Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீண்டும் மகிந்த ராஜபக்ச களத்தில்

Mahinda-Rajapaksaஇலங்கையில் மீண்டும் அரசியல் குத்துவெட்டுக்கள் ஆரம்பித்துள்ளன. ராஜபக்ச சர்வாதிகாரத்திலிருந்து மைத்திரி-ரனில் குழுவால் முழுமையாக விடுபட இயலவில்லை. தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் ராஜபக்சவிற்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளின் ஆதரவு காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்ச தனது புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். முதலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே என ராஜபக்ச கூறியுள்ளார்.

கட்சியின் மத்திய குழுவில் ராஜபக்சவிற்கே அதிகபடியான ஆதரவு காணப்படுகின்றது. அதனால் கட்சியின் மத்திய குழுவிற்கே தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு.

கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் ஒருவரே கட்சியின் தலைவாராவர் என்பதால் மைத்திரிபாலவே தலைவர் என அவரது அணியினர் வாதிடுகின்றனர்.

மைத்திரிபால சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியிலிருந்து தெரிவான ஜனாதிபதியாக அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மகிந்த அணி வாதிடுகிறது.

இதனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுற்றுள்ளது. பெரும்பான்மை மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக உள்ளது.

சட்டரீதியாகவும் பெரும்பான்மை அடிப்படையிலும் கட்சியின் தலைவராக மகிந்தவே நீடிக்கும் நிலை காணப்படுகிறது.

மேலும், பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவிற்கே அதிகபடியான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ரனில் பிரதமர் என்ற முடிவு செல்லுபடியற்றது என மகிந்த ஆதரவுக் குழுக்கள் வாதிடுகின்றன.

மகிந்தவின் நண்பரான இலங்கையின் பிரதம நீதியரசர் மகிந்தவிற்கே ஆதரவான உள்ள நிலையில் சிக்கல்கள் மேலும் அதிகமாகியுள்ளன.

மகிந்தவின் நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னை நாள் பிரபல நடிகை மாலினி பொன்சேகாவைப் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு மகிந்த பாராளுமன்ற உறுப்பினராகிப் பிரதமராகும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்தவின் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.

மகிந்த பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால் அவரே பிரதமராகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதே வேளை கோட்டாபய ராஜபக்சவையும் பாராளுமன்றத்தில் அனுமதிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற செய்திகள் வெளியாகின.

இராணுவம் மற்றும் உளவுத் துறை போன்றவற்றில் மகிந்தவிற்குக் கணிசமான செல்வாக்குக் காணப்படுவதால் பாராளுமன்றத்தை மீட்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி விலகினாலோ அன்றி, மரணமடைந்தாலோ பிரதமரே ஜனாதிபதியாவார்.

இவ்வாறான சூழலில் உடனடியாக மகிந்தவை அரசியல் உரிமைகள் அற்றவராக்கும் முயற்சிகளில் மைத்திரிபால குழு ஈடுபட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான வேளையில் மகிந்த இராணுவச் சதிப்புரட்சி மேற்கொள்ள முயற்சித்தார் எனக் குற்றம்சுமத்தி அவரின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்கு மைத்திரி அணியினர் முயற்சிக்கின்றனர்.

அதே வேளை பிரதம நீதிபதியை தெரிந்தெடுத்த முறைமை தவறானது என்ற அடிப்படையில் அவரைப் பதவி நீக்கி முன்னை நாள் நீதிபதியான சிராணி பண்டாரநாயக்கவைப் பதவியில் அமர்த்தத் திட்டமிடுகின்றனர்.

ஆக, இலங்கையின் உள்ளூர் அரசியல் அதிகாரக் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளன. அதேவேளை ராஜபக்ச அருவருப்பான இனவாதக் கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். தேர்தலில் தானே வெற்றிபெற்றதாகவும் மைத்திரியின் வெற்றி தமிழர்களின் வெற்றி எனவும், பிரபாகரனின் கனவை மைத்திரி நனவாக்க முயற்சிக்கிறார் எனவும் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். தான் வெற்றிபெற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

தவிர, மகிந்த ஊழல்கள் இன்றித் தேர்தலை நடத்தினார் என்றும் ஆபத்துக்கள் இருந்தும் நியாயமாகப் பதவி விலகினார் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Sri Lanka to investigate alleged coup attempt by former president
Exit mobile version