Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தின் அகோர முனைப்பும் அரசியல் தீர்வின் மறுப்பும் : சண்முகம்

வன்னிப் பெருநிலப் பரப்பின் கிழக்கே முல்லைத்தீவின் புதுக்குடியிருப்புக்கு அப்பால் இலங்கை ராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான கடுஞ் சமர் இடம்பெற்று வருகிறது. வன்னியின் சகல பிரதேசங்களில் இருந்தும் பின்வாங்கிச் சென்ற புலிகள் இயக்கம் தனது கடைசி நிலையாகப் புதுக்குடியிருப்பிற்கு அப்பாலான சிறு நிலப்பரப்பை வைத்திருக்கிறது. இப் பகுதியோடு அண்டியதாகவே அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள பாதுகாப்பு வலயம் இருந்து வருகிறது. இது முல்லைத்தீவு நகருக்கு வடக்கே வட்டு வாய்க்காலில் இருந்து சமுத்திரக் கரையோடு புதுமத்தாளன் பகுதிவரையான 12 கி.மீ. நீளத்தையும் இரண்டு கி.மீ குறைவான அகலத்தையும் கொண்ட நிலப்பரப்பாகும். இதனை 20 சதுர கி.மீ. பரப்பளவு என்றே கூறப்படுகிறது. இதன் முக்கியத்துவமும் சோகமும் என்னவென்றால் இச் சிறிய நிலப் பகுதியில் தான் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் இரண்டு லட்சத்திற்கும் இடைப்பட்ட மக்கள் அவலங்கள் மத்தியில் வாழ்வோடும் சாவோடும் வாழ்ந்து வருகிறார்கள். இப் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் இயக்கமும் இருந்து வருகிறது. அதனால் இங்கு இருக்கும் மக்களைத் தமது பாதுகாப்பிற்கான மனிதக் கேடயங்களாகப் புலிகள் இயக்கம் பயன் படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றம் சாட்டி வருகிறது. இதனை ஐ.நாவின் முகவர் அமைப்புகளும் தமது அறிக்கைகளில் உறுதிப்படுத்தி உள்ளன. அத்துடன் இப் பாதுகாப்பு வலயங்களில் இருந்து தப்பி வந்த மக்களும் தகவல்களாகக் கூறியுள்ளனர். மக்களை வெளியேற விடாது தடுத்து வருவதுடன் அதனையும் மீறி வெளியேறியோர் மீது துப்பாக்கிப் பிரயோகஞ் செய்த சம்பவங்களையும் அம் மக்கள் கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் மறுத்து வரும் புலிகள் இயக்கம் மக்கள் அங்கு விரும்பியே இருந்து வருகின்றனர் என்றே கூறி வருகின்றது. எவ்வாறாயினும் அரசாங்க ராணுவம் அங்குள்ள மக்களை வெளியேற்றி நலன்புரி முகாம்களுக்கு கொண்டு செல்லவே முற்படுகிறது. அதே வேளை, அம் மக்களைக் கட்டாயப் படுத்தி அங்கு வைத்திருப்பதன் மூலம் கடலுக்குள் மீன்கள் போன்று தம்மைத் தக்க வைத்துக் கொள்ளப் புலிகள் இயக்கம் முயன்று வருகிறது. இத்தகைய இருதலைக் கொள்ளி நிலைக்குள்ளேயே இரண்டு லட்சம் மக்கள் தினம் தினம் செத்துப் பிழைத்த வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்.

