்கள், தமது எதிர்காலத்தை மீட்டுக்கொள்வதற்கு அல்லது தமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்திற்கு தேவையான பணத்தைத் தேட ஒரே வழி வெளிநாடு செல்வது என முடிவு செய்கிறார்கள். ஏற்கனவே அவர்களுக்குத் தெரிந்த பெண்கள் சிலர் பணிப்பெண்களாக வெளிநாடு சென்றிருப்பார்கள். அவர்களின் ஊரில் வெளிநாட்டு முகவர் அமைப்பு பிரதிநிதிகளின் நடமாட்டம் அதிகமாகவிருக்கும். இந்த முகவர்கள் வெளிநாடு செல்லத் தயாராகவுள்ள இந்த இளம்பெண்களை சுலபமாக அடையாளம் கண்டுகொண்டு அவர்களை அணுகி தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகாமையில் சேலையால் முக்காடிட்டிருந்த ஒரு சிறு பெண்ணும் அவளுக்குப் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் இருந்தார். அவர்களின் பேச்சிலிருந்து அந்தப் பெண் வெளிநாடு செல்வதற்காக வந்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. ஒரு தரிப்பிடத்தில் அந்த ஆண் எழும்பிச் சென்றபோது அப் பெண்ணிடம் கேட்டறிந்தவை எனக்கு அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
17 வயது மட்டும் நிரம்பிய அந்த இந்துப் பெண்ணை 25 வயதான ஒரு முஸ்லிம் பெண்ணின் அடையாளங்களுடன் குவைத் நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சொன்னாள். தனது கிராமத்தில் புலிகள் வந்து தங்கிச் செல்வதாகவும் அப்போது சந்தித்த இயக்க உறுப்பினர் ஒருவர் தன்னைக் காதலித்து கட்டாயப்படுத்திய தாகவும் பெற்றோரால் எதிர்த்து நிற்கமுடியாது தன்னை அவருடனேயே வாழ நிர்ப்பந்தித்தனர் என்றும் சொன்னார். ஆயினும் சில மாதங்களின் பின்னர் அவர் தன்னை விட்டுச் சென்றுவிட்டதாகவும் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் தனது கணவர் பற்றிய எந்தத் தகவலையும் பெறமுடியாதுள்ளதுடன் தனது குழந்தையை வளர்ப்பதற்கு பெரும் சிரமப்படுவதுடன் முறைப்படியான திருமணம் ஒன்றை தாங்கள் செய்துகொள்ளாததுடன் இயக்க உறுப்பினரான தனது கணவர் பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்வதனால் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடலாம் என்ற பயமும் உள்ளது என்பதால் சமூகத்தின் மத்தியிலும் தன்னைப் பற்றிய தப்பான பேச்சுக்கள் தன்னைக் கஷ்டப்படுத்துவதாக சொன்னார்.
ஆயினும், வெளிநாடு போவதற்கு எப்படியும் சிறிய தொகை பணம் என்றாலும் தேவைப்படுமே அதற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டபோது, அப் பணத்தை இந்த முகவரே தருவதாகவும் மாதா மாதம் சம்பளப் பணத்தில் கழித்துக் கொள்வதாகவும் ஏற்பாடு, ‘போக்குவரத்து, பாஸ்போட், கொழும்பில் தங்குமிடம், உணவு செலவு என்று எல்லாவற்றிற்கும் கணக்கு ஒன்று பதியப்பட்டு வருகிறது, அவற்றையெல்லாம் எனது சம்பளத்திலிருந்தே கொடுக்க வேண்டும். இவர் பல தடைவை என்னைக் கொழும்பிற்குக் கூட்டிக்கொண்டு வந்து போய்விட்டார். என்னிடம் இருந்த ஒரு சங்கிலியும் விற்று செலவழித்து விட்டேன். கொழும்பில் நடக்கும் தேடுதல் நடவடிக்கைகளிலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எங்களுக்குப் பயம் தான். இந்த முறையாவது சரிவந்தால் போய்விடலாம்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
எனக்குத் தோன்றியது இந்தப் பெண்ணை எப்படி இந்தப் போலி முகவரிடமிருந்து காப்பாற்றுவது? அவர் இந்தப் பெண்ணுடைய ஊரைச் சேர்ந்தவராக இருப்பதால் தன்னை நிச்சயம் ஏமாற்றமாட்டார் என அவள் நினைக்கிறாள். அப்படி ஏமாற்றாமல் அனுப்பிவைத்தாலும், முஸ்லிம் என்று பொய்யைச் சொல்லி ஒரு முஸ்லிம் வீட்டிற்கு பணிப்பெண்ணாகப் போய் அவர்களின் மார்க்க முறைப்படி இப்பெண் நடக்காமல் விடும்போது அவர்கள் இவளை இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைப்பார்கள்.
