பதவியை ராஜினாமா செய்வது பற்றிய கேள்விகளுக்கு மாவோயிஸ்டுகள் வெளியிடும் ஆடியோ சி.டியில் பதில் கிடைக்கும் என்று ஒடிசா எம்.எல்.ஏ ஜினா ஹிகாகா கூறினார். ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் பிடியில் ஒரு மாதமாக பணய கைதியாக இருந்த பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ ஜினா ஹிகாகா கடந்த 24ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது, 15 நாளில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்திருந்தனர். மாவோயிஸ்ட் நிபந்தனைபடி ராஜினாமா செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்ட போதெல்லாம் பதிலளிக்காமல் ஜினா ஹிகாகா மழுப்பி வந்தார். இந்த நிலையில், நேற்று கேராபுட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்த ஜினா ஹிகாகா கூறியதாவது:
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக மாவோயிஸ்டுகள் விரைவில் ஆடியோ சி.டி ஒன்றை வெளியிடுவார்கள். அதில், ராஜினாமா தொடர்பான குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். எல்லா விஷயமும் சி.டி வெளியானதும் தெளிவாகிவிடும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். விரைவில், தலைநகர் புவனேஸ்வருக்கு செல்ல உள்ளேன். அங்கு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்பேன். இவ்வாறு ஜினா ஹிகாகா கூறினார்.