இப் பாதுகாப்பு வலயத்தின் மீது சுடுகலன்கள் கொண்ட தாக்குதல் நடாத்தக் கூடாது என்பதாலேயே சுடுநிலை அற்ற வலயம் ( (No Fire Zone) என அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கு எறிகணை வீச்சுக்களும் பீரங்கித் தாக்குதல்களும் நடாத்தப்படுகின்றன. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். எவ்வாறாயினும் இறந்து போவோரின் தொகையும் படுகாயமடைந்து திருகோணமலைக்கும் புல்மோட்டைக்கும் அழைத்துச் செல்லப்படுகின்ற மக்களின் நிலையும் தாக்குதல்களுக்கான சாட்சியமாகின்றன. பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் வாழ்வு பதுங்குழி வாழ்வாகும். வெளியே வந்து உணவு தேடி அலையும் வாழ்வாகவும் இருந்து வருகிறது. அதே வேளை, உணவு உடை இருப்பிடம் மருந்து மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் பெற முடியாத அவலங்களுடனேயே மக்கள் வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளனர். இவ்வாறான முல்லைத்தீவின் போர்க்களத்தை அரசாங்கம் இறுதி யுத்தமாகக் கொண்டு எந்த ஒரு விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லாத யுத்த நிலைப்பாட்டையே முன்னெடுத்து வருகிறது. யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே அடிக்கடி அடித்துக் கூறி வருகிறது. அதே வேளை தற்போதைய இறுதி நிலப்பரப்பையும் அதில் கட்டாயப்படுத்தி வைத்திருக்கும் மக்களையும் கையிழந்து விட்டால் தமது இருப்பும் தொடர்ச்சியும் அற்றுப் போய் விடும் எனப் புலிகள் இயக்கம் அச்சமடைந்து சகல வழிகளிலும் எதிர்ப்பையும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதனாலேயே மீண்டும் மீண்டும் யுத்த நிறுத்தக் கோரிக்கையையும் பேச்சுவார்த்தையையும் வற்புறுத்தி வருகின்றது. தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதற்காதரவான வெகுஜன நடவடிக் கைகளை இடைவிடாது முன்னெடுத்து வருவதுடன் ஐ.நா. நபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்கப்படும் சூழலைத் தோற்றுவிக்கவும் புலிகள் இயக்கம் முழு முயற்சி எடுத்து வருகிறது. இவற்றுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் ஒவ்வொரு முனையிலும் சளைக்காது முன்னெடுத்தும் வருகின்றது.

ஏற்கனவே உருவாகிய சந்தர்ப்பங்களில் இரு தரப்பினரும் நமது நாடு நமது மக்கள் எங்களது எதிர்காலம் என்ற அடிப்படைகளில் தூரநோக்குடைய கொள்கைகளை முன்வைத்து ஒருவரை ஒருவர் நிராகரிக்காது புரிந்துணர்வுடன் செயற்பட்டிருக்க முடியும். ஆனால் இரு தரப்பினருமே இரண்டு அந்தலைகளில் நின்று தத்தமது இலக்குக்களை அடையவே முற்பட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்குமே மக்களைப் பற்றிய அக்கறை துளியளவும் இருக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழர்களின் ஆதரவோடும் ஆரம்பித்த விடுதலைப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு பின் மக்களின் மனநிலைகளை உரியவாறு அறிந்து கொள்ள மறுத்துத் தமது தனி இயக்க இருப்புக்கும் ஆதிக்கத்திற்குமான ஒன்றாக மாற்றமடைந்து கொண்ட பாதகமான வழிகளில் வழிநடக்க ஆரம்பித்தது. இதன் பாரிய எதிர் விளைவுகளை இன்று காண முடிகிறது. அதற்காகப் பேரினவாத ஒடுக்கு முறைக்கு அடிபணிந்து சென்றிருக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல. வெளிச் சக்திகளுக்கும் புலம் பெயர்ந்த வசதி பெற்ற உயர்வர்க்கத் தமிழர்களின் ஆலோசனைகட்கும் அங்கிருந்து வரும் நிதி வளங்களுக்கும் செவிசாய்த்த அளவுக்கு இங்கு மண்ணில் வாழ்ந்து போராடி வந்த மக்களின் விருப்பங்களையும் நாடித் துடிப்புக்களையும் உரியவாறு புலிகள் இயக்கத்தால் உள்வாங்க முடியவில்லை.

அதே வேளை, பேரினவாத ஒடுக்குமுறை ஆளும் வர்க்க அரசாங்கங்கள் யாவும் தமது உயர், மேட்டுக்குடி வர்க்க நலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினைக்கு குறைந்த பட்சத் தீர்வுக்குத் தானும் வரத் தயாராக இருக்கவில்லை. இன்றைய யுத்தத்திற்கும் கோர அழிவுகளுக்கும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிகளுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வின்மை தான் அடிப்படைக் காரணம் என்பதை மறைத்தும் மறுத்தும் தமிழர்களின் ஆயுத நடவடிக்கை மட்டுமே பிரச்சினைக்கு காரணம் எனக் காட்டப் பட்டது. அதன் தொடர்ச்சியாகவே மகிந்த சிந்தனை அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டி சிங்கள மக்களைத் திசைத்திருப்பக் கொண்டது. அதற்கு உதவுவது போலவே சிங்களக் குடிமக்கள் மீதான தாக்குதல்களைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்தும் வந்தது.

