கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் பகுதி நேரமாக நடந்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வேதியல் வகுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் அமிலங்களை மாணவிகளை வைத்தே சுத்தம் செய்யச் சொன்னதால் அம்மாணவிகள் மீது அமிலம் கொட்டி கவலைக்கிடமான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக அப்பள்ளியின் இடம் எடுக்கப்படுகிறது. இதற்காக சில அறைகள் காலி பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அதில் வேதியியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் அமிலங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையும் ஒன்று. அந்த அறையை ஆசிரியர்கள் சுத்தம் செய்யாமல் பள்ளியில் படிக்கும் பெண் மாணவிகளை அமில அறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.
கடந்த 13/09/2021 காலை 9 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 1.பாமா 2.நித்தியா 3.ஜனனி 4.ஆதித்யா ஆகிய 4 மாணவிகளை அவசர அவசரமாக பொருட்களை அகற்ற கூறியுள்ளனர். வேதியியல் பொருட்கள் பற்றி சிறிதும் அறியாத மாணவிகளின் மீது பழுதடைந்த வேதியியல் அமிலம் பட்டு அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாமா என்ற மாணவிக்கு முகம் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.மீதமுள்ள 3 மாணவிகள் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசியர்களுக்கு அமில அறையைச் சுத்தம் செய்யும் பணி எத்தனை ஆபத்தானது என்பது தெரியாதா இந்த வேலைக்கு எப்படி அரசுப்பள்ளி மாணவிகளை பயன்படுத்தலாம். தெரிந்தே குற்றம் இழைத்துள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.