Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மெல்லிசைத்தூதன் P.B.ஸ்ரீனிவாஸ் – T.சௌந்தர்

” தென்னங்கீற்று ஊஞ்சலிலே

தென்றலில் நீந்திடும் சோலையிலே “

மிகவும் அபூர்வமான இசை.அபூர்வமான படத்தில் ஒலித்த பாடல். இந்த அபூர்வமான பாடலைப் பாடியவர்களின் குரல்களும் அன்றைய நாளில் அபூர்வமாகப் பாடிக்கொண்டிருந்த குரல்களே !!!

ஆண்குரலில் வண்டின் ரீங்காரம் ஒலித்தது.உற்றுக்கேட்டாலே இனிக்கும் வண்டின் இனிய ரீங்காரம் போல் தான் அந்த குரலிலும் அதிசயக்கத்தக்க அதிர்வு இருக்கும்.பெண் குரலிலும் மென்மை தவழ்ந்தது.இன்று கேட்பவர்களையும் வசீகரிக்கின்ற பாடல் அது.

அந்தப் பாடலை எழுதியவர் ஜெயகாந்தன் . இசையமைத்தவர்: எம்.பி.ஸ்ரீநிவாசன் ,அந்த படத்தின் பெயர் ; பாதை தெரியுது பார் [1959].

இந்த ரீங்காரத்தை தான் அந்தப் பாடகரை அறிமுகப்படுத்திய அந்த படத் தயாரிப்பாளரும் கேட்டிருப்பார் போலிருக்கிறது .அதனால் தான்

” இவன் பாடத் தேவையில்லை, இவன் செய்யும் ம் ..ம் ..ம் ..ம் .. என்பதையே கேட்டுக்கொண்டிருக்கலாம் “என்றார் தயாரிப்பாளர்.

அந்த மென்மையான, ரீங்கார குரலுக்குச் சொந்தகாரர் வேறுயாருமல்ல, பலகோடி மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து சமீபத்தில் மறைந்த P.B.ஸ்ரீநிவாஸ் [ 22 . 09 . 1930 – 17. 04 . 2013 ] அவர்களே.

1953 ல் ஜாதகம் படத்தில் அறிமுகமாகி ” சிந்தனை ஏன் செல்வமே ..” , ” மூட நம்பிக்கையாலே கேடு விளையும் மனிதா..” என்ற இரண்டு பாடல்களைப் பாடினார்.அந்தப் பாடல்களின் ஹிந்தி வடிவத்தை முகம்மது ரபி பாடினார்.

1959 இல் உடுத்தா சரோஜினியுடன் ” ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” [ மக்களை பெற்ற மகராசி ] , ஜிக்கியுடன் ” கம கமவென நறுமலர் மனம் வீசுதே” [ சமயசஞ்சீவி ] , எஸ்.ஜானகியுடன் ” மலரோடு விளையாடும் தென்றலே வாராய் ” [ தெய்வபலம் ] , சூலமங்கலம் ராஜலக்ஷ்மியுடன் ” நான் பாட நீ ஆடு கண்ணே ” [ மாலா ஒரு மங்கல் விளக்கு ] , சூலமங்கலம் ராஜலக்ஷ்மியுடன் ” கன்னிப்பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ ” [ இந்திரா என் செல்வம் ] போன்ற நல்ல மெல்லிசைப்பாங்கான பாடல்களை பாடினார்.

உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்த காலத்தில் மென்மமையாகவும் பாடி இனிமை சேர்க்கலாம் என்று நிரூபித்துக் கொண்டிருந்தவர்களான கண்டசாலா , ஏ.எம்.ராஜா போன்ற ஜாம்பவான்களின் வரிசையை இவர் வருகையும் அலங்கரித்தது.

மெதுவான இவரது வருகையும் . மெல்லிசை இயக்கமும் 1960 களில் ஒன்று கலந்தன.மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,திரை இசைத்திலகம் கே.வீ.மகாதேவன் , ஆர்.சுதர்சனம் , ஏ.எம்.ராஜா போன்ற திறமைமிக்க இசையமைப்பாளர்கள் பலரும் இவரை தகுந்த முறையில் பயன் படுத்தி வெற்றி கண்டார்கள்.இவருடைய பாடல்கள் இதயங்களை இதமாக வருடும் இனிமை நிறைந்தவை.

” இனிமை இல்லாத இசை இசையல்ல ” என்று கூறும் அவருடைய பாடல்களில் 95 வீதமானவை இனிமைமிக்கவையே!

இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்றொரு முறை சினிமாவில் இருந்த நிலையில் ஏ.எம்.ராஜாவின் குரல் ஜெமினி கணேசனுக்கு பொருந்தும் என்ற கருத்து நிலவிய நிலையில் இவரையும் அவருக்காகப் பாட வைத்தார்கள்.ஏ.எம்.ராஜாவை ஒதுக்குவதர்க்காகத் தான் ஸ்ரீநிவாஸ் அவர்களை கொண்டுவந்தார்கள் என்ற பேச்சும் உலவியது.

மிகச் சிறந்த பாடகராகவும் , சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்த ஏ.எம்.ராஜா இசையமைத்த கல்யாணப்பரிசு, ஆடிப்பெருக்கு ,தேன்நிலவு , விடிவெள்ளி , அன்புக்கோர் அண்ணி போன்ற படங்களில் வந்த பாடல்கள் திரை இசையின் இனிமையை ஓங்கச் செய்தன. தானே சிறப்பாகப் பாடக்கூடியவராக இருந்தும் , தனக்குப் போட்டி என கருதப்பட்ட ஸ்ரீநிவாஸ் அவர்களைத் தான் இசையமைக்கும் படங்களில் பாட வைத்தார்.அவரை மட்டுமல்ல.T.M.சௌந்தரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் , திருச்சி லோகநாதன் போன்றோருக்கும் வாய்ப்புக்களை வழங்கினார்.

தனக்கு வாய்ப்புக்கள அதிகம் கிடைத்தாலும் ” ஏ.எம் ராஜா மிகச் சிறந்த பாடகர் ,அவருக்கு நான் ரசிகன் ” என வெளிப்படையாக சொல்லும் அடக்கமும் ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் இருந்தது.

மலையாளத்தில் பிரபல பாடகர் ஜேசுதாஸ் இடம் பிடிக்கும் வரை ஏ.எம்.ராஜாவும் , பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களுமே பாடி வந்தார்கள்.

மலையாளத்தில் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய

” மாமலைகளுக்கப்புரத்து மரதகப் பட்டுடுத்து
மலையாளம் என்றொரு நாடுண்டு – கொச்சு
மலையாளம் என்றொரு நாடுண்டு..”

என்ற மோகன ராகப் பாடல் மலையாளிகளை பெருமை கொள்ள வைக்கும் பாடலாக இன்றும் உள்ளது. தமிழ் ,மலையாளம் மட்டுமல்ல , அவரது தாய் மொழியான தெலுங்கு ,மற்றும் கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாடிய பன்மொழிப்பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் . குறிப்பாக கன்னட சினிமாவில் அதிகம் பாடினார்.கன்னட கதாநாயகன் ” ராஜ்குமாரின் குரல் ” என்று புகழப்பட்டவர்.

நிலை உயர்ந்த போதும் , சற்று குறைந்த போதும் சமநிலையை பேணிய கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

எனது பருவ வயதில் பல விதமான பாடல்கள் கேட்டுத் திரிந்த நேரத்தில் திடீரென பி.பி.ஸ்ரீநிவாஸ் , பி.சுசீலா பாடிய பாடல்களில் ஈடுபாடு ஏற்ப்பட்டது.அவர்கள் பாடிய பாடல்களை வரிசைப்படுத்திக் கொண்டு அவற்றை கசற்றில் பதிவு செய்வதற்கான இடத்தை [ recording bar ] தேட சில ஒலிபதிவு கூடங்களில் விசாரித்தேன்.அவர்கள் இந்த மாதிரியான பாடல்கள் நம்மிடமில்லை என்றும் ஒரு குறிப்பிடட்ட இடைத்தை சொல்லி அங்கே சென்றால் கிடைக்கும் என்றார்கள். அங்கே சென்று என்னுடைய பாடல் வரிசையை காண்பித்தேன்.

அதனைப் பார்த்த அந்த உரிமையாளர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களின் சில பாடல்களை எனக்காக ஒலிக்கவிட்டு ,என்னை பார்த்து சிரித்து , சந்தோசமா என்றும் கேட்டார்.அந்த ஒலிப்பதிவு கூடத்தில் அவர் எனக்காக முதலில் ஒலிக்க விட்ட பாடல் , நான் வரிசைப்படுத்தியிருந்த ” துள்ளி திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று ” என்ற பாடல்.

எப்படிப்பட்ட இசை! என்ன இதமான குரல்!

