Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மே பதினெட்டு : ரமேஷ் சிவரூபன்

மே முதலாம் திகதி உலகத்தொழிலாளர்களின் உரிமைக்குரலாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டாடப்படுவது போன்று இலங்கையில் மே பதினெட்டும் தற்போது முக்கிய தினமாக்கப்பட்டுவிட்டது.

மே மாதம் பதினெட்டாம் திகதி வன்னி மண் மீது சிங்கள ஆயுதப் படைகள் சீனா இந்தியா உட்பட்ட உலக நாடுகளின் உதவியுடன் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறியாட்டம் ஆடி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டதாக எண்ணிக்கொண்டு ஓராண்டுப் பூர்த்தி வெற்றிவிழாக்களைக் கொண்டாடுவதற்கு ஆடம்பரமாகத் தயாராகி வருகின்றது.

ஆனால் ஏதிலிகளாக்கப்பட்ட வன்னி வாழ் தமிழர்களின் அடிப்படை வாழ்வுரிமைகள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. உலக நாடுகள் தமிழர்களின் வாழ்வுக் கட்மைப்புகளுக்காக வழங்கும் நிதியாதாரங்களும் மகிந்த கும்பலால் ஏப்பமிடப்படுகின்றன. தமிழர் மற்றும் இஸ்லாமிய மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களும் வயல்களும் மீன்பிடி உரிமைகளும் அபகரிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் சிதைக்கப்படுகின்றன. இதை சிங்கள அரசுக்கு துதி பாடும் தமிழ்த்; தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்பவர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கான இரைகள் கிடைத்து விடுகின்றன. வடக்கில் தமிழ்ப்பெண்கள் வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தல்களுக்கு இராணுவத்தினராலும் சில தமிழ்க் குழுக்களாலும் உட்படுத்தப்படுவது தொடர்கதையாகின்றது. கடத்தல்கள்; கப்பம் கோருதல் என்பனவும் தினசரி நடவடிக்ககைகளாகி விட்டன.

இக் குற்றங்கள் குறித்து யாரிடம் முறையிடுவது என்பதுவும்அம் மக்களுக்குத் தெரியவில்லை. வேலிகள்தானே பயிர்களை மேய்கின்றன. இறுதி யுத்தத்தில் அகதிகளான மக்களுக்கு இருப்பிட வசதிகளை அமைத்தத் தர மறுக்கும் அரசு தமிழர் நிலங்களில் புத்தர் கோவில்களை அமைப்பதில் வேகம் காட்டி வருகின்றது.தனது குடும்பத்தினை முன்னிலைப் படுத்துவதிலேயே மகிந்த ராஜபக்ச முனைப்புக் காட்டி வருகின்றார். சிங்கள

அடித்தட்டு மக்களின் வாழ்வு பொருளாதார நசிவுகளுக்கும் எந்த விதமான தீர்வுகளோ திட்டங்களோ இன்றைய அரசிடம் இல்லை. ஆனால் இந்த உண்மையை சிங்களப் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டுவிட முடியாத வகையிலே அவர்களை இனவெறிக்குள் தள்ளி மயக்கி வைப்பதற்காகவே தமிழர்களை வெற்றி கொண்டதான விழாக்கள் ஆடம்பரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இவ் விழாக்களில் கலந்து கொள்ளப் பொகும் தமிழர் தலைமைகளையும் தமிழ் மக்கள் அவதானிக்கத்தான் போகின்றார்கள். அரசாங்கத்தின் மேற்பூச்சு வேலைகளையும் சிங்கள மக்களும் ஒரு காலத்தில் புரிந்து கொள்ளத்தான் போகின்றார்கள். இனியும் ஒரு யுத்தத்துக்கு வித்திட்டு சிங்கள தமிழ் இளமைகளை பலியிடவே இன்றைய மகிந்தவின் தலைமை தயாராகி வருகின்றது. ஏனென்றால் யுத்தம் நடந்தால்தானே அவர்களால் தமது பிழைப்பை நடாத்த முடியும்.

தோற்றுத்தான் போவோமோ ?
 
அழகிய காலைப் பொழுதும்
பாடும் குயில்களும்
நீரோடைகளின் குளிர்மையும்
தலையாட்டும் கதிர்களின் நெருக்கமும்
பொய்யறியாத உழைப்பும்
புன்னகை சிந்தும் மழலையின் அணைப்பும்
மாலை விளையாட்டுக்களும்
தசைப் பெருவெளிகளில்
திரண்டோடும் வியர்வை நதிகளும்
எட்டிப் புன்னகைக்கும் நிலவின் மோகனமும்
மனமொருமித்த காதலின் தகிப்பும்
இரு பக்கமும் வெற்றி பெறும் புணர்வுப் போரும்
மகிழ்வின் உச்சத்திலான விடுதலையின் பாடல்களும்
 
எல்லாமும்
வன்பறிப்புக்குள்ளாக்கப்பட்ட
எம் மக்களின் கதையை
மறந்துதான் போவோமோ?
 
வாழ்வும் மூச்சும்
ஒரு சேர முடக்கப்பட்ட பொழுதுகள்
காதலாகிக் கசிந்து
உடல் மொழி பேசி
உளமகிழ்ந்து வாழ்ந்த
வசந்த காலப் பட்டாம் பூச்சிகளின்
சிறகொடிக்கப்பட்ட தினங்கள்
கிட்லரின்  கொலைவெறி
எத்தகையது என்பதை
மகிந்தவின் படைகள்
நிகழ்த்திக் காட்டிய தருணங்கள்
காந்தியின் அகிம்சை
இந்தியாவில் இல்லை
அது இறந்து விட்டது என்பதனை
உலகுக்கு  பாரதம்
முரசறைவித்த வேளைகள்
 
சித்தார்த்தனின் சித்தாந்தங்கள்
சிங்கள வெறித்தீயில்
எரிந்த பொழுதுகள்
புத்தனின் தத்துவங்கள்
மொத்தமாகப் புதைக்கப்பட்ட நேரங்கள்
 
மனித நாகரீகம்
என்கின்ற வார்த்தைக்கு
சிங்களம் சிதை மூட்டிய காலங்கள்
 
எஞ்சியிருக்கும் எம் உறவுகளே
மறந்து விடாதீர்கள்
 
உழுது பயிரிட்டு
வாழ்ந்த நிலங்களில்
பிணங்களாய் எம்மை
விதைத்துச் சென்றார்கள்.
 
புல் நுனிகளில் பூத்த
பனிமலர்கள் பறித்து
விளையாடிய எமது குழந்தைகளை
குண்டுகளால் சிதறடித்தார்கள்
 
எங்கள் பெண்களை வன்புணர்ந்து
தங்கள் பாரம்பரியப் பண்பாட்டை
அகிலமெங்கும் அறிவித்தார்கள்.
 
உறவுகளே மறந்து விடாதீர்கள்
 
எத்தர்கள் எம்மை
எட்டி உதைத்தாலும்
தோற்றுத்தான் போவோமா நாம்?

சிவரூபனின் ஏனைய படைப்புக்கள்:

இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன்.

https://inioru.com/?p=11602

வசந்தராணி என்றொரு என் தோழி!: ரமேஷ் சிவரூபன்

https://inioru.com/?p=11295

Exit mobile version