இன்று யுத்தம் உச்சத்திற்கு சென்றுள்ளது. இன்னுஞ் சில நாட்களிற் பயங்கரவாதம் முறியடிக்கப்படும் என்றே ஜனாதிபதியும் அமைச்சர்களும் எதிர்வு கூறி வருகின்றனர். ஆனால் அரசியல் தீர்வு பற்றி எதுவுமே கூறத் தயாராக இல்லை. ஏற்கனவே, இந்தியாவுடன் இணைந்து கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தைக் கூட மனப்பூர்வமாகவும் அதிற் கூறப்பட்டவாறான அதிகாரங்களுடனும் நடைமுறை ப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. வேடிக்கையும் விநோதமும் யாதெனில் அதே 13வது திருத்தத்தின் கீழான ஏனைய மாகாண சபைகளின் தேர்தலிலும் அவற்றின் அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் அரசாங்கம் முனைப்புக் காட்டி நிற்கும் நிலையாகும்.

மகிந்த சிந்தனை ஒற்றையாட்சியையே வற்புறுத்தி நிற்கிறது. அதன் பங்காளர்களான விமல் வீரவன்ச தலைமையிலான கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் முன்னாள் பங்காளர்களான ஜே.வி.பி.யும் அதிகாரப் பகிர்வை வன்மையாக எதிர்த்து வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பகிர்வு பற்றித் திட்டவட்டமாக எதனையும் தெரிவிக்கவில்லை. சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு என்பது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது. யுத்தத்தை முன்னெடுக்க முழு மூச்சாக உதவி வரும் இந்தியா 13வது. திருத்தத்தையே தீர்வாகப் பேசி வருகிறது. ஆனால் அதனை மகிந்த அரசாங்கம் ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டவாறே இருந்து வருகிறது. அடிப்படையில் அரசியல் தீர்வு என்பதற்கு மறுப்புக் காட்டி வரும் நிலையைத் தான் அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. இன்றைய யுத்தத்தின் மத்தியில் கூட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைத்திருக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவோ ‘சர்வதேச சமூகமோ” தயாராக இல்லை. அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக அல்லது சிவில் சமூக அமைப்புக்களும் தயாராக இல்லை. கருத்துச் சுதந்திர மறுப்பும் ஊடக அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் பேசவேண்டிய சக்திகளை மௌனமாக்கியுள்ள சூழல் அச்சத்தின் ஊடே நீடிக்கிறது.

இத்தகைய நிலையில் பயங்கரவாதம், யுத்தம், புலிகள் அழிப்பு என்பவற்றை உரத்துக் கூறிக் கொண்டு அரசாங்கம் தனது இருப் புக்கும் எதிர்காலத்திற்கும் உரிய வேலைகளைச் செய்து வருகிறது. தெற்கிலே உள்ளுரப் பூதாகரமாகி வரும் பொருளாதார நெருக்கடிகளைத் திசைத் திருப்பி வருகிறது. அதே வேளை கிழக்கில் செய்யப்பட்டது போன்று வடக்கிலும் செய்யப்போவதாக அறிவித்தும் கொள்கிறது. அங்கும் உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தல்களை வைத்து விட்டால் வடக்கு கிழக்கின் இனப் பிரச்சினை தீர்ந்து கொள்ளும் என்ற நிலையிலேயே அரசாங்கம் செயலாற்றி வருகிறது. அதற்குரிய ஆட்களை வடக்கில் தேடுவதையும் மும்முரமாக்கி உள்ளது. அதன் நோக்கிலேயே தமிழ்க் கட்சிகளை அண்மையில் ஜனாதிபதி அழைத்திருந்தார். அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு நியாயம் கூறி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாத கூட்டமோ சந்திப்போ அர்த்தமற்றது எனச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. தமிழ்க் கூட்டமைப்பினர் இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட நிலையில் இதைவிட வேறு எதைத்தான் செய்ய முடியும். ஆனால் எதிர்காலத்திற்கான ஒரு சமிக்கையை வைத்தே கடிதம் எழுதியுள்ளனர்.

