Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேற்குவங்கத்தில் மம்தா கேரளத்தில் பினராயி விஜயன்!

இந்தியாவில் அஸ்ஸாம்,மேற்குவங்கம், கேரளம், தமிழகம், புதுச்சேரி என நான்கு மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற முடிவுகள் வரவிருக்கும் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் விதித்திருந்த தடை இன்று மாலை 7 மணியோடு முடிவதால் முடிவுகள் வெளியிடப்பட்டன. சி வோட்டர்ஸ் ரிபப்ளிக் டிவி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகளோடு வேறு சில தனியார் தொலைக்காட்சிகளும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தை பொருத்தவரை பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. கேரளத்தில் இடது முன்னணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கிறது கருத்துக்கணிப்புகள்.
இதில் கவனிக்கத் தக்க கருத்துக்கணிப்புகளாக நாம் கொண்டால் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் ஏபிபி யும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 152 முதல் 164 இடங்கள்வரை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என கூறுகிறது. பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்ற அணி, 109 முதல் 121 இடங்கள் வரை பெறலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக மேற்குவங்க மாநிலத்தில் வலுவான எதிர்க்கட்சியாக அமரும் என தெரிவிக்கிறது இந்த கருத்துக்கணிப்பு.
ரிபப்ளிக் -சி.என் எக்ஸ் நிறுவனங்களின் கருத்துக்கணிப்பில் பாஜக 128 முதல் 138 இடங்கள் வரை வெல்லும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் 128 முதல் 148 இடங்கள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கிறது. அதே போன்ற சி.என்.என் நியூஸ் 18 கருத்துக்கணிப்பும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கிறது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி அதிக பட்சம் 25 இடங்களில் வெல்லும் என்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி என்று அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது.ஏபிபி – சி ஓட்டர் கருத்துக் கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 58 முதல் 71 இடங்களில் வெல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 53 முதல் 66 இடங்கள்வரை கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் காங்கிரஸ் ஒருவர் மாற்றி ஒருவர்தான் ஆட்சியைப் பிடிப்பார்கள். ஆனால் இம்முறை இடது முன்னணி ஆட்சியை தக்க வைக்கிறது.இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு, இடதுசாரி எல்டிஎஃப் கூட்டணி, 104 முதல் 120 இடங்களில் வெல்லலாம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20 முதல் 36 இடங்களில் வெல்லலாம் என்றும் கூறுகிறது.
ரிபப்ளிக் டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு, எல்டிஎஃப் அணிக்கு 72 முதல் 80 இடங்களும் காங்கிரஸ் அணிக்கு 58 முதல் 64 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் அதிமுக பாஜக கூட்டணி பெரும்பான்மை பெரும் என்கிறது கருத்துக்கணிப்பு.

Exit mobile version