Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேட் இன் தமிழ்நாடு என்று வர வேண்டும் – ஸ்டாலின் உரை!

“மேட் இன் இந்தியா’ என்பதுபோல ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற அடிப்படையில் இனி நாம் பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்” என்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டிற்கான ஏற்றுமதிக் கொள்கையை வெளியிட்டதில் பெருமையடைகிறேன். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு தலைமைச்செயலாளர் தலைமையில் விரைவில் அமைக்கப்படும்” போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேசியவை, பின்னர் “ஏற்றுமதியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு வழங்கும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்து உள்ளது. உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும் உலகம் நம்மை நோக்கி வர வேண்டும்.

இந்தியாவிலேயே ஏற்றுமதியில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், ரூ.1.93 லட்சம் கோடி ஏற்றுமதியுடன் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் இருந்து வருகிறது. தொழில்துறையிலும் தமிழ்நாடு முன்னணியிலேயே இருக்கிறது. அகில இந்திய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு 8.97% என இருக்கிறது. மோட்டார் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகுத்து வருகிறது. ஆடை மற்றும் அணிகலன் ஏற்றுமதியில் 58%, காலணி ஏற்றுமதியில் 45% பங்களிப்பு, மின்னனு சாதனங்களில் ஏற்றுமதியில் 25% பங்களிப்பு என்று தமிழகம் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த வெற்றி, ஒவ்வொரு தமிழனின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியோடு நாம் திருப்தி அடைந்துவிடக்கூடாது. இந்த விழுக்காடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகிக்கொண்டே செல்ல வேண்டும். 

தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே வியாபாரிகள் இனி உலக வர்த்தக சந்தையின் சூழலுக்கேற்ப மதிப்புகூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ‘மேட் இன் இந்தியா’ என்பது போல இனி ‘மேட் இன் தமிழ்நாடு’ என்றும் வரவேண்டும். தற்போது காஞ்சிபுரம், ஆரணி, சின்னாளப்பட்டி சேலைகள் உட்பட புவிசார் குறியீடுபெற்ற பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி நீக்கப்பட்டுள்ளதால் அத்துறையில் புதிய முதலீடுகள் வரத்தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் மின்துறை சார்ந்த பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version