பெண்டாள வந்தவனின் சிண்டு பிடித்திழுத்துவந்து
சங்காரம் செய்யத்துப்பில்லை நீ
வலி தந்தோரை தோற்கடிப்பாயா
அடக்கவந்த அம்பாந்தோட்டை முன்
பெட்டிப்பாம்பாய் அடங்கி கூழைக்கும்பிடு போட்டுவிட்டு
வாசல் வந்ததும் வீராவேசப் பேச்சு
நாய்க்கும் உனக்கும் வேறுபாடில்லைக் காண்
காடுவெட்டிக் கலைத்தவனிடன் நாடுகேட்டாய்
காலைப்பிடித்தாய்
காலில் மிதிபடும் புழுவாய்
கையில் நசிபடும் பூச்சியாய் உருமாறினாய்
வீடு கொளுத்தியவனை விதானையென்றேத்தி வைத்தாய்
காடுவெட்டியதுபற்றி உனக்கென்ன கவலை
நீட்டிப்படுத்தாய் பிள்ளை குட்டி பெற்றாய்
வீடு கட்டவும் அடுப்பெரிக்கவும் உனக்கு விறகானது காடு
புதைந்தவர் என்ன எழுந்தா வரப்போறார்
வந்தென்ன கணக்கா கேட்டுவிடப் போறாரென
அவரவர் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டனர்
நான்கு வருடங்களாய் நீட்டிப்படுத்திந்தாயே
உனக்காக யார் பேசினார்
தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டாம்
எட்ட நின்றாவது ஆற்றுப்படுத்தினாரா யாராவது
அழாதே என்று எங்கிருந்தாலும் ஒரு கரம் நீண்டதா
விழுந்ததற்கு ஆயிரம் வியாக்கியானம் சொல்லலாம்
ஒற்றுமையில்லையென்பாய்
சர்வதேச ஆதரவை பெறவில்லையென்பாய்
அரசியலில் கால் பதிக்கவில்லையென்பாய்
ஒருபடி மேலே போய்
சகோதர படுகொலையென்பாய்
கொத்துக் குண்டென்பாய்
கோவணம் அவிழ்ந்ததென்பாய்
விழுந்ததற்கு ஆயிரம் வியாக்கியானம் சொல்வாய்
நான்காண்டாய் நீ
எழுந்திருக்காததற்கு என்ன சொல்லப்போகிறாய்
வருவார் என்றொரு கூட்டம் கால் நீட்டிப் படுத்திருக்கும்
தேர்தல் வென்று தாயகம் காண்போமென்ற கனவுடன் ஒரு கூட்டம்
நீட்டிப்படுத்திருக்கறாரேயொழிய
நாலாண்டுக் கூன் நிமிரும் வழிசொல்வாரில்லை
சோதிப்பிளம்பாய் இரு என்றால்
சூம்பின பழமாய் சோர்ந்து கிடக்கிறாய்
சூரன்போரென்றால் துடித்தெழுந்து ஆறுநாள் தவமிருந்து
முருகன் புகழ்பாடி குளித்து முழுகி
ஆஜானுபாகுவாய் வலம் வந்தாய்
கடவுள் வீரம் போற்றிய நீ மட்டும்
கும்பிடு பூச்சியானாய்
குறவணன் வண்டு போடு குறண்டிப்படுத்துவிட்டாய்
பெண்ணைத் தொட்டவனையே விட்டுவிட்டாய்
மண்ணைவிழுங்கினாலும் மதிகெட்டுக்கிடப்பாய் நீ
விதியென்று வீங்கிக் கிடக்கிறாய்
எழுவதற்கு எந்த முன்மொழிவும் உனக்கில்லை
சிறு அசைவு
சின்னஞ்சிறு தீப்பொறி
ஒரு புகைச்சல்
ஒன்றையும் காணவில்லை
அவர் வருவார்
அவர் வருவர்
அவர் வருவார்
ஏனடா இத்தகைய இழிவு
உடைவாளையும் வேலக்கம்பையும்
வியாபாரியிடம்; பழமிரும்புக்கா விற்றுவிட்டாய்
ரோச நரம்பை அறுத்து வீணைக்கா நாணேற்றிவிட்டாய்
போர்க்களப் புரவிகளை செக்கிழுக்கவிட்டுவிட்டாய்
மணியையும் முடியையும் விற்று
மதிமயங்கித்தான் போனாய்
கொந்தளித்தெழ முடியா உனக்கு
கோவணமெதற்கு
அவிழ்த்தெறிந்துவிட்டு படு
ஆடு மேய்ந்துவிட்டுப் போகட்டும்
அது இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன
அவர் வருவார்
அவர் பார்த்துக் கொள்வார்
அதுவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு படு
உற்றவளை
பெற்ற தாயை
மகளை
பெண்டாள யாரும் வந்தால்
கண்களை இறுக்கி மூடிக்கொள்
காதையும் பொத்திக்கொள்
புத்தூரில் பூநகரியில் நடந்தது
உன் வீட்டிலும் நடக்கும்
நீ போர்த்திப்படு
பழி வந்து சூளுமென்று கிஞ்சித்தும் கலங்காதே நீ
போரில்லைத்தானேயென்று புளுகுவாய் நீ
ஊரின்னும் உறங்காமல்தானே கிடக்கிறது.
கந்தகம்தான் மணக்கவில்லையென்பாய்
வன்புணர்ச்சி தொடர்கிறதே
தனக்கானதை தான் தெரிதலே சுதந்திரம்
உனக்கான சின்னத்தில் போட்டியிடவே உரிமையில்லை
இணங்கிப்போய் என்ன காணப்போகிறாய்
பறந்து திரிந்தே பாதியுயிர்போன நோர்வே சொல்கிறது
புலம்பெயர் தமிழர் போராடுகவென்று
அதுவும் அமைதிவழியென்றும் சொல்கிறார்கள்
அவர்களுக்கோ சோறு உண்ட ஏவறை
எமக்கோ வயிற்றுக்கில்லாதவன் விடும் கொட்டாவி
வேலியடைக்க வந்தவனை வீட்டுக்குள் படுக்கவிட்டு
திண்ணையில் படுத்திருக்கிறோம் நாம்
செம்மண் பரப்பெல்லாம் பலாக்காய் சாகுபடி
கரிசல் பூமியதில் மரவெள்ளிசெடி வைக்க மழை பார்த்து நாம்
முப்பாட்டன் வாழ்ந்த மண்ணில் நம்மை
வேரோடு பிடுங்கி வந்து
வேறோரிடத்தில் பதியன் வைக்கிறானாம்
படலை திறந்து வந்தவர்கள்
உடலைக்கிடத்தி உள்ளே படுத்திருக்க
வாசலில் நாம் தட்டேந்தியபடி
வாழ்வின் அத்தனையையும் போருக்களித்துவிட்டு
ஓரினம் தாழ்வின் படுக்கையிலே
தலைசாய்த்துப் படுத்திருக்கு
தூக்கி நிறுத்துதற்கும்
துவண்ட மனம் ஆற்றிடவும் யாருமில்லை எங்களுக்கு
வீழ்ந்ததற்கு வியாக்கியானம் சொல்லி
வீண் பொழுது போக்கி நின்றோமென்றால்
எழாதது ஏனென்று எம் சந்ததி கேட்கும்
என் சொல்வோம் நாம்….?
ச.நித்தியானந்தன்-யாழ். பல்கலைக்கழகம்