உரிமையுடன் வாசகர்களுக்கு,
எப்படி எதிப்புக்கள் எழுகின்றன யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்கள் என்று நாடிபிடித்துப் பார்ப்பதற்காகவே தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டதும் அதனைப் பின் தொடர்ந்த மிரட்டல்களும் கொலைகளும்.
யாழ்ப்பாணத்தில் திருட்டுக்களும் கொள்ளைச் சம்பவங்களும் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துள்ளன. இதனை நடத்துபவர்கள் விடுதலை செய்யப்ப்பட்ட முன்னை நாள் புலிகளே என திட்டமிட்டுச் செய்தி பரப்ப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரச அதிபரும் ராஜபக்ச குடும்பத்தின் அடிமை விசுவாசியுமான இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அரச படைகள் முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அறிக்கை விடுக்கிறார்.
பத்திரிகைகள் அறிக்கைகளைத் தாங்கி வெளிவருகின்றன. விடுதலை செய்யப்பட்ட புலி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் அரச எதிர்ப்பாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.
பல இடங்களில் கடத்தல் கொள்ளை போன்றவற்றை அரச படைகளும் அவற்றின் துணைப்படைகளும் திட்டமிட்டு நடத்தி வருகின்றன. அவற்றை மேற்கொள்ளுவோர் என அரச எதிர்ப்பாளர்களைக் கொலை செய்கின்றனர். தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. மின்னஞ்சல்கள் வடிகட்டப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் அரசின் அதிகாரம் தாண்டவமாடுகின்றது. மக்கள் பயப்பீதியில் வாழ ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு மாதகாலம் பயங்கர இருளுக்குள் வாழ்வதான உணர்வையே ஏற்படுத்துகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஹூல் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது போல ஏனைய எல்லா நிறுவனங்களிலும் அரசின் நேரடியான ஏஜண்டுகள் நியமிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாகக் கல்விக்கூடங்களில் மூலைக்கு மூலை உளவாளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. அரசிற்கு எதிரான பேசுகின்ற எல்லோரையும் பின் தொடர்கிறார்கள். தேனீர்க் கடையொன்றில் புத்தர் சிலைக்கு எதிராகப் பேசிய மூவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றிற்கான பின்னணியாக பாரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றை நடத்துவதற்கான தயாரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஊகங்கள் நிலவுகின்றன. ஏற்கனவே வடக்கின் வாக்காளர் பட்டியலிலிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுவிட்டனர். குறுகிய கால எல்லைக்குள் அனைவரையும் பட்டியலில் பதியுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். அந்தப்பதிவு முடிந்ததும் இங்கு மக்கள் தொகை போதாது என்ற காரணத்தை முன்வைத்து சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்துவதே அரசின் நோக்கம் எனப் பரவலாகக் கருத்து நிலவுகிறது.
அதற்கான முன்னறிவிப்பே கொலைகள், கடத்தல்கள் மிரட்டல்கள் எல்லாம். உருவாகக் கூடிய எதிர்ப்புக் குரல்களை நசித்துவிட்டால் தாம் எண்ணியபடி செயற்படலாம் என்பதே இவர்களின் நீண்ட காலத் திட்டம்.
அதன் திடுட்டுத் தனமான தந்திரோபயமாக குறறச் செயல்களை அவர்களே புரிந்துவிட்டு அரச எதிப்பாளர்கள் மீது பழி போட்டு, அவர்களைக் கைதுசெய்து சிறையிலடப்பதும், மக்கள் அங்கீகரத்துடன் அவர்களைக் கொலைசெய்வதும் என ஒரு நாடகம் அரங்கேற்றப்படுகிறது.
இங்கிருக்கும் ஊடகங்கள் இவை பற்றிப் பேச முடியாமல் முடக்கப்பட்டுள்ளன. ஊடக வன்முறைகள் எல்லை தாண்டியுள்ளன. உலகம் இன்னொரு அழிப்பையும் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?