Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகமும் நமது தாயகம் : குட்டி ரேவதி

தமிழ் மொழிப்பற்று என்பதை அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கான ஓர் விழைவாகவே பயன்படுத்துவதைத் தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்போருக்குப் புரியும். இன உணர்வும் அவ்வாறே. தமிழ் மொழியின் தொன்மை சார்ந்தும் அதன் நுட்பம் சார்ந்தும் மானுடம் பயனுற வேண்டியவை தமிழ் மொழியினிடத்து நிறைய உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் தமிழ் மொழியை விதந்தோதும் மேடைத் தொனியுடனேயே முடிந்து போகிறது. அதற்கு மேல் அதை வளர்த்தெடுக்கவும் இனத்துக்கான ஒரு சமூகப் பயன்பாட்டு வழியாகவும் மாற்றத் தெரியாத சமூகமாகவும் தமிழ்ச் சமூகம் விளங்கி வருவது வேதனைக்குரியது. மருத்துவம், தத்துவம், பண்பாடு எனப் பல துறைகளிலும் காலத்தினோடும் மனிதப் பரிணாமத்தோடும் தொடர்ந்து பயணப்பட்டோர் நம் மூதாதையர். ஆனால் அவை எல்லாம் இன்று அரசியல் தளங்களில் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.

மலையகத் தமிழர்களின் வரலாற்றை அலசுந்தோறும் தவறுகள் எல்லாம் தமிழனுடையவை என்றே தோன்றுகிறது. சிங்களவர்களோ ஆங்கிலேயர்களோ கையாண்ட அரசியல் நிதானங்களையும் ஒற்றுமையையும் நாம் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை. இலங்கையின் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற இன வேறுபாடு ஆங்கிலேயர்கள் நுழைந்த பதினெட்டாம் நூற்றாண்டில் கூட தெள்ளத் தெளிவாக இருந்தது. இரு இனங்களுக்கும் இடையே பெரிய அளவில் பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லையெனினும் அவர்கள் தனித்தனியே தமது நிர்வாகங்களைக் கவனித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் தாங்கள் கைப்பற்றிய மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் பெரிய அளவில் பொருளாதாரத்தைத் திரட்ட விரும்பிய போது மண்ணில், மலையில் நின்று உழைப்பவர்களாக இந்த இரு இனத்தினருமே அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. காரணம் சிங்களவர்கள் உழைப்பையே அறியாதவர்களாக இருந்தனர்; தமிழர்கள் நில உடைமையாளர்களாக இருந்தனர். இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயர் கைவசமே இருந்ததாலும், 1800களில் தமிழகத்தில் கடுமையான பஞ்சம் நிலவி வந்ததாலும் தமிழகத்திலிருந்து கூலிகளாக மக்களை அழைத்துச் சென்று பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. சிங்களவர்களும் தமிழர்களும் இந்த விஷயத்தில் ஆங்கிலேயர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும். ஆங்கிலேயர்களின் எல்லாத் துறைகளிலும் முக்கியமான பொறுப்புகளை ஏற்பதில் கவனமாக இருந்த சிங்களர்களும் ஆதிக்கச் சாதித் தமிழர்களும் ஆங்கிலேயர்கள் தமது அரசியல் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் உணரவில்லை.

இந்தியாவில் போலவே, சிறு வணிகர்களாக வந்த பிரிட்டானியர்கள் இலங்கையினையும் தமது நிர்வாக வசதிகளுக்காக ஒற்றைப் புவியியல் பரப்பாக மாற்றிக்கொண்டனர். இலங்கையில் ஆங்கிலேயர்கள் கரையோரங்களோடு மலையகத்தையும் கைப்பற்றிய பின்பு தான் இலங்கையை ஐந்து மாகாணங்களாகப் பிரித்தனர். இத்தகைய அரசியல் வரைபடம் தான் இன்றும் நிறைய கொடுங்கோன்மைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே இலங்கையில் நிலவி வந்த பண்பாட்டு அரசியல் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை. சிங்களவர் ஆண்ட பகுதிகளும் தமிழர்கள் ஆண்ட பகுதிகளும் தனித்தனியே இருந்தாலும் அவர்களுக்கிடையே அவர்கள் ஆட்சி குறித்த சில ஒப்பந்தங்களும், உறவு பேணல்களும் இருந்தமை ஆங்கிலேய ஆதிக்கத்தால் குலைந்து போயின.

அப்பொழுது எழுந்த அரசியல் சிக்கல்களும் குழப்பங்களும் இன்றும் நேர்செய்ய முடியாதனவாக இருக்கின்றன. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகள் எல்லா அரசியல் தளங்களிலும் புறந்தள்ளப் பட்டவையாகவே இருந்து வருவதை நாம் புரிந்துகொள்வது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றே எண்னுகிறேன். அவர்களின் நிலைமை அகதிகளை விட மோசமாகவும் காலங்காலமாய் உழைப்பை மட்டுமே அவர்கள் வாழ்க்கையிலிருந்து உறிஞ்சிக் கொள்ளக்கூடியதாகவுமே இருக்கின்றது. இந்த அவல நிலையைப் புரிந்து கொள்வதே, நிறைய வகைகளில் ஓர் ஒருமித்த விடுதலைக்கான சாத்தியத்தை ஏற்படுத்துவதற்குப் போதுமானது என்று எண்ணலாம்.