அந்த கூடத்தில் ஒலித்த அந்தப் பாடல் நான் ரேடியோவில் கேட்டு ரசித்த அதே பாடல தான் , இருந்தாலும் ஒலித்தரம் என்பது ஏதோ நவீன தொழில் நுட்பத்தில் செய்தது போன்றே இருந்தது.அந்தப் பாடலை கேட்டு நான் அடைந்த பரவசத்தையும் அவர் கவனித்தார்.

ரேடியோவில் ஒரு பாடலின் ஒலியமைப்பை , துல்லியத்தை முழுமையாக கேட்க முடியாது என்பதை எனக்கு முதலில் உணர்த்திய சம்பவம் அது.

பின் அந்த ஒலிப்பதிவாளர் மிக ஈடுபாடு கொண்டவராக அந்த பாடலின் ஒலிப்பதிவின் ரகசியத்தை விளக்கினார்.அந்தப் பாடல்களை , படம் காண்பிக்கப்படும் தியேட்டரில் ,நேரடியாக ,அந்த மூல வடிவத்திலிருந்து ஒலிப்பதிவு செய்ததாகக் கூறினார்.

அந்த ஒலிப்பதிவாளர் யாழ்ப்பணத்தில் ஸ்ரீதர் தியேட்டருக்கு எதிர் பக்க வீதியில் ஒலிப்பதிவு கூடத்தை வைத்திருந்தார்.மிகவும் கலா ரசனை மிக்கவர். நித்தி என்று அன்பாக அழைக்கபட்டார். சிறந்த ஒலிப்பதிவாளர். 1980 இல் யாழில் நடைபெற்ற ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சியை மிக சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்தவர்அவரே!

” இளமைக் கொலுவிருக்கும் இனிமை துணையிருக்கும் ” பாடலையும் எனக்காக ஒலிக்க விட்டார்.அதன் ரீங்காரம் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவு பரவசப்படுத்தியது.

மெல்லிசைக்குப் புதிய திசையைக் காட்டிய மெல்லிசைமன்னர்களின் காலத்தில் வசந்தமாக வந்தவர் ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

மாலையில் மலர்ச்சோலையில் – – அடுத்த வீட்டுப் பெண்
கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே – அடுத்த வீட்டுப் பெண் –
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து – பனித்திரை –
காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு –
இளமைக் கொலுவிருக்கும் – ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார்
இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மகள் –
மயக்கமா கலக்கமா – சுமை தாங்கி –
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் – நெஞ்சில் ஓர் ஆலயம் –
மனிதனென்பவன் தெய்வமாகலாம் – போலீஸ்காரன் மகள் –
நிலவே என்னிடம் நெருங்காதே – ராமு –
மௌனமே பார்வையால் – கொடி மலர்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் — போலீஸ்காரன் மகள் –
கண்படுமே பிறர் கண்படுமே – காத்திருந்த கண்கள் –

இது போன்ற எத்தனை ,எத்தனை பாடல்கள் ! நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட பாடலகள் !

” மகாகவி பாரதிக்கு ஜி.ராமநாதனின் இசை அஞ்சலி ” என்று சொல்லக்கூடிய பாடல்களைக் கொண்ட கப்பலோட்டிய தமிழன் படத்தில் , தேன் மதுரக் குரலோன் பி.பி.ஸ்ரீநிவாஸ் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய , ஜி.ராமநாதன் மோகன ராகத்தில் அமைத்த

காற்றுவெளியிடை கண்ணம்மா – உந்தன்
காதலை எண்ணி களிக்கின்றேன்

என்ற அந்தப் பாடல் , பாடிய திரு.பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்களை “விண்ணவராக “மாற்றிய பாடல்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

துள்ளித் திரிந்த பெண் ஒன்று பாடலில்

” சொல்லி வைத்து வந்தது போல்
சொக்க வைக்கும் மொழி எங்கே “

என்ற வரிகளை தடம் புரளாமல் , மிக நிதானத்தோடு அவர் பாடும் அழகே அழகு.இதைப் போன்றே அவர் பாடும் பாடல்களில் அவர் தரும் சின்ன ,சின்ன சங்கதிகள் பாடலை உயிர்ப்பிக்கும்.

அற்ப்புதமான ஓர் பாடகர் , நல்ல ஒரு கலைஞன் மறைந்து விட்டார். அது தரும் துன்பம் நம்மை வாட்டுகிறது.

எனினும் மலரோடு விளையாடும் தென்றலில் நம் இதயங்களை வருடிச் செல்ல நல்ல பாடல்களை நமக்கு விட்டுச் சென்ற , அற்ப்புதமான கலைஞனுக்கு நமது இதயஅஞ்சலிகள்.!

Exit mobile version