Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டுமா?: வியார்

இலங்கையின் வடகிழக்குத் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான போராட்டம் – புலிகளினால் தலைமை தாங்கி நடத்தப்பட்டு வரும் போராட்டம் – இன்று மாற்றமொன்றை எதிர்நோக்கும் முனைப்பானதொரு நிலையை அடைந்திருக்கிறது.

திட்டமிட்ட ராணுவத்தாக்குதல் உத்திமுறைகளைக் கையாண்டு அரச ராணுவத்தினை நிலை குலையச் செய்து இழப்புக்களையும், பின்வாங்குதல்களையும் ஏற்படுத்தும் புலிகளின் ராணுவத் தந்திரோபாய முறை, புலிகளின் முக்கிய தலைவர்களால் அரசுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசும் புலிகளின் இவ் இராணுவ உத்திமுறையை உணர்ந்து தனது யுத்தத்தினை வடிவமைத்து முன்னெடுத்துச் செல்கிறது: முன்னேறிவருகிறது.

புலிகளின் தாக்குதலுக்கு ‘ஈடுகொடுத்து நின்று பிடித்து’ தாக்குதலை தொடுப்பதில் அரச ராணுவத்தின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது. அரச ராணுவத்தின் ‘ஈடுகொடுத்து நின்று பிடித்திருத்தல்’ என்பது சர்வதேச அழுத்தங்களையும் நாட்டின் பொருளாதார நிலையையும் ராணுவத்தினரின் இழப்புக்களை தாங்கிக் கொள்ளக் கூடிய அரசத்தலைவர்களின் சக்தியையும் பொறுத்திருக்கிறது. மற்றொரு புறம் ஊடகங்கள் மீதான அடக்கு முறையை தொடர்ந்து பேணிக்கொள்ளுதல் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமைந்திருக்கிறது. அரசு இவற்றில் பலவீனமான நிலையில் இருக்கின்ற போதும் தொடர்ந்து தனது நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது !

புலிகள், போராட்டத்தினை ‘மக்கள் போராட்டமாக’ மாற்றியமைப்பதை விடுத்து, தொடர்ந்தும் தமது தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமது இராணுவ உத்திகளை மாற்றியமைத்து தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவார்கள் என்றே நம்பப்படுகிறது. தாக்குதலை தொடுத்து ராணுவத்தினை நிலை குலையச் செய்வார்கள்;, யுத்த நிறுத்தம் ஒன்றின் மூலம் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வார்கள் அல்லது நிலங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் கொரில்லா பாணியிலான தாக்குதல் நிலைக்குச் செல்வார்கள் எனவும் நம்பப்படுகிறது.

அரசு, புலிகளை அழித்து அவர்களிடமிருந்த ‘அதிகாரப் பகுதிகளை’ கைப்பற்றுதல் என்ற இலக்கிற்கு அப்பால் இனவிடுதலைக்கான போராட்டம் அது எந்த வடிவிலாவது முன்னெடுக்கப்படுதலை அழித்து விடும் வகையில் நீண்ட கால நோக்கிலான இலக்கில் செயற்பட்டு வருகிறது.

புலிகள் ‘அழிக்கப்பட்டு வருகிறார்கள்’ என்ற நிலையில் இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் பால் கவனம் திருப்பப்பட்டுள்ளது. அக்குழுக்கள் ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காணப்படுகிறது.

தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தில்; இளைஞர் ஆயுதக் குழுக்கள் (இயக்கங்கள்) தலைமையேற்ற காலத்தின் பின், அவர்களில் பலர் தங்களை ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காட்டத் தலைப்பட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர்களுடைய ‘முற்போக்குத் தன்மை’ அம்பலப்பட்டு விட்டதைக் காண்கிறோம்.

1985 களின் (?) பின் இளைஞர் ஆயுதக் குழுக்களில் இருந்து, தமது தலைமைகளின் அராஜகப் போக்குகளுடன் முரண்பட்டுக் கொண்டு நின்ற குழுக்களின் தோற்றத்தைக் காணமுடிந்தது. முக்கிய இயக்கங்களில் ஈரோஸ் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கங்களில் இருந்து இவ்வாறான குழுக்கள் தோன்றின. தீப்பொறிக் குழு ஒரு மாற்று இயக்கமாக வளரவும் முற்பட்டார்கள். மாற்று அமைப்பை ஏற்படுத்திப் போராடும் பணியில் சிலர் ஈடுபட்டனர். சிலர் குழுநிலையில் விவாதங்களை மேற்கொண்டு வந்தார்கள். சிலர் வேறு நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இயங்கினார்கள். சிறிய சில இயக்கங்கள் தொடர்ந்தும் தம்மை ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காட்ட முற்பட்டார்கள். இவர்களை இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் என நாம் கருதுகிற போது முக்கியமான சில வினாக்கள் முன்னெழுகிறது.

இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ இன விடுதலைப் போராட்டத்தில் பெற்ற, பெற்றிருக்கிற முக்கியத்துவம் யாது? ஓன்றுமில்லாமல் செயலிழந்து போனமையே வெளிப்படையானதும் பொதுவானதுமான அம்சமாகும்.
இதன் பின் மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதனை அல்லது வெளியேறியதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் வடகிழக்கிற்கு அப்பாலிருந்து மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ செயற்படலாயினர். மாற்றுக் குழு ஒன்றை அமைத்தல், மாற்று அரசியலுக்கான திறந்த அரசியல் விவாத அரங்கை ஏற்படுத்தல் என்ற வகையில் இவர்கள் செயற்பாடு தொடர்ந்தது. ஆயினும் இன்று வரை – இருபது வருட காலத்திற்கு மேலான காலமொன்றில் – ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன? என்ற வினா முன்னெழுகிறது. காத்திரமான விடயம் எனக் குறிப்பிடத்தக்கவை ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா?

இவ்வாறானதொரு பின்னணியில் நின்றே மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

எனப் பல்வேறு விடயங்களை விவாதிக்க வேண்டிய ஒரு நிலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இத்தகைய விவாதங்களை 1985 களிலிருந்து கேட்டு வருகிறோம். எனவேதான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டிய பூச்சிய நிலையிக்கு வந்திருப்பாதாக உணர்கிறேன்

அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் அதிகாரப்பிடிக்குளிருந்து – இலங்கையிலிருந்து இக்கட்டுரையை இனியொருவிற்காக அனுப்பிவைத்த வீ.ஆர் அவர்களுக்கு எமது நன்றிகள்.

Exit mobile version