130 ஆண்டுகளாக அதாவது 1796 முதல் 1930 வரையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து பெண்களையும் ஆண்களையும் அற்றைக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் சென்றிருக்கின்றனர் ஆங்கிலேயர். கிட்டத்தட்ட பத்து இலட்சத்திற்கும் மேலானோர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மூன்று இலட்சம் பேர் பயணத்திலேயே இறந்தனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பொதுவாகவே ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். அதாவது அவர்கள் எல்லோருமே சமூகத்தின் சாதிப் படி நிலையில் கீழ் நிலையைச் சேர்ந்த சாதியினர். பறையர், பள்ளர், மீனவர், முக்குவர், முக்குலத்தோர், நாடார், சாணார், வன்னியர், நத்தமர், மருத்துவர் போன்ற அன்றும் நிலவி வந்த சாதி அதிகாரத்தால் சமூக அழுத்தத்திற்கு உள்ளானோர். தமிழகத்தில் அவர்கள் வாழ்க்கையைத் தொடர்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்கள் தாம் இன்றும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மண்ணையும் பொருளாதாரத்தையும் திருத்த, வளம் பெருக்க கடுமையான உழைப்பை மேற்கொண்ட மக்கள் இன்றும் அந்த மண்ணில் உரிமையற்றவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்ததால் தாம் அற்றைக்கூலிகளாக மாறினர். இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கச் சாதியினராக இருந்ததால் தான் மலையகத்தினரின் குடியுரிமை என்பது ஒரு பெருத்த அரசியலாக உருவெடுக்கவே இல்லை. இம்மலையகத்தினர் ஆதிக்கச் சமூகத்தினராக இருந்திருந்தால் இத்தகைய அற்றைக்கூலிகளாகவோ குடியுரிமை அற்றவர்களாகவோ வாழும் நிலை எழுந்திருக்காது.

இன்றைய இலங்கைத் தமிழர்கள் மக்கள் தொகை, சிங்களவரின் மக்கள் தொகைக்கு இணையானது. அதாவது 75 இலட்சம் தமிழ் மக்கள். இதில் மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேர். தமிழ் முஸ்லீம்கள் 15 இலட்சம் பேர். இந்நிலையில் தமிழினப் போராட்டம் என்பது மலையகத்தமிழரின் பங்கெடுப்பையும் தமிழ் முஸ்லீம்களின் பங்கெடுப்பையும் கருத்தில் கொள்ளாது வீர்யம் பெற முடியாது. இன்றைய நாளில் ஈழப் போராட்டம் என்பது உலக அளவில் பேசப்படும் ஓர் அரசியல் பொருளாய் மாறியிருப்பதற்குக் காரணம் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் இனத்தவர், தமிழர் என்னும் இன உணர்வால் பிணைக்கப் பட்டிருப்பதும் அதை அன்றாடப் பேசு பொருளாய் தம் வாழ்வில் மாற்றியிருப்பதும் தாம். வேறு வேறு தேசத்தவராக நாம் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வது இல்லை. அதே போல அந்நிலத்திலேயே அம்மண்ணின் எருவாகிப்போன மலையகத் தமிழரை அடையாளப் படுத்தப் போராடுவதும், அவர்களின் குடியுரிமை மற்றும் சமூக, அரசியல் உரிமைகளையும் நமது போராட்டத்தின் இலக்குகளாக இணைத்துக் கொள்வதும் மிக அவசியமாகும்.

இன்றும் காலனியாதிக்கத்தைக் காரணம் காட்டுவது பழைய அரசியல் பாணி என்றே தோன்றுகிறது. அதற்குப் பின்பு தமிழகத்தில் தோன்றிய தமிழ்த் தலைவர்களும் தமிழர் இயக்கங்களும், தமிழீழத்தில் தமிழர்களிடையே தோன்றிய தலைமைகளும் இயக்கங்களும் செய்த பிழைகள் ஏராளம் ஏராளம். காலந்தோறும் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழினத்தை அழிப்போருக்கே துணை போவோராக இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்க நேர்வதற்குக் காரணமும் நமது அரசியல் மடமையே. அரசியல் விழிப்புணர்வு என்பது எல்லா வகைகளிலும் நிகழ வேண்டும். என்றோ யாரோ செய்திட்ட அரசியல் தவறுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது என்று நாம் வாளாயிருந்து விட முடியாது. வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை, சில ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்து விட முடியும். மொழி, பண்பாடு, வரலாறு, பொருளாதாரம் என எல்லா துறைகளிலும் வல்லமை மிக்கவர்களாகவும் ஒருங்கிணைந்தவர்களாகவும் தமிழர்கள் மாறுவதும் அவசியமாகும். நமது பழைய வரலாறு நீளமானதாகவும் புகழ் மிக்கதாகவும் இருக்கலாம். ஆனால் எதிர்கால வரலாற்றுக்கு நாம் கடினமாகப் போராட வேண்டியிருக்கிறது.

Exit mobile version