புது தில்லி – இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த 35 வயது கே. முத்து வேலை பார்த்து வருபவர். அவரைக் கொடுமைப்படுத்திய உயர் அதிகாரிகளைக் கண்டித்தும், 5 ஆண்டுகளில் 5 முறை இடமாற்றம் செய்துள்ள அநீதிக்கு எதிராகவும், டெல்லி அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள 200 அடி செல்பேசி கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை கடந்த 17.8.12 அன்று துவக்கினார் முத்து.
அவரை கீழே இறக்க இராணுவம், போலீசு, தீயணைப்பு படையினர் முயற்சி செய்தாலும் அதை நிராகரித்து கடந்த ஐந்து நாட்களாக சாப்பிடாமலும் போராட்டம் நடத்தினார். இதனால் அவரது உடல்நிலை பாதிப்படைந்து மயக்க நிலைக்குச் சென்றார். கூடவே அடைமழையும் பெய்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை மீட்பு எந்திரம் மூலம் கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது உடல்நிலை தேறியதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணவ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனாலும் முத்துவின் 94 மணிநேரப் போராட்டம் இராணுவத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போலவே இராணுவத்திலும் சிப்பாய்கள், அதிகாரிகள் என்று வர்க்க வேறுபாடு துலக்கமாகவே இருந்து வருகிறது. அதிகாரிகளுக்கென்று நட்சத்திர விடுதிகளைப் போன்ற தங்குமிடங்கள், உணவகங்கள், விளையாட்டு மையங்கள், அதிக ஓய்வு, நீண்ட விடுமுறை போன்றவற்றை இந்திய அரசு அள்ளித் தருகிறது. ஆனால் கடைநிலையில் இருக்கும் சிப்பாய்க்கு இவையெதுவும் கிடையாது என்பதோடு அதிக பணிச்சுமை, விடுமுறை மறுப்பு, குடும்பத்தை பிரிந்து பல மாதங்கள் போர்க்காலச் சூழலில் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அதிகம்.
இதன் வெளிப்பாடாக சில வீரர்கள் தங்களது மேலதிகாரிகளை சுட்டுக் கொன்றிருக்கின்றனர். பலர் தற்கொலையும் செய்திருக்கின்றனர். இராணுவ வீரர்களது மன அழுத்தத்தின் விகிதம் அதிகமென்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இவற்றையெல்லாம் இந்திய அரசும், இராணுவமும் மறைப்பதற்கு முயற்சி செய்கின்றன. இந்தி சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களை அழைத்துக் கொண்டு போய் காஷ்மீரிலும், எல்லையிலும் குத்தாட்டம் போட்டு தணிக்க முயல்கின்றன. ஆனால் இந்திய ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறைக்கு பயன்படும் இராணுவம் தன்னளவில் ஒரு போதும் நிம்மதியாக இருந்து விடமுடியாது.
சமூகத்தில் நடக்கும் போராட்டத்தின் வீச்சு இராணுவத்தையும் பாதிக்கவே செய்யும். தமிழக வீரர் முத்துவின் போராட்டம் அதை உரக்கத் தெரிவித்திருக்கிறது. இனி அவரை வேலை நீக்கம் செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனாலும் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களை உலகறியச் செய்த அந்த வீரனை நாம் வாழ்த்துவோம்!
வினவு.