இன்றுள்ள யுத்தத்தின் அகோர முனைப்பானது முல்லைத்தீவின் எஞ்சியுள்ள நிலப்பரப்பை முழுமையாக விடுவித்து விடக் கூடியதாகும். புலிகள் இயக்கத்தினை தோல்வியடையச் செய்து பயங்கரவாதம் என்பதை அழித்ததாக வெற்றிச் செய்தி வெளியிட்டு விழாக்களும் நடத்தலாம். இவை யாவும் ராணுவத் தீர்வின் பாற்பட்டதாகும். இதற்கும் நியாயமான அரசியல் தீர்வுக்கும் சம்மந்தம் இருக்க முடியாது. ஏனெனில் ராணுவத்தீர்வு ஆயுதம் ஏந்திய புலிகளோடு சம்மந்தமுடையது. ஆனால் அரசியல் தீர்வு என்பது இந்நாட்டின் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளோடும் அபிலாசைகளோடும் சம்மந்தமுடையது. கடந்த நூற்றாண்டின் 1920களின் ஆரம்பத்துடன் தோற்றம் பெற்ற தமிழின உரிமைகள் மறுப்பு நிராகரிப்புக் கொள்கை இன்று வரை விரிவுபடுத்தப்பட்டே வந்திருக்கிறது அதற்கு முற்றுப் புள்ளி வைத்து நியாயமான அரசியல் தீர்வு உறுதியானதாக முன் வைக்கப்படவும் இல்லை நடைமுறைப் படுத்தப்படவும் இல்லை. இதில் பேரினவாத ஆளும் வர்க்க முதலாளித்துவ சக்திகள் விட்ட பாரிய தவறுகள் அடிப்படையானவை ஆகும். அதே வேளை உயர் வர்க்க மேட்டுக்குடி தமிழ்ப் பாராளுமன்றவாதத் தலைமைகளும் தவறிழைத்து வந்தன என்பது மறுக்கப்படக் கூடியதல்ல. அதன் தொடர்ச்சியாக ஆயுதங்களை முதன்மைப்படுத்தி நின்ற தீவிரவாதத் தமிழர் அமைப்புகளும் கருத்தியல் நடைமுறை வழிகளில் ‘ஆதிக்கத் தமிழர்களின் ஆண்ட பரம்பரை திமிர்த்தன” அரசியலையே விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் முன்னெடுத்தும் வந்தனர். இந்த இயக்கங்கள் யாவும் உலகக் கண்னோட்டத்திலும் அரசியல் நிலைப்பாட்டிலும் சர்வதேச சக்திகளைக் கணிப்பிட்டு அணுகுவதிலும் சிங்கள மக்களை நேச சக்திகளாக்குவதிலும் சரியான வழிமுறைகளில் செல்லவில்லை.

மேற்கூறப்பட்ட விடயங்களை அரசியல் அடிப்படையாகவும் நேர்மையான மக்கள் சார்பு விமர்சனமாகவும் நோக்குதல் வேண்டும். இவை பரந்தளவில் தமிழ் மக்களிடையே விவாதிக்கப்படல் வேண்டும். சுதந்திரமான கருத்துக்களுக்கும் விவாதங்களுக்கும் மக்களிடையே ஜனநாயக ரீதியிலான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். ஆயுத கலாச்சாரம் பகிரங்கமாகவோ அன்றி மறைமுகமாகவோ முன்னெடுக்கப் படுவதை மக்கள் இனிமேலும் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது. ஒரு ஆதிக்கத்தை நிராகரித்து வேறொரு ஆதிக்கம் உருவாகுமானால் தமிழர்களுக்கு விடிவும் இல்லை, விமோசனமும் வரமாட்டாது.

எனவே தான் தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து வெகுஜன இயக்கத்தை முன்னெடுக்க முன்வரல் வேண்டும். இதில் சிங்கள ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகள் இணைய வேண்டும். அவர்களது செயற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் அதிகாரப் பகிர்வையும் வற்புறுத்துவதாக இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கு கிழக்கிற்கான சுயாட்சி வழங்கப்படுவதே உரிய அரசியல் தீர்வாக அமைய முடியும். இதுவே சமாதானமான சுபீட்சமான தேசிய இனங்களின் ஐக்கியப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்பும் பாதையிலான பயணமாக இருக்க முடியும்.

Exit mobile version