முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளான் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக 671 ஏக்கர் நிலப்பரப்பினை அபகரிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளளார்.
குறித்த பிரதேசமானது மக்களுக்குச் சொந்தமான பிரதேசமாகும். தமது பிரதேசத்தை தம்மிடம் வழங்குமாறு கோரி கேப்பாப்புலவில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், வெள்ளான் முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு பிரதேசங்களையும் உள்ளடக்கியே இவ்விராணுவமுகாம் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களான வெள்ளான் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசங்கள் மர்மம் நிறைந்த பிரதேசங்களாகும்.
இறுதி யுத்தத்தின்போது இப்பிரதேசங்களிலேயே பலர் கொன்றொழிக்கப்பட்டனர். அத்துடன் சரணடைந்தவர்கள் பலரும் இவ்விடங்களிலேயே சிறிலங்கா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செ;ய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே, வட்டுவாகல், வெள்ளான் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் உள்ள 671 ஏக்கர் காணிகள் பொதுத் தேவைக்காக சுவீகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்திருந்தார்.
எனினும், இக்காணி ககடற்படையினரின் முகாம் அமைப்பதற்காகவே அபகரிக்கப்பட்டுள்ளதாக காணி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் பதிவுசெய்துள்ளது.
இருப்பினும், மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து, இப்பிரதேசம் இராணுவத்தினரால் தொடர்ச்சியான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.