இனிமேல் அதி தீவிரமாக அகிம்சை போராட்டம் நடத்தப் போகினமாம். அட சர்வதேசம் அங்கீகரித்தால் ஏன் இனி அகிம்சையும் அக்கப்போரும்? சாய்மனைக் கதிரையில காலை நீட்டிக்கொண்டு சம்பந்தன் ஐயாவிட்ட நாலு விஸ்கிப் போத்தில் அரை விலையில வாங்கி கம்மெண்டு அடிச்சுட்டுப் படுக்கலாமே?
அந்தக் காலத்தில் இந்தியாவில காந்தித் தாத்தா பிரிட்டிஷ் பீரங்கிக்கு எதிராக சாப்பிடாமக் கொள்ளாமல் இருந்த பாவத்துகிரங்கி இந்தியாவை விட்டு இங்கிலீசுக் காரன் ஓடிப் போட்டான் என்று பில்டப் கொடுத்ததை இன்னும் நம்பிறதுக்கு அப்பாவிச் சனம் தயாரா இருக்கேக்க மாவைக்கும் சம்பந்தனுக்கும் வியாபாரப் பெரு வெளி உண்டு. பைரட்பி, ஜூலியன் அசாஞ்ச், எட்வார்ட் ஸ்னோடென் என்று கூட்டம் கூட்டமா வந்து சொன்னாலும் காந்தியின்ர அகிம்சையையும் சத்திய சோதனையையும் அமெரிக்கனையும் நம்பும் அப்பாவிகள் தமிழரசுக் கட்சிக்கு ஜால்ரா அடிப்பார்கள் என்பது சேனாதிராசாவின் கனா.
1915 பிரிட்டிஷ் காரன் கணக்குப்பார்த்து தென்னாபிரிக்காவிலிருந்து இந்துத்துவா காந்தியை இந்தியாவிற்கு அனுப்பி ஆடையில்லா அரசனாகிப்போட்டு திரும்பிப் போனவங்கள். இப்ப இந்தியன் மாவையை அனுப்பி அகிம்சைக் கூத்தை ஆரம்பித்திருக்கிறார். நாலு முழ வேட்டியை மடிச்சுக் கட்டினா மாவை ஈழத்துக் காந்தியாக எந்தத் தடையும் கிடையாது.
இன்னும் பாக்குவெட்டியோடும் கடகத்தோடும் மக்களை அலைய விட்டுட்டு அவையள் நாடு நாடா அரசியல் ரூரிஸ்ட்டாகப் போகட்டும். மாவை, சம்பந்தன் குழுமத்திற்காகவே இலங்கை உல்லாசப் பயணத்துறை விரிவுபடுத்தப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.
பிரித்தானியாவிலிருந்து கவனமாப் படிச்சு டாக்குதரும் எக்கவுன்டனுமான தமிழ் உணர்வாளர் வாள்கள், மாவைக்கு முதலே கூட்டம் போட்டவை. பெற்றோல் இருந்தால் தான் அமெரிக்கன் வந்து தமிழீழம் பிடிச்சுத்தருவான் என்று கணக்குப் போட்டு யாழ்ப்பாணத்துக்கு ஆளனுப்பி, பங்கொட்டேக்க பெற்றோல் இருக்கா என்று கிலுக்கிப் பார்த்தவை.
இப்ப தமிழரசுக் கட்சியை இந்தியனும் மகிந்தவும் வைச்சுக் கிலுக்கிப் பார்க்க மாவை வார்த்தைகளை உதிர்த்து அரசியலை அழுக்குப்படுத்துகிறார்.
புலம் பெயர் அரசியல் விஞ்ஞானிகள் சங்கத்தினரும் அவர்களின் இணையத் தொங்கு தளங்களும் மாவையை மாவாக அரைக்க ஆரம்பிச்சிருக்கினம். என்னென்டாலும் மாவை பிழை விட்டுட்டார். குறைஞ்சப்ட்சம் ஓப் த ரெக்கோட்டில் ஆவது தேசியத் தலைவர் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் புலம் பெயர் அரசியல் விஞ்ஞானிகள் சங்கம் மாவையை மாமனிதர் ஆக்கியிருப்பார்கள். ஒபாமாவோடும், கமரூன் உடனும் பேசி மாவையின் அகிம்சைப் போராட்டங்களை அங்கீகரித்திருப்பார்கள்.