அந்த நாட்டில் இந்தப் பெண்ணிற்கு பொறுப்பான முகவர், மீண்டும் இன்னொரு வீட்டிற்கு அனுப்பிவைக்க முயற்சிப்பான். வெளிநாட்டில் பிரச்சினைக்குள்ளாகும் பணிப்பெண்கள் முகவர்களின் அடிமைகள் போல் தான் நடத்தப்படுவார்கள். முகவர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளா விட்டால் அவர்கள் கடுமையான இழிவான வார்த்தைப் பிரயோகங்களை இவர்கள் மேல் கொட்டுவார்கள். அதற்கு அஞ்சிய பெண்கள் மறு பேச்சின்றி முகவர்களுக்கு இணங்கி அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போவார்கள். அந்த இடத்தில் வீட்டுக்காரி பெரும் கொடுமைக்காரியாக இருந்தாலும் பொறுத்துக்கொண்டு போகும்படி முகவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமது சொந்த நாட்டில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை நினைத்து, நாட்டிற்கு திருப்பி அனுப்பிவைக்கும்படி இந்தப் பெண்கள் கேட்கத் துணிவதில்லை. சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் தற்கொலையை நாடுகிறார்கள் அல்லது ஏதுமற்று வெறுங் கையுடன் மீண்டும் நாட்டிற்கு வந்து சேர்கிறார்கள்.
மத்தியகிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட பெண்கள் கொழும்பில் முகவர்களினால் அலைக்கழிக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் கொஞ்சநஞ்சமல்ல.
இதையெல்லாம் சந்தித்து மனதைத் திடப்படுத்திக்கொண்டு சவுதி, குவைத், ஜோர்டான், லெபனான் என்று அந்நிய நாடுகளில் அந்நிய மொழிகள், அந்நிய தேசத்தவர்களுடன் போராடி தமது வாழ்வை மீட்கத் துடிக்கும் பெண்கள் எத்தனைபேர். அந்த வீடுகளில் நேரகாலம் பாராது உழைத்து தம்பி, தங்கையர், பெற்றோர் அல்லது பிள்ளைகள் வாழ்க்கையை உயர்த்தவென்று பணத்தை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தனது உறவினருடனோ பெற்றோருடனோ விட்டுச் சென்ற தனது குழந்தைகளை நன்றாக வளர்க்குமாறு கடிதம் எழுதுவார்கள். ஆனால் இங்கு அவளது குழந்தைகள் பெற்றோரின் நெருக்கமான உறவின்றி ஏக்கம் கொண்டு கல்வியிலும் மன வளர்ச்சியிலும் பின்தங்கி நிற்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் தாயின் அனுசரணையை அதிகம் எதிர்பார்ப்பவர்கள். தாய் இல்லாமலும் உறவினர்களின் கவனிப்பின்மையாலும் மன உளைச்சல் அடைந்த இந்தச் சிறு பராயத்தினர்; இலகுவில் புலிகளின் திட்டமிட்ட கவர்ச்சி வலையில் விழுந்துவிடுகிறார்கள்.
