ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தீவின் மொத்த சமூகமுமே மாற்றத்திற்கான குறிப்பான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதுமே மாற்றங்களை எதிர் நோக்கும் புதிய வரலாற்றுக் கட்டத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு தடவையும் வரலாறு மாற்றங்களுக்கான திரும்பல் புள்ளிகளைச் சந்திக்கும் போதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது நலனை உறுதிப்படுத்துவதற்காகப் போர் முனைக்குச் சென்றடைவதைக் காணலாம். ஒடுக்கப்பட்டவர்களும், உழைக்கும் வர்க்கமும் ஒன்று சேர்வதை நிர்மூலமாக்கும் அத்தனை ஆயுதங்களையும் ஏகாதிபத்தியங்கள் தயார் நிலையில் வைத்திருக்கின்றன. ஒரு புறத்தில் உலகத்தை மறுபடி ஒழுங்கமைப்ப்தற்கும் அதனூடாக ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியை அழிப்பதற்கும் அரசியல் வழிமுறைகளைத் தயார் செய்து கொள்கிறார்கள். அவற்றை அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களுடன் பரிசோதித்துப் பார்க்கிறார்கள்.
நாசகார உளவுப் படைகளும், ஏகபோகங்களின் அடியாட்களும் கூட புரட்சிகர முழக்க்ங்களோடு மக்கள் முன் வருகிறார்கள். அழிவிற்காக இவர்கள் ஏவப்படுகிறார்கள். மத்திய கிழக்கில் ஆரம்பித்து அமரிக்கா வரையான பல எழுச்சிகளை ஏகாதிபத்தியங்களே தயார் செய்து நடத்தியிருக்கின்றன. இவற்றையெல்லாம் விரல்விட்டெண்ணக்கூடிய சில சமூகவிரோதிகளே திட்டமிடுகிறார்கள்.
இவர்களுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் இணைவு என்பதைத் திட்டமிடும் அர்பணமும் தியாகமும் சிதைவுகளிலிருந்து மீண்டெழுவதற்கு அவசியமானது.
ஏழை நாடுகளில் சுரண்டிய பணத்தின் ஒரு பகுதியை ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு சமூக உதவித் தொகையாகக் கொடுத்து அவர்களை மௌனிக்க வைத்திருந்த மேலைத் தேச அரசுகள் இனிமேலும் உதவித்தொகை வழங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மூலதனத்தை முழுவதுமாகச் சுவீகரித்துக்கொண்ட பல் தேசிய நிறுவனங்களே ஆட்சி செய்கின்ற நிலை உருவாகிவிட்டது. மூலதனச் சொந்தக்காரர்களின் சாம்ராஜ்யங்களாக கிரேக்கமும், இத்தாலியும், போத்துக்கல்லும், இஸ்பானியாவும் மாற்றைமடைந்துவிட்டன. அரசுகளைப் பிணை எடுத்துக்கொண்ட பல்தேசிய நிறுவனங்களும் வியாபாரிகளும் ஆட்சி செலுத்தும் பாசிசம் ஏகாதிபத்திய நாடுகளின் உட்புறத்தில் உருவாக ஆரம்பித்துவிட்டது.
செக்கன்களில் கணக்கிட்டுவிடக் கூடிய ஒரு சில பண முதலைகளுக்காக வறிய நாடுகளின் மக்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள்.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதி ஒரு சில நாட்களுக்கு உள்ளாகவே அழிக்கப்பட ஆதரவையும் ஆயுதங்களையும் வழங்கிய மக்கள் விரோதிகளின் அதிகார உலகின் வாசற்படியிலிருந்து மேதினத்தைச் சந்திகிறோம்.
எட்டுமணி நேர வேலைக்கான உரிமையைப் பெற்றுகொண்ட தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியை அழிவுகளுக்கு மத்தியில் விழாவெடுக்கக் கற்றுக்கொண்டுள்ளோம்.
“பரம்பரை” இடதுசாரிகள் செவ்வணக்கத்தையும், புரட்சிகர வணகத்தையும் உறங்கப்போவதற்கு முன்பதாகத் தெரிவித்துக் கொள்வர்.
எது எவ்வாறாயினும் மேதினம் ஒரு நாள் அதன் உள்ளர்த்ததோடு உலக மக்களால் தொழிலாளர் எழுச்சி தினமாக உணர்ந்துகொள்ளப்படும்.
-இனியொரு