ஆளும் அரசுகளின் முழுமையான ஆதரவோடும் பங்களிப்போடும் உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இந்த நிறுவனங்கள் தமது நாட்டு மக்களையே உளவு பார்க்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான நிறுவனங்களுக்காகப் உலகம் முழுவதும் போரைக் கட்டவிழ்த்துவிட்டு கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவிக்கும் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள் அதே நிறுவனங்களுடன் இணைந்து தமது சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்க்கின்றன.
உலகின் ஏகபோக முதலாளித்துவ நாடுகள் தம்மைச் சுற்றி இரும்புத் திரை ஒன்றை எழுப்பியுள்ளன. சாமான்ய மனிதன் அறிந்துகொள்ளத்தக்க நாளாந்த தகவல்களைக் கூட தமது இரும்புத்திரைக்குள் பூட்டிவைத்து சர்வாதிகாரச் சிறை ஒன்றை அவை எழுப்பியுள்ளன. இந்தத் திறந்தவெளிச் சிறைக்குள் தமது அடிப்படை உரிமைக்காகப் குரல்கொடுக்கும் அனைவரையும் உளவுபார்த்துக் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை இந்த அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.
மிகவும் பலம் மிக்க பல்தேசிய வியாபார நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், இராணுவம், அதிகாரஅமைப்பு போன்ற அனைத்தும் இணைந்த ஆளும் அரசுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் போராட முனையும் அனைவரைம் முளையிலேயே அழிக்கும் கண்காணிப்புப் பொறிமுறை ஒவ்வொரு மனிதனையும் திறந்தவெளிச் சிறைக்குள் பூட்டிவைத்திருக்கிறது.
போராடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் கூட்டம் ஐரோப்பாவில் உருவாகி வருகின்றது. அரசுகளைப் பொறுத்தவரை அவர்களை அழிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் வந்தடைந்துள்ளன.
இவை அனைத்தையும் உடைத்துக்கொண்டு மக்கள் போராடத் தலைப்படுகிறார்கள். தம்மை ஆளும் முதலாளித்துவ அரசுகள் தமக்கானவை அல்ல, மில்லியன்களைக் கொள்ளையிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கானவை என மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.’ஒளிந்து கொள்வதற்கு இடமில்லை’ என்ற தலைப்பில் கிளென் கிரீன்வால்ட் எழுதிய நூலில் ஸ்னோடென் வெளியிட்ட இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.