எந்த யுத்தம் அவளது தந்தையைப் பலியெடுத்து தாயையும் வெளிநாட்டுக்கு துரத்தியதோ அதே யுத்தம் அவளையும் பலியாக்க அழைத்துக் கொண்டபோது அந்தத் தாயின் முயற்சி அனைத்தும் வீணாகிறது. மகளின் துர்ப்பாக்கிய நிலை கேட்டு தனது தொழிலை விட்டு நாட்டிற்கே அந்தத் தாய் திரும்பி வந்து புலிகளின் முகாம்களுக்கு அலைந்து திரிகிறாள். மனித உரிமை இயக்கங்களை நாடுகிறாள். அங்கு அவளது வாழ்க்கையை மீட்பதற்கான எந்த வழிகாட்டலும் வழங்கப்படவில்லை. புலிகளின் முகாம்களில் ‘தேசிய விடுதலைக்காக மகளை அர்ப்பணம் செய்ய வேண்டியது ஒரு தமிழ்த்தாயின் கடமை’ என்றும் கடந்த காலங்களில் வாழ்ந்த வீரத்தாய்களின் அர்ப்பணங்கள் பற்றியும் அந்தத் தாய்க்கு உபதேசிக்கப்படுகிறது. அவர்களின் கதைகளை மறுத்து தனது வாழ்வின் எதிர்காலமே தன் பிள்ளை தான், பிள்ளையைத் திருப்பிக்கொடுங்கள் என்று வாதாடி நிற்கும்போது கடுமையான கண்டனத்தை அவள் எதிர்நோக்குகிறாள். எப்படியாவது மகளை மீட்டெடுத்துச் செல்வாளாயின் ஒரு துரோகியாகவே கணிக்கப்படும் அவலத்தில் தள்ளப்பட்ட அந்தப்பெண் யுத்தத்திற்குள் தான் விலங்கிடப்பட்டுவிட்டதை உணர்ந்துகொள்கிறாள். அதாவது போராளி அல்லது மாவீரர் குடும்ப அடையாளத்துடன் அரச படைகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி புலிகளின் பிரதேசத்திலேயே அடைக்கலம் தேடிக்கொள்கிறாள். இது அந்தப் பெண்ணுக்கு மாத்திரம் நேரிடுகிற அவலம் அல்ல, தமிழ்த் தாய்மார் அநேகர் இந்த அவலத்தில் அகப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போய் நிற்கிறார்கள்.
வன்னியில் இந்த நிலை என்றால் கிழக்கின் பின்தங்கிய கிராமங்களிலிருந்து கவர்ந்து செல்லப்பட்ட சிறு பெண் பிள்ளைகள், என்ன காரணத்திற்காக கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள் என்று அந்தத் தாய்மார் கேட்கிறார்கள். கிழக்கின் வெருகல் ஆற்றின் கரையில் 2004 ஏப்ரல் 29இல் 145 சிறுவர் சிறுமிகள் சிதைத்து சின்னாமாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். அந்த சிறுவர்களின் தாய்மார்களுக்கு முதலில் சொல்லப்பட்டது ‘மட்டக்களப்பு பிள்ளைகளை யாழ்ப்பாணத்தவன்கள் கொன்றுவிட்டான்கள்’ அவர்களது இயக்கத்தின் உள்ளேயே ஏற்பட்ட பிரச்சினையில் தான் கொல்லப்பட்டார்கள் என்பது பின்னர் அவர்களுக்குத் தெரிந்தது.
வன்னித் தலைமையால் அனுப்பப்பட்ட தமிழ்ப்படை வந்து, கிழக்கின் தலைமையின் கீழ் இருந்த தமிழ்ப்படைகளை அழித்திருக்கிறது. தலைமைகளுக்குள் நடந்த பிரச்சினைக்கு ஏன் இந்தப் பெண் சிறுமிகளை அவமானப்படுத்தினார்கள்? என்று அந்தத் தாய்மார் கேட்டார்கள். ‘யுத்தத்தில் இது சகஜம்’ என்ற பதில் தான் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழர் மானம் காக்கப் புறப்பட்டவர்களும் பெண்களை அவமானப்படுத்தியே தமது வெற்றியை நிலைநாட்டியுள்ளார்களா?
