Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்.
: புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி பங்கேற்பு

சர்வதேச மனித உரிமைகள் தினமான 10.12.2011 அன்று யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து நிலையம் முன்பாக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கூடி நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் அமைப்பு ஏற்பாடு செய்த இவ் வீதி ஆர்ப்பாட்டத்தை தடுக்க பெருந்தொகையான பொலிஸார் வீதிச் சோதனை, ரோந்து என மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன் ஏற்பாட்டுக் குழவினரையும் உரிய இடத்திற்கு வராது தடுத்தும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றையும் மீறி பேரூந்து நிலையம் முன்பாக காணாமல் போனோரின் பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் உட்பட சுமார் ஐந்நூறு பேர் வரை ஒன்று கூடினர். இவர்களில் இருநூறு பேர் வரை பெண்களாவர். காணாமல் போனோரின்; படங்களுடனும் அவர்களது உறவுகள் குளரி அழுத காட்சிகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்யும் அளவுக்கு காணப்பட்டது.
ஆர்ப்பாட்டம் பதினொரு மணியளவில் தொடங்கி பன்னிரெண்டரை மணிவரை நடைபெற்றது. ‘காணாமல் போனோரின் விபரங்களை வெளியிடு’, ‘மறைத்து வைத்திருப்போரை வெளியே எமக்குக் காட்டு’, ‘அரசியல் கைதிகளை உடனே கைது செய்’, ‘மகிந்த அரசே மனித உரிமைகளை மிதிக்காதே’, ‘மகிந்த அரசே தாய்மாரின் கண்ணீருக்கு பதில் கூறு’, ‘ஐக்கியப்பட்ட மக்கள் போராட்டமே ஓரே வழி’ போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முழக்கமிட்டனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்ஸிச லெனினிசக் கட்சியினர் பெருந்தொகையில் வடப்பிராந்திய செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் மற்றும் வடபிராந்தியக் குழு உறுப்பினர் தோழியர் சந்திரா நவரட்ணம் ஆகியோர் தலைமையில் பங்கு கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஏற்பாட்டாளர் தலைமையில் கலந்துகொண்ட கட்சிகள், அமைப்புக்கள் சார்பில் கருத்துரைகளும் இடம்றெ;றன. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச வெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
பொலிஸ் கெடுபிடி அன்றைய தினம் முழுவதம் யாழ் மாவட்டம் முழுவதும் இருந்து வந்தது. புலனாய்வுத்துறையினர் பல்வேறு இடங்களிலும் நின்று தகவல்களை எடுத்ததுடன் கண்காணிப்புக்களிலும் ஈடுப்பட்டனர். இத்தனைக்கும் மத்தியில் காணாமல் போனோரின் உறவுகள் உறுதியுடனும் துணிவுடனும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமை வெகுஜனப் போராட்டப் பாதைக்கு நம்பிக்கையும் வலுவும் சேர்ப்பதாக அமைந்திருந்தது.

Exit mobile version