மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டதுடன், மக்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டதால், அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேற்று பிரச்சார நடவடிக்கைக்காக மூதூர் கிராமத்திற்குச் சென்று மக்களுன் உரையாற்றியபோது, மக்களில் ஒருவர் ‘நீங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எமது கிராமத்துக்கு வருகை தந்து ஏனைய அரசியல்வாதிகளைப் போன்றே கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். அத்துடன் கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்காக உங்களுடைய கட்சி நிதியிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவதாக தெரிவித்திருந்தீர்கள், ஆனால் உங்களால் தெரிவிக்கப்பட்ட எதனையும் நீங்கள் இக்கிராமத்திற்குச் செய்யவில்லை.
மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இங்கு வந்துள்ளீர்கள், மீண்டும் அபிவிருத்தி செய்யப்போவதாகக் கூறுகிறீர்கள். தேர்தலின் பின்னர் கிராமத்தை அபிவிருத்தி செய்வீர்கள் என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா மக்களைப் பார்த்து நீங்கள் ஏதோவொரு அரசியல்கட்சி சார்பாக தன்னைக் குழப்புவதாக தெரிவித்தார். இதற்கு மக்கள் மத்தியிலிருந்து, நாங்கள் உங்களைக் குழப்பவில்லை. உங்களால் சொல்லப்பட்ட அபிவிருத்தி வேலைகளை நீங்கள் இக்கிராமத்திற்குச் செய்தால் நாங்கள் உங்களுடன் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்திருந்தனர்.
இதன்போது, அங்கு காணொளி எடுத்த கிராமத்தவர் ஒருவரின் தொலைபேசியைப் பறித்த ஈபிடிபியினர், அதனைச் சேதப்படுத்தியுமிருந்தனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் கிராமங்களுக்குச் செல்லும் அரசியல் கட்சிகள், அங்கு மக்களிடம் கிராமத்தை அபிவிருத்தி செய்து தருவோம் எமக்கு வாக்குப் போடுங்கள் எனத் தெரிவித்துவிட்டு, தேர்தல் நிறைவடைந்ததும், அந்த மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அதற்கான பிரதிபலனை டக்ளஸ் தேவானந்தா மூதூரில் எதிர்கொண்டுள்ளார்.
அதேபோல், வடக்கில் உள்ள அரசியல்வாதிகளும் தமது வாக்குறுதிகளுக்கான பலனை விரைவில் சந்திக்க நேரிடும் என்பதே நிதர்சனம்.