வருமானம் குறைந்த பெரும்பாலான குடும்பங்களில் பெண்களும் ஏதோவொரு வகையில் சிறு சிறு தொழில்களை செய்து வருமானத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அதன் மூலமே பெரும்பாலும் தமது பிள்ளைகளின் கல்விக்கான மேலதிக செலவைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தத்தினால் அந்தப் பெண்களின் நடமாட்டம் பயத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் அந்த சிறு வருமானத்தையும் இழந்தார்கள்.
அடுத்ததாக அகதி முகாம்களில் பெண்கள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளது. தொழிலை இழந்த ஆண்கள் அல்லது ஆண் துணையே இல்லாத குடும்பங்கள் பெரும்பாலும் அகதிமுகாம்களில் நிவாரண உதவிகளை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள பெண்களே தமது குடும்ப சுமையை முற்று முழுதாகத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அகதி முகாம் வாழ்க்கையில் பெண் ஒருவர் இப்படிச் சொல்கிறார், தனது குடும்பம் கணவன், 3 பிள்ளைகள், கணவனின் தாய், தாயின் தங்கை, கணவனின் தந்தை என்ற 8 பேரைக் கொண்டிருக்கிறது. இடம்பெயர்ந்து அகதிமுகாமுக்கு வருவதற்கு முன்னர் நாம் ஒரு சிறு கடையை எமது வீட்டிற்கு அருகாமையிலேயே நடத்தி வந்தோம். அந்தக் கடையின் வருமானம் எமது குடும்பத்திற்கு சாதாரண நிலையில் போதுமானதாக இருந்தது. 6 வருடங்களுக்கு முன்னர் அந்த நிலை மாறத் தொடங்கியது, யுத்த ஓய்வு, யுத்தம் மாறி மாறி வந்து, கட்டுப்பாடற்ற பிரதேசத்திலிருந்து பொருட்களைக் கொண்டுவருவதற்கு சோதனைகளும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகமாகி யுத்தத்திற்கான கட்டாய வரிப்பணமும் நாம் செலுத்த வேண்டியேற்பட்டது. வரிப்பணத்தை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடையிலுள்ள முதலீட்டை எடுக்கத் தொடங்கி கடைசியில் அந்தக் கடையையும் மூடியவுடன் இடம்பெயர்ந்து வந்துவிட்டோம். இங்குள்ள இட நெருக்கடியை சமாளித்து வயதான மாமா, மாமியைக் கவனிப்பது முதல் பிள்ளைகள் தீயவர்களிடம் அகப்படாமல் கண்காணிப்பது, அவர்களைக் கல்வி கற்கத் தூண்டுவது வரை எல்லாவற்றையும் நானே கவனித்துக் கொள்கிறேன். எனது கணவர் வருமானம் அற்ற நிலையில் மனம் உடைந்தவராகக் காணப்படுகிறார். பொறுப்பு முழுவதையும் எனது தலையில் போட்டுவிட்டு அவர் ஒரு மூலையில் படுத்துறங்குவார். அவரைப் போல் என்னால் ஓய்வெடுக்கக் கூட முடியாது. அகதி முகாமின் வசதிகள் பற்றித் தெரிந்தது தானே, அந்த நெருக்கடிக்குள் உடைகளைத் துவைப்பதோ குளிப்பதோ சமையல் செய்வதோ எல்லாவற்றிற்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்து சமாளிக்க வேண்டியுள்ளது. யுத்தம் கொடுத்த இந்த அவல வாழ்க்கையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் அகதி முகாம்களில் பெண்கள் காத்திருக்கிறார்கள்.